'பிழையான நேரத்தில் எடுக்கப்படும் சரியான தீர்மானங்களும் பிழையானவையாகும். அதேபோல் சரியான நேரத்தில் எடுக்கப்படும் பிழையான தீர்மானங்களும் பிழையானவையாகும். ஆகவே,கால நேரம் பார்த்து பொருத்தமான நேரத்தில் எடுக்கப்படும் சரியான தீர்மானங்களே சரியானவையும் சாத்தியப் பாடானவையுமாகும்'
மறைந்த மாமனிதர் அஷ்ரஃப் அவர்கள் 'மசூறா'வின் அடிப்;படையில் முக்கியமான சமுதாயத் தீர்மானங்களை கட்சி எட்டுவதற்கு முன் மேற்படி கருத்தினை அடிக்கடி வலியுறுத்துவதனை நாம் பார்த்திருக்கின்றோம். இந்த அடிப்படையில் கூட்டுத்தீர்மானங்களை மசூறா அடிப்படையில் பொருத்தமான உரிய வேளைகளில் அவர் எடுத்ததனால்தான் ஒரு தசாப்த காலத்தினுள் சி.ல.மு.காங்கிரஸ் பல சாதனைகளைப் புரிந்தது மட்டுமல்லாமல் இந்நாட்டு முஸ்லிம்களை தலை நிமிர்ந்து வாழக்கூடிய நிலைக்கு குறுகிய காலத்திற்குள் அவர் மாற்றியமைத்தார்.
கரையோர மாவட்டக் கோரிக்கை: 'கல்முனை கரையோர மாவட்டக்' கோரிக்கை சமுதாயத்திற்கு வேண்டியதும் நியாயமானதுமாகும். மறைந்த தலைவர் கல்முனையை தென்கிழக்கின் முகவெற்றிலையாக மாற்றியமைப்பதற்காக வகுத்தளித்த உபாயமே இதுவாகும்.
ஆனால் தலைவரின் இக்கனவை நனவாக்குவதிலே, அதைப்பெற்றெடுப்பதற்கான முன்னெடுப்புகளிலே, அதற்கான சாத்திய வளப்பாடுகளிலே நாம் எந்தளவுக்கு வெற்றிபெற்றிருக்கின்றோம் என்பதனை காய்தல் உவர்த்தலின்றி சமுதாய நன்மைகருதி நாம் மீள்பார்வை செய்யவேண்டியிருக்கின்றது. தேர்தல் காலங்களில் மட்டும் அவிழ்த்துவிடப்படுகின்ற, அல்லது சந்தியிலே போட்டுடைக்கின்ற ஒரு கருப்பொருளாக இக்கோரிக்கை இன்று மாறியிருக்கின்றது. காலசூழல், பொருத்தம் பாராது விடுக்கப்படும் வெற்று அறிக்கைகளினால் மட்டும் இக்கோரிக்கையை நாம் வென்றெடுக்க முடியுமா? என்பது முதலாவது கேள்வி. 'பொதுபல சேனா'வினால் பேரினவாதக்கோஷம் ஆசீர்வாதங்களுடன் உச்சியிலே நின்று தலைவிரித்தாடும் இக்காலகட்டத்தில் இது சாத்தியப்பாடான கோஷமா?.....
முஸ்லிம் சமுதாயத்தின் அடிப்படை உரிமைகளுக்கு அச்சுறுத்தல்களும் சவால்களும் விடுக்கப்படும் இந்நெருக்குவார சூழ்நிலையில் எமது அறிக்கைகள் எரியும் நெருப்பில் எண்ணெய் வார்ப்பதாக அமையாதா?.....கிழக்கிலே வதியும் மக்கள் நன்மைகருதி பொருத்தமற்ற சூழலில்
(2)
நாமெடுக்கும் இச்செயற்பாடு நாட்டிலே பரந்துபட்டு வாழும் 2ஃ3; பங்கு முஸ்லிம்களின் இருப்பிலே ஆதங்கத்தையும், கிலேசங்களையும் ஏற்படுத்தாதா?.......பல்லின சமுதாய அமைப்பிலே பக்குவமாக, கண்ணாடிக் குவழைவடிவிலே வாழவேண்டிய எமது நிலைமையை இவ்வறிக்கைகள் கேள்விக்குறியாக்கி விடுமா?... என்றெல்லாம் பலகோணங்களிலே எம்மை நாம் கேட்கவேண்டியிருக்கின்றது.
கட்சியின் பொறுப்புவாய்ந்த தலைமை இஸ்தானத்திலே இருக்கின்றவர்கள் ஏன் இவற்றை கரிசனைக்குட்படுத்தக்கூடாது? போன்ற கேள்விகளுடன் கூடிய மன உழைச்சல்களுக்கு நமது சமுதாயம் இன்று ஆளாக்கப்பட்டிருக்கின்றது.
இணக்கப்பாட்டு அரசியல்:
கூடுதலாக 'பேரம்பேசும் இணக்கப்பாட்டு அரசியலையே' சி.ல.மு.காங்கிரஸ் தனது சமுதாய உரிமைகளை வென்றெடுப்பதற்கான அரசியல் உபாயமாக கையாண்டு வருகின்றது. போராட்ட அரசியலுக்குள் இச்சமுதாயத்தை தள்ளிவிடக்கூடாது என்றதோரணையில்தான் மர்ஹூம் அஷ்ரஃப் இக்கட்சியையே தோற்றுவித்தார். ஆனால் நீண்டகால சாத்வீகப் போராட்டங்கள் ஆயுதப்போராட்டமாக மாறிய போக்கினை சகோதர தமிழ்மக்கள் வரலாற்றிலே நாம் பார்க்கின்றோம்.
எமது இணக்கப்பாட்டு அரசியலிலே,அதற்காக ஆட்சியாளர்களுடன் நாம் செய்துகொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களிலே வழங்கப்பட்ட உறுதிமொழிகளை ஏன் நாம் மின்னாமல் முழங்காமல் ராஜதந்திரரீதியாக பெற்றெடுக்க முயற்சிக்கவில்லை?.....இன்று ஏமாற்றப்பட்டுள்ளோம் என்று அங்கலாய்க்கின்றோம். சமுதாய உரிமைகள், நன்மைகளை ஏற்றிவந்த எத்ததைனையோ பஸ்களை தலைவர்களாகிய நாம் கடந்த 14வருடங்களாக தவறவிட்டிருக்கின்றோம். தேர்தல்களினூடாக மக்கள் வழங்கிவந்த பேரம்பேசும் சக்திகளையெல்லாம் தனிப்பட்ட அற்ப சலுகைகளுக்காக, மேலதிக கார் 'பேமிற்று'களுக்காக நாம் தாரை வார்த்திருக்கின்றோம். இதற்கெல்லாம் நாம் அல்லாஹ்விடம் கணக்கும், பதிலும்; கூறியாகவேண்டும்.
2002ல் ஆட்சிக்குவந்த ஐக்கிய தேசியமுன்னணி அரசாங்கத்தில் பங்காளியாகவிருந்த நாம் செய்துகொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திலே எமது கரையோர மாவட்டக் கோரிக்கை உள்ளடக்கப்பட்டிருந்தது. எமது சமகாலத்தலைவர் தனதுஅரசியல் சாணக்கியத்தினூடாக அதைவென்றெடுத்து பிரதமராக அப்போதிருந்த கௌரவ.ரணில் விக்கிரமசிங்ஹ அதை வர்த்தமானி அறிவித்தலூடாக அறிவிக்கவிருந்த வேளையில்தான் எமது சமுதாயப் பிச்சையில் உதவி அமைச்சராகவிருந்த, எப்போதும் அஷ்ரஃப் பாசறையில் வளர்ந்தது பற்றியும் சமுதாய இதயசுத்தி பற்றியும் பேசித்திரிகின்ற அதாவுல்லா, அது கல்முனைக்கு போகக்கூடாது என்ற ஒரேயொரு குறுகிய பிரதேச வாதத்தில்
(3)
அதனைப் போட்டுடைத்து தடைசெய்தார். அவர்கள் நடாத்தும் சமுதாய விற்றுப் பிழைப்பிலே இது ஒரு உதாரணம் மட்டும்தான்.
செயலாளர் நாயகத்தின் சமீபத்தய 'கரையோர மாவட்டக் கோரிக்கை புதுப்பித்தலானது ஊடகங்களிலே முன்பக்கத்தை அலங்கரித்தாலும் சமுதாயம் நோக்கிய கொடுர பேரினப் பார்வைகளையும், எம்மீதான இனவாத குரோதங்களையும் மீண்டும் இரட்டிப்பாக்கி இருக்கின்றது. வடகிழக்கிற்கு வெளியிலே வாழ்கின்ற முஸ்லிம்கள் மத்தியிலே மனக்கிலேசத்தையும், 'நீங்களும் அடிப்படைவாதிகளும் பிரிவினைவாதிகளும்தான்' என்ற தேவையற்ற லேபல்களை அவர்கள் மீது ஒட்டவைத்திருக்கின்றது. நாடாளுமன்றத்திலே பிரதமரும், எதிர்க்கட்சியினரும் எம்மீது இனவாதிகள், பிரிவினைவாதிகள் என கூறி எரிந்தது மட்டுமில்லாமல் தேவையற்ற குரோதங்களையும் எமது மதம், இனம், கட்சி, சமுதாயத்திற்கும் அவமானத்தை ஏற்படுத்துவதாயும் அமைந்துள்ளது. இந்த அறிக்கைகளால் எதிர்மாறான,தேவையற்ற பிரதிபலன்களே ஏற்பட்டுள்ளன. சமுதாயத்திற் கெதிரான பொல்லைக் கொடுத்து அடிவாங்கி வருகின்றோம்.
கிழக்கு முஸ்லிம்களுக்கும் தீராத பிரச்சினைகள் இருப்பதையும், அவர்களுடைய இருப்பும், பரம்பலும் குறிப்பாக அம்பாரை, திருகோணமலை மாவட்டங்களில கேள்விக் குறியாக்கப்பட்டு வருவதனையும் யாரும் மறுக்கமுடியாது. 1961ல் 'அம்பாரை மாவட்டம்'; உருவாக்கப்பட்டபோதும், 1986ல் புதிய பிரதேச சபை எல்லைகள் வகுக்கப்பட்டபோதும் எமக்கு அநியாயங்கள இழைக்கப்பட்டன என்பது உண்மைதான். 53 வருடங்களாக எமக்கு ஒரு முஸ்லிம்,அல்லது தமிழ் பேசும் ஏ.ஜி.ஏ. ஐப் பெறமுடியாதுள்ளதும் உண்மைதான். இவற்றைப் பெற்றுக்கொள்வதற்கு நாம் எடுத்த வியூகங்கள், பிரயத்தனங்கள், போராட்டங்களென்ன?.....
இன்று அம்பாரையில் மட்டுமல்ல கேவலம் கல்முனையிலும் முஸ்லிம் டி.எஸ்.ஐ இன்று நாம் இழந்திருக்கின்றோம். சந்தர்ப்பங்களை யெல்லாம் தவறவிட்டு விட்டு, திட்டமிட்டு குடிசனப்பரம்பலும் ஏறக்குறைய சமமாக்கப்பட்ட பின்னணியில் இன்று அறிக்கைகள் மூலம் அங்கலாய்த்துக் கொண்டிருக்கின்றோம். கிழக்கு மாகாண சபைக்காக 2012ல் மக்கள் வழங்கிய ஆணையைப் பயன்படுத்தி முஸ்லிம் முதலமைச்சரைப் பெறும் வாய்ப்பை உதாசீனம் செய்து விட்டு இன்னும் சில வருடங்களில் ஆட்சியாளர்மீது பழிசுமத்தி அறிக்கை விடுவோம். இந்த கையாலாகாத நிலையில்தான் எமது கட்சி இன்று சமுதாயத்தை விட்டிருக்கின்றது.
கூட்டணியுடனான பேச்சுவார்தை: சி.ல.மு.காங்கிரஸ் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இப்பொழுது பேச்சுவார்த்தையை ஆரம்பித்திருக்கின்றது. இதில் மறைந்த தலைவரின் அடியொட்டி எமது சமகாலத்தலைவரின் பரந்துபட்ட தூரதிருஷ்டியான முன்னெடுப்பினையும், தலைவர் சம்பந்தன்ஐயா வுடைய நிலைப்பாடுகளையும் நாம் பாராட்ட வேண்டியுள்ளது. கிழக்கிலே 'பிட்டும்
(4)
தேங்காய்ப் பூவுமாக' பூர்வீகமாக வாழ்கின்ற தமிழ் முஸ்லிம் மக்கள் ஒரு அடிப்படை யதார்த்தத்தை நன்கு புரிந்துகொண்டு செயற்படவேண்டும்.இரு சமுகங்களும் ஒன்றையொன்று புரிந்துணர்வுடன், தமக்கிடையே விட்டுக்கொடுத்து விளக்கத்துடன் சகவாழ்வினை ஏற்படுத்துவதன் மூலம்தான் எமது இலக்குகளை அடைந்து கொள்ளமுடியும். மாறாக, முறுகல்களை ஏற்படுத்தி சிறுவிடயங்களை பூதாகரமாக்கி குரோதங்களை வளர்ப்பதன் மூலம் எதையுமே எட்டமுடியாது என்ற உண்மை கடந்த கால கசப்பான அநுபவங்களின் மூலம் நாம் கற்ற பாடங்களாகும். நீண்டகால ஆயுதப்போராட்டத்தின் மூலம் இரு சமுதாயங்களுமே பாதிக்கப்பட்டிருக்கின்றன. இந்த ஆரம்பப்பேச்சு வார்த்தைகள் ஆரோக்கியமாக தொடாந்தும்; முன்னெடுக்கப்படல் வேண்டும்.
கடந்த கால கசப்புணர்வுகள், தப்பெண்ணங்கள், சந்தேகங்கள் புரிந்துணர்வுகளுடனும் இணக்கப்பாடுகளுடனும் இப்பேச்சுவார்த்தைகள் மூலம் நீக்கப்பட்டு இனஐக்கியம் தொடராக முன்னெடுக்கப் படல் வேண்டும். தமிழ் சமுதாயத்தின் ஆயுதப்போராட்டம் தோற்கடிக்கப் பட்டாலும் அவர்களின் சமுதாயக் கரிசனை, சமுதாய இலட்சியம் சர்வதேசத்திலே வெல்லப்பட்டிருக்கின்றது என்ற உண்மையை நாம் விளங்கவேண்டும்.
வடகிழக்குப் பிரச்சினைத் தீர்விலே அதற்கான முன்னெடுப்புகளிலே வடகிழக்கு முஸ்லிம்ளுடைய கரிசனைகள்,பிரச்சினைகளும் முன்னெடுக்கப்பட்டு ஏற்கனவே தலைவர் அமிர்தலிங்கம், மர்ஹூம் அஷ்ரஃப் , தலைவர். தொண்டமான் ஆகியோரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அடிப்படைகளில் சமத்துவமான தீர்வுகள் எட்டப்படல் வேண்டும். இந்த ஒருமைப்பாட்டு இணக்கங்களினூடாக மர்ஹூம் அஷ்ரஃப் கண்ட கரையோர மாவட்டம், தென்கிழக்கு அலகு போன்ற கனவுகள் தமிழ் சகோதரர்களின் இனப்பிரச்சினைத் தீர்வுகளினூடாக இணக்கப்பாட்டுடன் அடைந்து கொள்ளப்படல் வேண்டும்.
கட்சியின் உச்சபீடக் கூட்டங்களிலே சமுதாயக் கவலைகளை, ஆதங்கங்களை நாம் அடிக்கடி வெளியிட்டு எமது பங்களிப்புகளைச் செய்தாலும் சமுதாயத்தளத்தில் அவற்றை ஒப்புவிக்கவேண்டிய குற்றஉணர்வு, தேவை தற்போது எமக்கு ஏற்பட்டுள்ளது. சி.ல.மு.காங்கிரஸ் இந்நாட்டு முஸ்லிம் சமுதாயத்தின் அசைக்கமுடியாத ஒரு அமானிதச் சொத்து. அது தனிப்பட்ட நன்மைகள், விருப்பு, வெறுப்புகளுக்கப்பால் பலப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்படல் வேண்டும். அதனால் சமுதாய தளம், அதன் பேரம்பேசும் சக்தி; ஐக்கியத்துடன் உறுதியாக்கப்பட்டு உரிமைகள் வென்றெடுக்கப்படல் வேண்டும்.
எஸ்.எல்.எம்.பளீல்,
உச்சபீட உறுப்பினர்,
சி.ல.மு காங்கிரஸ்-
முன்னாள் ஜாமிஆ நழீமியா விரிவுரையாளர்

0 comments :
Post a Comment