பொத்துவில் செய்தியாளர் எம்.ஏ.தாஜகான்-
ஆதாரமற்ற நிலையில் பொத்துவில் ஆதார வைத்தியசாலை
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். இன்று மனிதனுக்கு புதிய புதிய நோய்கள் உருவாகி வருகின்ற நிலையில் அதனை தீர்க்க கூடிய நவீன வசதிகள் கொண்ட வைத்திய சாலை ஒரு ஊருக்கு இருப்பது அவசியமானதொன்றாகும்.
நிலத் தொடர்பு அமைவிடத்தில் தென்கோடியின் மூலையில் அமையப் பெற்றுள்ள பொத்துவில் பிரதேசத்தில் சகல வசதிகளும் கொண்ட வைத்தியசாலை இல்லை என்ற ஏக்கத்தில் பொத்துவில் சமூகம் வாடிக்காணப்பட்ட போது பொத்துவில் மாவட்ட வைத்தியசாலை ஆதாரவைத்திய சாலையாக தரம் உயரத்தப்பட்டது.
பொத்துவில் ஆதார வைத்தியசாலை எனும் சில்வர் எழுத்துக்களால் அமையப்பெற்ற பதாகை இருக்கும் வடிவுக்கு கூட பொருத்தமான ஆளனியினர் இன்றி அவதியடைகின்றது. பொத்துவில் வைத்தியசாலை என்றால் மிகையாகாது.
பொத்துவில் பிரதேசமானது சுற்றுலாவின் கேந்திரமாகும். நாளாந்தம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பொத்துவில் அறுகம்பையை நோக்கி வந்து கொண்டிருக்கின்ற நிலையில் பயணிகளுக்கு திடீர் நோய் ஏற்பட்டால் எங்கு செல்வது பொத்துவில் வைத்தியசாலைக்குத்தானே ஆனால் அந்த வைத்தியசாலை இன்னும் சரியான வசதிகள் இன்றி காணப்படுகின்றது.
அதுமாத்திரமன்றி அதிகளவான படை வீரர்களும் இங்கு தளமிட்டு இருக்கின்றார்கள் இவர்களுக்கு ஏற்படும் திடீர் நோய்களுக்கு பொத்துவில் வைத்திய சாலைக்குத்தான் வர வேண்டும். ஆனால் ஆதாரமற்ற வைத்திய சாலை நோய்க்கு ஆதாரமாக அமையுமா?
பொத்துவில் வைத்தியசாலையின் வளப்பற்றாக்குறையினை தெரிவிக்கும் முகமாக ஊரின் முக்கியஸ்தர்களை அழைத்து இன்று பொத்துவில் ஆதார வைத்தியசாலை அபிவிருத்திக்குழு கலந்துரையாடலை ஏற்பாடு செய்தது.
பொத்துவில் ஆதார வைத்தியசாலை அபிவிருத்திக்குழுவினரின் கலந்துரையாடலில் வைத்தியசாலை எதிர் நோக்குகின்ற பல்வேறு பிரச்சினைகள் சுட்டிக்காட்டப்பட்டது. அப்பிரச்சினைகளில் மிக முக்கிய பிரச்சினை ஆளனியினரின் வளப்பற்றாக்குறையாகும். 40 சிற்றூழியர்கள் தேவையான நிலையில் 16 சிற்றூழியர்களும் 33 தாதிமார்கள் தேவைக்கு 24 தாதிமார்களும் 17 வைத்தியர்களுக்கு 13 வைத்தியர்களும் விசேட வைத்திய நிபுணர்கள் யாருமற்ற நிலையிலும் அதிகமான நோயாளிகளை 45 கி.மீ. தொலைவில் உள்ள அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கும் 75 கி.மீ கல்முனை ஆதார வைத்தியசாலைக்கும் 95 கி.மீ. மொனறாகலை ஆதார வைத்திய சாலைக்கும் நோயாளிகளை இடமாற்றம் செய்து கொண்டிருக்கின்றது பொத்துவில் ஆதார வைத்தியசாலை என்றால் மறுக்கவோ மறைக்கவோ முடியாது.
பொது வைத்திய நிபுணர்கள் மகப்பேற்று வைத்திய நிபுணர்கள் உடனடியாக தேவைப்பாடாகும். வெளியூர் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாண சபை அமைச்சர்கள் வைத்தியசாலையினை பல முறை பார்வையிட்டு ஆளணியினரை நியமிப்பதாக வாக்குறுதிகள் கொடுக்கின்றார்கள். ஊடகத்துக்கும் அறிக்கை விட்டு ஊருக்கும் சென்று விடுகின்றார்கள். பாவம் அவதியுறுவது அப்பாவி ஏழை மக்கள்தான்.
பொத்துவில் ஆதார வைத்தியசாலை அபிவிருத்திக்குழு கலந்துரையாடலில் பொறுமைக்கும் எல்லையுண்டு பொங்கியெழுந்தார் பிரதேச சபை தவிசாளர் எம்.எஸ். வாஸீத் அவர்கள் எமது பிரச்சினைகளை பலருக்கும் தெரிவித்தும் பயனில்லாத வேளையில் எல்லோரும் ஒன்று சேர்ந்து கவனயீர்ப்பு போராட்டம் நடத்த முன்வர வேண்டும் என்றார்.
அந்த வகையில் வருகின்ற 13 ம் திகதி கவனயீரப்;பு போராட்டம் நடாத்த முடிவும் எடுக்கப்பட்டுள்ளது. எனவே மக்களின் கருத்துக்கு ஏற்ப ஆளணியினரை நியமிக்க மேல்மட்டம் முயற்ச்சி செய்ய வேண்டும். வைத்தியசாலையினையினை பல முறை பார்வையிட்டு சென்ற அமைச்சர் அதாவுல்லாஹ் அவர்களும் மாகாண சபை அமைச்சர்களான எம. எஸ்.உதுமாலெவ்வை மற்றும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் மன்சூர் அவர்களும் பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் இக்குறைகளை நிவர்த்தி செய்து ஏழை மக்களின் துயர் துடைப்பார்களா?
0 comments :
Post a Comment