ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்பதாக புதியதொரு ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான அறிவிப்பை விடுக்கும் அதிகாரம் தற்போது பதவியிலுள்ள ஜனாதிபதிக்கு உள்ளது. ஆனால் தேர்தலுக்கான திகதியை நிர்ணயிக்கும் அதிகாரம் தேர்தல்கள் ஆணையாளருக்கே உள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
நாட்டில் இன்று அனைத்து அதிகாரங்களையும் நிறைவேற்று அதிகாரம் பறித்துக் கொண்டு பாராளுமன்றம், நீதித்துறை அமைச்சரவையை வலுவிழக்கச் செய்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் குற்றம் சாட்டினார்.
பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற வரவு–செலவுத் திட்டத்தின் குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் சபையில் தொடர்ந்து உரையாற்றுகையில்,
தற்போது பதவியிலுள்ள ஜனாதிபதிக்கு தனது பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்பு ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான அறிவிப்பை வெளியிட முடியும்.
அந்த அதிகாரம் பதவியிலுள்ள ஜனாதிபதிக்கு உள்ளது. மக்கள் ஆணையைக் கோருவதற்கு எந்தவிதமான தடையும் இல்லை. ஆனால், தேர்தலுக்கான திகதியை நிர்ணயிக்கும் அதிகாரம் தேர்தல்கள் ஆணையாளருக்கே உள்ளது. இது அரசியலமைப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் இன்று மக்களின் இறையாண்மை மீறப்பட்டுள்ளது. அனைத்து அதிகாரங்களையும் நிறைவேற்று அதிகாரம் பறித்துக் கொண்டுள்ளது. நீதித்துறைஇ பாராளுமன்றம்இ அமைச்சரவை அதிகாரங்கள் அனைத்தும் நிறைவேற்று அதிகாரத்தால் கைப்பற்றப்பட்டுள்ள நிலையிலேயே இன்றைய ஜனாதிபதிக்கான நிதியொதுக்கீடு குழுநிலை விவாதம் நடைபெறுகிறது.
கடந்த காலங்களிலும் வரவு–செலவுத் திட்டம் மீதான விவாதத்திற்கு போதுமான நாட்கள் ஒதுக்கப்படவில்லை. இவ் வருடமும் அதே நிலைமை தான் உருவாகியுள்ளது. வரவு–செலவுத் திட்டம் என்பது நாட்டின் நிதி நிர்வாகத்தில் முக்கியமானதாகும். நிதி நிர்வாகம் பாராளுமன்றத்தின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். ஆனால் இன்று நிதி நிர்வாகம் பாராளுமன்றத்திடமிருந்து கை நழுவிப் போயுள்ளது.
1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பின் மூலம் மக்களின் இறையாண்மை வாக்குரிமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் தமது வாக்குகளை பயன்படுத்தி நிறைவேற்று அதிகாரத்தைத் தெரிவுசெய்ய முடியும். வாக்குப்பலம் மக்களுடையது. அதற்கமைய தேர்தல்கள் ஆணையாளரால் தேர்தலை நடத்த முடியும். அதற்கான சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஆனால்,இன்று தேர்தல் தினத்தை நடத்துவது தொடர்பில் சோதிடர்களின் கணிப்புக்களை அடிப்படையாக வைத்து தீர்மானிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது மட்டுமன்றி ஜனாதிபதிஇ பிரதமர் போன்றோர்களுடன் தேர்தல் தினம் தொடர்பாக பேச்சு நடத்தவேண்டிய நிலை தேர்தல்கள் ஆணையாளருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால்,அரசியலமைப்பில் உள்ள தேர்தல்கள் ஆணையாளரின் அதிகாரங்களை பாதுகாக்க முடியாமல் உள்ளது.
அதனை பாதுகாக்க தேர்தல்கள் ஆணையாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல்களை நடத்துவதற்கு பொலிஸாரின் ஒத்துழைப்பு தேர்தல்கள் ஆணையாளருக்கு தேவை. ஆனால் இன்று பொலிஸ் உயரதிகாரிகள் அரச ஊழியர்களை அழைத்து அலரிமாளிகையில் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. அரசாங்கத்தை பாதுகாக்க வேண்டும். தேர்தலுக்கு ஒத்துழைக்க வேண்டுமென அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகின்றன.
பொலிஸாரும் அரச ஊழியர்களும் அரசாங்கத்தைப் பாதுகாக்கும் கடப்பாடுடையவர்கள் அல்ல. அவர்கள் இலங்கை குடியரசை பாதுகாக்கும் கடப்பாடுடையவர்கள். ஆனால், அரச ஊழியர்கள் தேர்தலுக்காக வேலைசெய்வதற்கு வற்புறுத்தப்படுகின்றார்கள். தேர்தலுக்கு முன்பதாகவே அனைத்தும் அரசியல் மயமாக்கப்பட்டு வருகின்றன.
தேர்தல் என்பது அரசியலமைப்பு ரீதியாக மக்களுக்கு வழங்கப்பட்ட உரிமையாகும். எனவே, தற்போதுள்ள ஜனாதிபதியை மீண்டும் ஜனாதிபதியாக்குவதா? அல்லது புதியவர் ஒருவரைத் தேர்ந்தெடுப்பதா என்பது தொடர்பில் தீர்மானிப்பது மக்களின் உரிமையாகும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
.jpg)
0 comments :
Post a Comment