முஸ்லிம்களைப் பொறுத்தவரை இந்த அரசு பல்வேறு அபிவிருத்தி திட்டங்களையும், சிறப்பான சலுகைகளையும் வழங்கி வருகிறது. இதனை யாரும் மறுக்க முடியாது. ஒரு சில அரபு தேசங்களிலும் இல்லாத, ஐவேளை தொழுகைக்கான அதானை தேசிய வானொலியில் ஒலிபரப்பும் நடைமுறையும்- மதம் சார்ந்த புரிந்துணர்வும் மஹிந்த ராஜபக்ஷ த்லைமையிலான இந்த ஆட்சிக்காலத்தில் இலங்கையில் மிக சிறப்பான முறையில் செயற்படுத்தப்பட்டு வருவதை மனசாட்சி உள்ள எவராலௌம் மறுத்துரைக்க முடியாது. இன மத பேதமின்றி இலங்கையின் ஒவ்வொரு குடிமகனின் வீட்டிலும் எமது புனிதமான அதான் ஒலிப்பது இலங்கை முஸ்லிம்களாகிய நாம் செய்த பெரும் பேறாகும்.
இன மத பேதமின்றி நாட்டில் அபிவிருத்தி நடந்தேறி வருகிறது. இந்த தருணத்தில் முஸ்லிம்கள் உணர்ச்சி அரசியலால் உந்தப்பட்டு நன்றி மறந்து செயற்படக் கூடாது. கசப்புணர்வுகள் களையப்பட்டு அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மீது நாங்கள் எல்லோரும் நம்பிக்கை வைக்க வேண்டும். இந்த நாட்டின் ஜனாதிபதியாக மூன்றாவது தடவையாகவும் அதிமேதகு ஜனாதிபதி அவர்களே தெரிவு செய்யப்படுவது உறுதியாகி விட்டது.
எனவே முஸ்லிம்களாகிய நாம் இந்த ஆட்சியின் பங்காளிகளாக மாற வேண்டுமே தவிர பகையாளிகளாக ஒரு போதும் மாறி விடக் கூடாது. பகைமையை ஒரு போதும் பகைமையால் வெல்ல முடியாது.பகைமையை நல்ல நட்பினால் தான் நாம் வெல்ல முடியும். பகைமையுணர்வு கொழுந்து விட்டெறியும் அரசியல் லாபம் தேடும் அற்பமான சிந்தனைகளில் எமது முஸ்லிம்கள் மதிமயங்கி விடுதல் சமகாலத்தில் ஆரோக்கியமான செயற்பாடாக அமையாது. அரசியல் ரீதியாக சிறந்த முடிவுகளை, தீர்க்கமான நிலைப்பாடுகளை வெளிப்படுத்தக் கூடிய ஒரு நெருக்கடிமிக்க சூழலில் முஸ்லிம்களாகிய நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
இன்ஷா அல்லாஹ், அல்லாஹ்வின் பேருதவி கொண்டு இந்த நெருக்கடி சூழலை எவ்வாறு வெற்றி பெறலாம் என்பது குறித்து நாம் ஆழமாக சிந்திக்க வேண்டும். முஸ்லிம்களை பகடைக்காய்களாக்கி நாட்டில் ஒரு ஸ்திரமற்ற நிலைமையை ஏற்படுத்த கங்கணம் கட்டி அலையும் ,அரசியல் சக்திகளின் பின்னால் முஸ்லிம்கள் ஒரு போதும் அணி திரளக் கூடாது.
இன்றைய இலங்கை முஸ்லிம்களின் நிலைமை மண் குதிரையை நம்பி ஆற்றில் விழுந்த கதையாகி விடக் கூடாது. பொது வேட்பாளர் மைத்ரிபால சிறிசேன அவர்களை விட ஆழ்ந்த அரசியல் அறிவும், மக்கள் இதயங்களை வெற்றி பெரும் ஆளுமையும் எமது அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம் காணப்படுகிறது.
இலங்கையின் சகல மக்களுக்குமான அபிவிருத்தி, வளமான எதிர்காலம் குறித்த தூர சிந்தனை நமது அதிமேதகு ஜனாதிபதி அவர்களிடமே இருக்கிறது. இது தவிர, இன்றுகளில் சர்வதேசமே ஏற்றுக் கொள்ளும் ஒரு ஆளுமையுள்ள தலைமைத்துவம், நேர்த்தியான அரசியல் பார்வை, மக்கள் அபிமானம் என்பன மற்றவர்களை விட எமது ஜனாதிபதி அவர்களிடமே பூரணமாய் காணப்படுகின்றன.
முஸ்லிம்கள், தேர்தல் காலத்து வெற்று கோஷங்களுடனும், செல்லுபடியற்ற வாக்குறுதிகளுடனும் எம் வாசல் வருகிற போலி அரசியல் தலைமைகளின் பசப்பு வார்த்தைகளில் ஏமாந்து விடக் கூடாது. முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும். உணர்ச்சி அரசியலுக்குள் நாம் உந்தப்பட்டு எமது சமூகத்தின் எதிர்கால நலன்களை இழந்து விடக் கூடாது.
முஸ்லிம் நாடுகள் அனைத்துமே நமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மீது மிகுந்த நம்பிக்கையும் விசுவாசமும் கொண்டிருக்கின்றன. உலகில் வேறெந்த தலைவருக்கும் இல்லாத அபிமானம், நமது தலைவர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு சர்வதேசமெங்கும் பரவிக் கிடக்கிறது. இந்த அபிமானத்தின் ஊடாக அரசு, நாட்டை துரித அபிவிருத்தி பாதையில் இட்டுச் சென்றிருப்பதை யாருமே மறைக்கவோ மறுக்கவோ முடியாது.
எனவே, வரும் ஜனாதிபத் தேர்தலில் எமது முஸ்லிம்கள் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை கொண்டு வாக்களிக்க வேண்டும். பதவிகளுக்கும், பணத்திற்கும் சோரம் போகிற அரசியல்வாதிகளை முஸ்லிம்கள் இனம் கண்டு தகுந்த பாடம் புகட்ட வேண்டும். இதுவே எமது எதிர்கால சந்ததியினருக்கு நாம் செய்கிற மிகப் பெரிய உபகாரமாகும். சமகால யதார்த்தம் புரிந்து எமது உன்னத் வாக்குகளை வழங்கி வெற்றிப் பக்கத்தின் பங்காளர்களாக மாற வேண்டும்.
இலங்கை எமது பூர்வீக தேசம், நமக்கு அரபு தேசத்திலோ வேறெங்குமோ புலம்பெயர்ந்து வாழும் வாய்ப்புகள் ஏதுமில்லை. நமது தேசத்தில் பற்றுடனும், விசுவாசத்துடனும், தேசத்தின் நலனிலும் முஸ்லிம்களாகிய நாம் அதீத அக்கறை செலுத்துதல் காலத்தின் கட்டாயமாகும். மேலும், சகோதர சமூகத்தாருடன் கடந்த காலங்களைப் போல பிட்டும் தேங்காய்ப் பூவுமாய் இறுக்கமான, நெஞ்சுக்கு நெருக்கமான உறவுகளைப் பேணுவது எமக்கும் எமது எதிர்கால தலைமுறைக்கும் நன்மை பயக்கும் அதி உன்னத செயலாகும். அந்தவகையில், சிங்கள முஸ்லிம் நல்லுறவு வேலைத்திட்டத்தின் தலைவர் என்ற வகையில் நாம் நிகழ்ந்த கசப்புகளை மனதில் தேக்கி வைத்துக் கொண்டு இனங்களுக்கிடையே விரோதம் மற்றும் குரோதங்களை வளர்ப்பதை முற்றாக தவிர்க்க வேண்டுமென்பதை வலியுறுத்துகிறேன்.
மேலும், அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் இன முரண்பாடுகளை களைந்து செயற்படுவதன் அவசியத்தையும்- பௌத்த கடும்போக்குவாத சக்திகளால் இனியொரு போதும் இலங்கை முஸ்லிம்களுக்கு அநீதிகள் மற்றும் அசம்பாவிதங்கள் நடைபெறாது, நடைபெற விட மாட்டேன் எனும் உத்தரவாதத்தையும் சிங்கள முஸ்லிம் நல்லுறவு வேலைத்திட்டத்தின் தலைவர் என்ற வகையில் என்னிடம் வழங்கியிருக்கிறார்.
எனவே, முஸ்லிம்கள் கடந்த கால வடுக்களை மறந்து-எமது சமூகத்தின் முன்னேற்றத்திற்காக அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் கரங்களை பலப்படுத்த வேண்டும். சமகாலத்தில் தீர்க்க தரிசனமாக சிந்திக்கிற ஒவ்வொரு முஸ்லிமினதும் தார்மீக கடமை இதுவென்பதை உணர வேண்டும். உணர்ச்சி அரசியலுக்கு அடிமைப்பட்டு எமது தார்மீக உரிமையை நாங்களே சிதைத்து விடக் கூடாது. முஸ்லிம்களாகிய நாம் இதர இனத்தவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு வாழத் தலைப்பட வேண்டும்.
வெறுமனே கரைந்து வாழுகிற சமூகமாக இருக்காமல் எல்லோருடனும் கலந்து ஒற்றுமையுடன் நாட்டுக்காய் உழைக்கிற சமூகமாய் வாழ்வதற்கு முயற்சிக்க வேண்டும்.
ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு அதி உன்னதமான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகிறார். அவற்றை இடை நடுவில் குழப்ப சதி திட்டம் தீட்டும் குழப்ப வாதிகளின் சூழ்ச்சி வலைகளில் முஸிம்கள் சிக்கி விடாது நாட்டில் உள்ள அனைத்து முஸ்லிம்களும் ஆழ்ந்த அவதானிப்புடனும், தூர சிந்தனையுடனும் வாக்களித்து அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் கரங்களை பலப்படுத்த வேண்டும் என்கிறார் தமிழ் சிங்கள நல்லுறவு வேலைத் திட்டத்தின் தலைவர் அல்ஹாஜ் அப்துல் காதர் மசூர் மௌலானா அவர்கள்.
.jpg)
0 comments :
Post a Comment