நாட்டில் சிங்கள – முஸ்லிம் மக்களிடையே இனக்குரோதத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் அமைச்சர் ரவூப் ஹக்கீமும் முன்னெடுத்து வருவதாக ஐ.தே.கட்சி பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக் ஷ நேற்று சபையில் குற்றம் சாட்டினார்.
இந்தியாவில் நீதித்துறை சுயாதீனமாக இயங்குகின்றது. அந்நிலை இங்கு உருவாவதன் மூலமே சட்டத்தையும் ஒழுங்கையும் நாட்டில் நிலை நிறுத்த முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வரவு செலவுத்திட்டம் மீதான சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பான குழுநிலை விவாதத்தை எதிர்க்கட்சி தரப்பில் ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே விஜேதாச ராஜபக் ஷ எம்.பி. இவ்வாறு தெரிவித்தார்.
சபையில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
அன்று நாட்டில் தமிழ் - சிங்கள இனங்களிடையே குரோதங்களை ஏற்படுத்தி பாரிய அழிவுகளுக்கு வித்திட்ட அமிர்தலிங்கம் யோகேஸ்வரன் போன்று இன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் ரவூப் ஹக்கீமும் சிங்கள - முஸ்லிம் மக்களிடையே குரோதங்களையும் மோதல்களையும் ஏற்படுத்த முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்.
அம்பாறையில் தனியான கரையோர முஸ்லிம் பிரிவு தேவையென ஹக்கீம் கோரியுள்ளார்.
இந்நிலைமை சிங்களவர்கள் மத்தியிலும் உருவானால் என்ன நடக்கும் ? அம்பாறையில் முஸ்லிம்களுக்கு தனி நிர்வாக மாவட்டம் தேவையென கோரப்படுகிறது. இதேபோன்று தெற்கில் கிழக்கில் சிங்களவர்களும் ஏனைய இனத்தோரும் தனித்தனி நிர்வாக மாவட்டங்களை கோரி
னால் நாட்டின் நிலை என்னவாகும் ?
பிரபாகரனைப் போன்று ஹக்கீமும் இன்று முஸ்லிம் தனி நிர்வாகத்தை கேட்கின்றார். இதன் மூலம் சிங்களவர்கள் முஸ்லிம்களிடையே குரோதத்தையும் மோதல்களையும் ஏற்படுத்த முயற்சிக்கின்றார்.
முஸ்லிம் காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் தான் இரு இனங்களிடையேயும் குரோதம் தலை தூக்குகின்றது.
முஸ்லிம்களுக்கு எதிராக பொதுபலசேனா நடவடிக்கைகளை மேற்கொள்வதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்த போது நாமும் முஸ்லிம்களுக்காக குரல் கொடுத்தோம்.
ஆனால் இன்று ஹக்கீம் என்ன செய்கின்றார் ? இரு இனங்களிடையே மோதல்களை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றார்.
வட மாகாணத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதால் அதிவேக பாதைகளை அமைப்பதால் வடக்கின் பிரச்சினையை தீர்க்க முடியுமென நினைத்து அரசு செயற்பாடுகளை முன்னெடுக்கின்றது.ஆனால் இந்த நடவடிக்கைகளால் மட்டும் வடக்கின் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது.
மாறாக தமிழ் மக்களின் மனங்களை வெற்றி கொள்வதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.
இதன் மூலமே வடக்கின் பிரச்சினையை தீர்க்க முடியும். காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை ஆரம்பித்து அங்கு தொழிற்சாலைகளை ஆரம்பிக்க வேண்டும் மக்களுக்கு தொழில்களை வழங்க வேண்டும்.
இவ்வாறான செயற்பாடுகள் மூலமே மக்களின் நம்பிக்கையை பெற முடியும். ஆனால் காங்கேசன்துறையில் தொழிற்துறையை ஆரம்பிப்பதை விடுத்து அங்கு இராணுவத்தினர் நிலை நிறுத்தப்பட்டுள்ளனர். வடக்கில் மட்டுமல்ல தெற்கில் இவ்வாறான நிலை தலைதூக்கி வருகின்றது. செவனகலவில் பாதுகாப்பு பயிற்சி நிறுவகம் ஒன்று அமைக்கப்பட்டு வருகின்றது. மொரகம பிரதேசத்திலேயே இது அமைக்கப்பட்டு வருகிறது. இதனால் அப்பிரதேச மக்கள் பாரிய நெருக்கடிகளை சந்தித்துள்ளனர் என்றார்.
இது தொடர்பாக அப்பிரதேச மக்கள் எம்மிடம் முறைப்பாடுகளை முன் வைத்துள்ளனர். தற்போது அங்கு சிறு சிறு சம்பவங்கள் தலைதூக்கியுள்ளன. எதிர்காலத்தில் இவை பாரதூரமான பிரச்சினைகளாக தலைதூக்கும். பின்னர் கிளர்ச்சிகளாக மாறும். எமது வரலாற்றில் அனுபவம் பெற்றுள்ளோம்.
இன்று தமிழ் நாட்டின் முதலமைச்சரான ஜெயலலிதாவுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு தண்டனையும் விதிக்கப்பட்டது.
அதேபோன்று வெளிநாடுகளில் கறுப்பு பணம் வைத்திருக்கும் இந்தியர்களின் பெயர்களை அந்நாட்டு அரசு நீதிமன்றத்திற்கு கையளிக்கவில்லை. இன்று என்ன நடந்துள்ளது? அப்பெயர் பட்டியலை உடனடியாக கையளிக்குமாறு இந்திய உயர்நீதிமன்றம் அந்நாட்டு அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
அரசும் அதனை ஏற்றுக்கொண்டுள்ளது. அந்தளவிற்கு இந்தியாவின் நீதித்துறை சுயாதீனமாக செயற்படுகின்றது.
இவ்வாறான நிலைமை எமது நாட்டிலும் உருவாக வேண்டுமென்பதே எமது மக்களினதும் எதிர்பார்ப்பாகவுள்ளன.
மக்கள் மட்டுமல்ல ஆட்சியாளர்களும் சட்டத்திற்கு கட்டுப்பட்டவர்கள். அவ்வாறானதொரு நிலைமை உருவாகும் போதுதான் நாட்டில் சட்டம், ஒழுங்கு பாதுகாக்கப்படும் என்று விஜேதாச ராஜபக் ஷ எம்.பி. தெரிவித்தார்.
.jpg)
0 comments :
Post a Comment