அஸ்லம் எஸ்.மௌலானா-
கல்முனை இஸ்லாமாபாத் வீட்டுத் திட்டப் பகுதியில் சிறுவன் ஒருவனின் உயிரிழப்புக்கு காரணமாக அமைந்த உத்தேச கழிவகற்றல் தொகுதிக்கான பாரிய குழியைச் சுற்றி பாதுகாப்பு வேலி அமைக்குமாறு குறித்த வேலைத் திட்டத்தின் ஒப்பந்தக்காரருக்கு சட்ட முதுமாணி மாநகர முதல்வர் எம்.நிஸாம் காரியப்பர் உத்தரவிட்டுள்ளார்.
இஸ்லாமாபாத் வீட்டுத் திட்டத்திற்கான மலசல கழிவகற்றல் தொகுதி அமைப்புக்காக பாரிய குழியொன்று தோண்டப்பட்டு நிர்மாணப் பணிகள் இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் வியாழக்கிழமை மாலை அப்பகுதியை சேர்ந்த 14 வயது பாடசாலை மாணவன் ஒருவன் அக்குழியில் விழுந்து உயிரிழந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்தே இவ்வாறான அனர்த்தங்கள் இனிமேலும் இடம்பெறாதவாறு குழியைச் சுற்றி பாதுகாப்பு வேலி அமைக்குமாறு மாநகர ஆணையாளர் ஊடாக குறித்த வேலைத் திட்ட ஒப்பந்தக்காரருக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
அதேவேளை இத்துர்ப்பாககிய சம்பவம் தொடர்பில் தான் மிகக் கவலையடைந்துள்ளதாகவும் அதற்காக வருந்துவதாகவும் உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இஸ்லாமாபாத் வீட்டுத் திட்டத்தில் வசிக்கும் மக்களின் நீண்ட கால பிரச்சினைக்கு தீர்வு காணும் பொருட்டு புதிய கழிவகற்றல் தொகுதியை அமைப்பதற்காக கல்முனை மாநகர சபை நடவடிக்கை எடுத்ததன் பேரில் அதற்கான வேலைத் திட்டத்திற்கு பகிரங்க விண்ணப்பம் கோரப்பட்டு- அதன் மூலம் தெரிவு செய்யப்பட்ட ஒப்பந்தக்காரரிடம் அத்திட்டம் கையளிக்கப்பட்டு- நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 comments :
Post a Comment