இந்தியாவின் RSS வழியில் பயணிக்க முனையும் பொது பல சேனாவின் சிங்கள தேசியவாத கருத்துக்கள் ஒரு பார்வை

SLTJ Media rasminmisc-

டந்த 28.09.2014 அன்று கொழும்பு சுகததாச உள்ளக அரங்கத்தில் பொது பல சேனாவின் தேசிய மாநாடு நடைபெற்றது. சுமார் 5000 க்கும் அதிகமான பௌத்த துறவிகள் கலந்து கொண்டதாக சொல்லப்படும் இம்மாநாட்டில் இலங்கை முஸ்லிம்களுக்கும், இஸ்லாத்திற்கும் எதிரான பல கருத்துக்கள் வெளியிடப்பட்டன. 

மியன்மார் (பர்மா) முஸ்லிம்களுக்கு எதிரான கலவரங்களை திட்டமிட்டு நடத்திய 969 இயக்கத்தின் தலைவர் அஷின் விராது தேரர் மற்றும் இலங்கை இனவாத அமைப்புகளான இராவணா பலய, சிஹல ராவய போன்ற அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் பேசிய பொது பல சேனாவின் தலைவர்கள் பலரும் இஸ்லாமிய மார்க்கத்தையும், முஸ்லிம்களையும் வஞ்சிக்கும் விதமாகவும், முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகளை மறுக்கும் விதமாகவும் பல விதமான கருத்துக்களையும் பதிவு செய்தார்கள். 

RSS ன் வழியில் பயணிக்க விரும்பும் பொது பல சேனா குறித்த மாநாட்டில் உரையாற்றிய பொது பல சேனாவின் அமைப்பாளர் டிலந்த விதானகே இலங்கை நாட்டை தனி சிங்கள நாடாக அறிவிக்க வேண்டும் என்றும், இங்கிருக்கும் இந்துக்களை சிங்கள இந்துக்கள் என்றும் கிருத்தவர்களை சிங்கள கிருத்தவர்கள் என்றும், முஸ்லிம் மக்களை சிங்கள முஸ்லிம்கள் என்றும் தான் அழைக்க வேண்டும் என்று கருத்து வெளியிட்டார். இந்தியாவில் சிறுபான்மை மக்களுக்கு எதிராக இயங்கும் RSS, பஜ்ரங்தல், சிவசேனா போன்ற இயக்கங்களின் வரிசையில் இலங்கையில் இனவாதத்தை பரப்பிக் கொண்டிருக்கும் பொது பல சேனாவின் இந்த அறிவிப்பு வன்மையாக கண்டிக்கத் தக்கதாகும். 

இந்தியாவில் ப.ஜ.க ஆட்சிக்கு வந்தவுடன் RSS ன் தலைவர் பகத்சிங் வெளியிட்ட இனவாத அறிக்கையை ஒத்ததான ஒரு அறிக்கையைத் தான் தற்போது பொது பல சேனாவின் அமைப்பாளரும் வெளியிட்டுள்ளார். இந்தியாவில் இருக்கும் கிருத்தவர்கள், முஸ்லிம்கள் அனைவரும் இந்துக்கள் என்றே அழைக்கப்பட வேண்டும், காரணம் இந்தியா என்பது இந்து நாடு என்று வரலாறு தெரியாத பகத் சிங் வெளியிட்ட இனவாத கருத்தை தழுவியதொரு கருத்தையே தற்போது பொது பல சேனாவின் டிலந்த விதானகேயும் வெளியிட்டுள்ளார். 

மத, இனக் கலவரங்களை திட்டமிட்டு நடத்துவதின் மூலம் சிறுபான்மை மக்களுக்கு எதிரான, குரோதத்தை உண்டாக்கி, பெரும்பான்மை மக்களின் வாக்குகளை பெற்றுக் கொள்ளும் இந்திய இனவாத அமைப்புகளின் பாணியில் இலங்கையிலும் தமது வாக்கு வங்கியை பலப்படுத்திக் கொள்வதற்காக இது போன்ற இனவாதக் கருத்துக்களை இவ்வமைப்புக்கள் கட்டவிழ்த்து விடுகின்றன. 

சிந்தனையற்ற சிங்கள வாதம் பொது பல சேனாவின் மாநாட்டில் பேசிய அதன் அமைப்பாளர் டிலந்த விதானகேயின் சிங்கள வாத கருத்துக்களை உற்று நோக்கும் போது கடுகளவு சிந்தனையுள்ள ஒருவரின் கருத்தாக எந்தவொரு கல்வியலாளரும் புரிந்து கொள்ள மாட்டார்கள். இலங்கை நாட்டை ஸ்ரீ லங்கா என்ற பெயரை மாற்ற வேண்டும் என்றும் சிங்கள அரசு என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்றும் அதில் அவர் வலியுறுத்தினார். ஒரு மொழியால் நாட்டின் பெயரை மாற்ற வேண்டும் என்று வலியுறுத்துவது மடமையிலும் மடமையானதாகும். 

சிங்கள மொழியென்பது இலங்கையில் வாழும் பௌத்தர்கள் மாத்திரம் பேசுகின்ற ஒரு மொழியல்ல, பௌத்தர்கள் அல்லாத சிங்கள மொழியை தாய் மொழியாகக் கொண்ட இந்துக்களும், கிருத்தவர்களும், முஸ்லிம்களும் கூட இலங்கையில் வாழத்தான் செய்கின்றார்கள். சிங்களம் என்பது ஒரு மொழியே தவிர அது பௌத்த மதத்தின் மொழியல்ல என்பதை பொது பல சேனாவும் அதன் தலைவர்களும் புரிந்து கொள்ள வேண்டும். சிங்கள தேசியவாத கொள்கைகளை முன்வைத்து அரசியலில் நுழைந்த சிஹல உறுமய போன்ற கட்சிகளை முன்னுதாரணமாக கொண்டு இயங்க நினைப்பதினால் என்னவோ இவர்களும் தற்போது சிங்கள மொழி பற்றாளர்களாக தங்களை வெளிக்காட்ட முனைகின்றார்கள். 

ஒரு வாதத்திற்கு சிங்கள மொழி பற்றாளர்களாக தங்களை இவர்கள் வெளிக்காட்டிக் கொண்டால் கூட அதில் ஒரு நியாயம் வெளிப்பட வேண்டும். ஆனால் இவர்களின் இந்த மொழிப்பற்றில் கூட நியாயம் இல்லை. 

சிங்கள அரசு என்று இலங்கையின் பெயரை மாற்ற வேண்டும் என்று சொல்பவர்கள் அதனைத் தொடர்ந்து இலங்கையில் வாழும் சிறுபான்மை மக்களை சிங்கள கிருத்தவர்கள், சிங்கள இந்துக்கள், சிங்கள முஸ்லிம்கள் என்றும் அழைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றார்கள். இது மடமையிலும் உச்ச கட்ட மடமையாகும்.
சிங்களம் என்பது வெரும் ஒரு மொழி மாத்திரமே என்பதை இவர்கள் உணர மறுப்பதே இந்த மடமையின் ஆரம்பமாக இருக்கின்றது. உலகில் யாரும் தமிழ் இந்துக்கள், ஆங்கில கிருத்தவர்கள், அரபி முஸ்லிம்கள் என்று மொழியை வைத்து மதத்தை முடிவெடுப்பதில்லை. 

பௌத்தர்கள், முஸ்லிம்கள், கிருத்தவர்கள், இந்துக்கள் யாராக இருந்தாலும் பல் மொழி பேசக் கூடியவர்களாக இருக்கின்றார்களே தவிர மதத்திற்கு ஒரு மொழி என்று பிரித்துக் கொண்டவர்களாக யாரும் இல்லை. மதத்தின் வேதப் புத்தகங்களும், வழிகாட்டல்களும் ஏதாவது ஒரு மொழியில் அமையப் பெற்றிருக்கும். இவ்வளவு ஏன் கிருத்தவர்களையும், முஸ்லிம்களையும், இந்துக்களையும் “சிங்கள” என்ற அடைமொழியில் அழைக்க ஆசைப்படும் இவர்களின் பௌத்த மதத்தின் வேதம் கூட சிங்கள மொழி கொண்டதில்லையே? பாலி பாசையில் தானே பௌத்த மதத்தின் சட்டங்கள் கூட இருக்கின்றது. 

இந்நிலையில் பொது பல சேனாவின் இந்த கருத்துக்களை இந்து மற்றும் கிருத்தவ மதத்தினரும் கண்டிதுள்ளமை இங்கு நோக்கத் தக்கதாகும். பொது பல சேனாவின் மாநாட்டில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் தொடர்பில் பி.பி.சி தமிழோசையிடம் கருத்து வெளியிட்ட அகில இலங்கை இந்து மாமன்றத்தின் தலைவர் கந்தையா நீலகண்டன், தமிழ் பேசும் சிறுபான்மை சமூகங்களை பிரித்தாளும் சூழ்ச்சிகள் நடந்துவருவதாகக் கூறினார். சிங்கள – பெளத்த ஆட்சியாளர்களினாலேயே வடக்கு கிழக்கில் இந்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கந்தையா நீலகண்டன் தெரிவித்தார். அதேபோல, இனத்துவேஷ கருத்துக்களையும் மதவாத பிரசாரங்களையும் முன்னெடுத்துவரும் பொது பல சேனா அமைப்புக்கு எதிராக இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்காதுள்ளமை தொடர்பில் கிறித்தவ ஒத்துழைப்பு இயக்கத்தின் அமைப்பாளர் அருட்தந்தை எம். சக்திவேல் பி.பி.சி தமிழோசையிடம் விசனம் வெளியிட்டார். 

பொது பல சேனாவுக்கு அரசாங்கத்தின் ஆதரவு இருப்பதாகவும் அந்த அமைப்பின் கருத்துக்களை அரசாங்கத்தின் நிலைப்பாடாகவே கருத வேண்டியிருப்பதாகவும் அருட்தந்தை சக்திவேல் கூறினார். 

எது எப்படியிருப்பினும் சிந்தனை திறனற்ற மொழி வெறியும், இனவெறியும் கொண்ட ஒரு சிறு கூட்டம் இனங்களுக்கு மத்தியில் பிரச்சினைகளை உண்டாக்குவதின் மூலம் வாக்கு வங்கி அரசியலை முன்னெடுப்பதற்கு முனைகின்றது என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :