கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை தவிசாளர் KBS. ஹமீட் அவர்களுக்கு பிரதேச சபை உறுப்பினர் SA. அன்வர் (Tr.) எழுதும் மனந்திறந்த மடல் ...
(இது விவாதத்திற்காகவன்றி புரிந்துகொள்வதற்காக)
30.10.2014 அன்றைய பொதுக்கூட்டத்தில் தங்களுக்கெதிரான பிரேரணை ஒன்றினை சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து எழுந்துள்ள சர்ச்சைகளுக்கு ஊடகங்களில் எழுந்துள்ள வாதப்பிரதிவாதங்களைப் படித்து அறிந்துகொண்டதிலிருந்து இந்தக்கடிதத்தினை எழுதவேண்டிய தேவை ஏற்பட்டது.
ஏனெனில் 2012ம் ஆண்டிலும், 2013ம் ஆண்டிலும் தங்களுக்கெதிரான வரவுசெலவுத்திட்ட மஸோதா ஒவ்வொரு முறை தேற்கடிக்கப்பட்டவை, தவிசாளருக்கும், உறுப்பினர்களுக்குமிடையில் கூட்டுப்பொறுப்பில் எழுந்த சர்ச்சைகள் தற்போதைய நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கான முன்னெடுப்பு போன்ற சகல விடயங்களிலும் என்னேயே காரணகர்த்தாவாக நீங்கள் காண்பதற்கு
• தேர்தல் கால முரண்பாடு
• பள்ளிவாயலில் நடைபெற்ற சத்தியம்
• சபையில் ஏற்படும் சில வாதப்பிரதிவாதங்கள்
• உறுப்பினர்கள் உங்களை விட்டுப் பிரிந்தமை
போன்ற காரணங்களே அடிப்படையாக அமைந்திருக்கும் என நான் உணர்ந்து கொள்கின்றேன்.
தேர்தல் காலம், அதனைத்தொடர்ந்த வெற்றி, தோல்வி என்பன இறைவன் தீர்மானிப்பது அதனை ஒரு முஸ்லிம் ஏற்றுக்கொள்வது உவப்பானது. நானும் அவ்விடயத்தில் அவ்வாறுதான். அந்தப்பகைமை தொடர்ந்திருந்தால் 2014 வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றுவதில் இறுதிக்கட்டத்தில் நான் செய்த உதவியை ஒரு சாமானிய மனிதனால் மறந்திருக்க வாய்ப்பில்லை.
மீராவோடை ஜூம்ஆ பள்ளிவாயலில் நடைபெற்ற சத்தியம் செய்தல் விடயத்தில் அதாவது தங்களுக்கெதிராக வெளியான துண்டுப்பிரசுரத்துக்கும் எனக்கும் இறைவன் மீது ஆணையாக எந்த சம்பந்தமும் இல்லை. நீங்கள் சந்தேகப்பட்டு மூவரை பொலிஸில், நீதிமன்றில், இணக்கசபையில் இறுதியாக பள்ளிவாயலில் அதுவும் வெள்ளிக்கிழமை சத்தியம் என்ற நிலைக்கு இட்டுச்சென்றெல்லாம் நீங்களாகத்தான் தேடிக்கொண்டது. குறைந்தபட்சம் இணக்கசபையில் முடிந்திருந்தால் உங்களுக்கு சிறந்ததாக அமைந்திருக்கும். 24.10.2014 அன்று இஷாத்தொழுகையின் பின் நீங்கள் மைக் பிடித்து குறிப்பிட்ட நீங்கள் சந்தேகப்பட்ட அந்த ஆசிரியரைச்சாடினீர்கள். அவரும் அவர் சார்பான நியாயங்களைக் கூறினார். அந்த விடயத்தில் ஏழுமாத காலம் இழுபடும் விடயம் இணக்க சபையின் முடிவிற்கேற்ப இரு சாராரும் சத்தியம் செய்து வீண் பிரச்சினைகள் இன்றி இவ்விடயத்தை முடித்துக்கொள்ளுமாறு நான் கேட்டுக்கொண்டேன். அதற்காக உங்கள் குடும்பத்தினர் என்னுடன் தகாத முறையில் நடந்துகொள்ள முயன்றது அழகான காரியமல்ல. ஒரு விடயத்தில் சந்தேகம் எழுந்தால் ஒருவர் இறைவன் மீது சத்தியமிட்டுக் கூறினால் அத்தோடு முடித்துக்கொள்வது ஒரு முஸ்லிமின் கடமை. அதைத்தான் நான் கூறினேன். அந்த விடயத்தை பிரதேச சபை விடயத்தோடு முடிச்சுப் போடவேண்டாம்.
நீங்கள் சொல்வதைப்போல் சகோதரர் சிஹாபுத்தீன் இருந்த இடத்திற்காக வந்தவர்தான் அன்வர் ஆசிரியர். அவர் சபைக்கு வந்த பின்புதான் இவ்வளவு பிரச்சினை என்று உங்கள் ஆதங்கத்தை வெளியிட்டிருக்கிறீர்கள். எனது பதவி ஒரு அமானிதம். உறுப்பினர்களுக்கென்று சிறப்புரிமை உள்ளது போன்ற சில விடயங்கள் எங்களுக்கிடையில் கலந்துரையாடப்பட்டிருப்பினும் நான் சொல்வதைக் கேட்டுத்தான் அணிதிரண்டுள்ளார்கள் என்று கூறுவதுதான் சின்னப்பிள்ளைத்தனமானது. பிறராலும் ஏற்றுக்கொள்ள முடியாததும் ஒன்பது உறுப்பினர்களைக்கொண்ட சபையில் தன்னை விட்டு அனைவரையும் பிரித்துவிட்டார் என்றும் அவருடன் கைகோர்த்துள்ளார்கள் என்று ஒரு கடைநிலை உறுப்பினரைப்பார்த்து பழிசுமத்துவது வேடிக்கையானது மட்டுமல்ல மற்றைய கௌரவ உறுப்பினர்களை இழிவுபடுத்துவதுமாகும்.
உங்களோடு பல விடயங்களை உறுப்பினர்கள் கலந்துரையாடியுள்ளார்கள். அதில் அனைத்து உறுப்பினர்களது கௌரவத்தையும் பாதுகாக்குமாறு கூறினார்கள். ஆனால் நீங்கள் கணக்கில் எடுப்பதுமில்லை. மாறாக குறிப்பிட்ட கிராமசேவகர் பிரிவில் அவர்களின் கௌரவத்திற்கு உலைவைக்கும் வேலையைப் பார்த்தீர்கள். உறுப்பினர்களின் நல்லபிப்பிராயத்தை இழந்தீர்கள்.
தன்னாதிக்கத்தைத் தவிர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்கள். ஆனால் சபையில் உறுப்பினர்களால் ஆகும் வேலைகளில் அவர்களோடு சேர்ந்து செயற்பட்டுவிட்டு சபையில் நேரடி வேலை தவிர்ந்த அனைத்து வேலைத்திட்டங்களிலும் உங்களது வேலையைக் காட்டினீர்கள். அந்த நிலவரத்தினை அறிந்த உறுப்பினர்கள் உங்களைச் சாடினார்கள்.
2014 வரவு செலவுத் திட்டத்தில் கௌரவ. அஹமட் ஆசிரியர் உங்களுக்கு ஆதரவு தந்தார். அவரும் தற்போது தங்களுடன் இல்லை. மாறாக உங்களுக்கெதிராக உள்ளார். அவருக்கும் அன்வர் ஆசிரியர் சூனியம் வைக்கவில்லை.
கௌரவ. முஹாஜிரீன் ஆசிரியர் உங்கள் விசுவாசியாக இருந்தவர். சொல்லப்போனால் இறுதியில் உங்களுக்காகவே முன்னால் அமைச்சரை எதிர்த்தவர். அன்றைய நிகழ்வின் காரணமாக காதில் சத்திரசிகிச்சைக்குட்பட்டார். அவருக்கு நீங்கள் புரிந்த கைமாறு அவரும் உங்களுக்கு பரம எதிரியாக மாறியுள்ளார்.
நடுநிலையாக உள்ள உறுப்பினர்களென்று கூறுவோரில் ஒருவரது கூற்றையும் இணையத்தளத்தில் நீங்கள் பார்த்திருப்பீர்கள். அவர்கள் உங்களுடன் இருப்பதாக கூறாதீர்கள். அவர்கள் உங்கள் பிழைகளை எதிர்த்தவர்கள் இன்றும் அதே நிலைதான்.
எனக்கு ஒன்றுமட்டும் புரியவில்லை. கௌரவ. ஜூனைட் நளீமி சுகயீனமுற்றிருந்ததாகவும் அவரைக்கட்டாயப்படுத்தி கையொப்பமிட்டுள்ளதாகவும் செவ்வி வழங்கியிருந்தீர்கள். சகோதரர் ஜூனைட் தனது கையொப்பத்தின் பெறுமதி தெரியாதவர் என்று கூற முனைவது வேடிக்கையானதும் அவரை அறிவீனராக நீங்கள் காட்ட முனைவதுமாகும்.
கௌரவ. தவிசாளரே. உறுப்பினர்கள் ஆரம்பத்திலும் உங்களுடன் இல்லை. 2013ம் ஆண்டின் வரவு செலவுத்திட்டத்திலும் முன்னால் அமைச்சர் உறுப்பினர்களை உங்களுடன் அவரது வீட்டில் இணக்கப்பாட்டுக்கு கொண்டு வந்தார். 2014 இற்கான வரவு செலவு திட்டத்திலும் பள்ளிவாயல்கள், ஊர்பிரமுகர்கள் முன்னிலையில் அவரால் எடுத்துக்கொள்ளப்பட்ட முயற்சி பயனற்றுப்போனது. இப்படியாக அனைத்து நிகழ்வுகளும் உறுப்பினர்களின் உள்ளங்களில் நீங்கள் இல்லை என்பதை தெளிவாக எடுத்துக்காட்ட போதுமானது. இருப்பினும் என்னைப்பிரச்சினைக்குரியவராக காட்ட முனைவது பிரதேச அபிமானத்தைப் பெற்றுக்கொள்ளவே என்பதை தெளிவாகக் காட்டுகிறது.
இறுதியாக அறிவுரையாக ஒன்றைச் சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன். அமைதியாக இருந்து சிந்தியுங்கள். எந்தவொரு அரசியல்வாதியும் நம்பிக்கையில்லாப்பிரேரணை, அதனைத் தொடர்ந்துவரும் பிரச்சினைகளை எதிர்கொள்வேன் என்று கூறுவது 'வேலியில் போகும் ஓணானை சட்டையில் பிடித்துப்போட்டுக்கொள்வதற்கு சமமானதாகும்' புத்திசாதுர்யமான முடிவினை எடுப்பீர்கள் என்று நினைத்து விடைபெறுகின்றேன்.
நன்றி,
இவ்வண்ணம்
அன்வர் ஆசிரியர் .
.jpg)
0 comments :
Post a Comment