அடுத்த ஜனாதிபதித் தேர்தலை நீதியாகவும் நியாயமானதுமாக நடத்துவதற்கான ஆலோசனைகளை நேற்று தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவிடம் ஐ.தே.க. முன் வைத்தது.
ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கொழும்பு பிரசார காரியாலயத்தின் திறப்புவிழாவில் அரச நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் பங்குபற்றியமையை அடிப்படையாகக் கொண்டே இவ் ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டன.
இதற்கமைய ஐ.தே.கட்சியின் தலைமைத்துவ சபை தலைவர் கரு ஜெயசூரிய, பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, உப தலைவர் ரவி கருணாநாயக்க மற்றும் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான ஜோசப் மைக்கல் பெரேரா உள்ளிட்ட எம்.பி.க்கள் இராஜகிரியவிலுள்ள தேர்தல் செயலகத்தில் வைத்து குறித்த ஆலோசனைகளை தேர்தல் ஆணையாளரிடம் கையளித்தனர்.
நடந்து முடிந்த ஊவா மாகாண சபை தேர்தலில் சட்டவிதிமுறை பலவாறு மீறப்பட்டமையை அடிப்படையாகக் கொண்டே இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலை இலக்குவைத்து ஆளும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி கொழும்பு பான்ஸ் பிளேஸில் பிரசாரக் காரியாலயமொன்றை கடந்த மாதம் 25 ஆம் திகதி திறந்துவைத்தது.
மேற்குறித்த காரியாலய திறப்புவிழாவில் மத்திய வங்கி ஆளுநர் உள்ளிட்ட 62 அரச நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் பங்குபற்றியுள்ளனர்.
இதனை அடிப்படையாகக் கொண்டே அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் எந்த சந்தர்ப்பத்திலும் அரச ஊழியர்களை தேர்தல் பிரசாரப் பணிகளில் ஈடுபடுத்தக்கூடாது. அதற்கான வழிவகைகளை தேர்தல் செயலகம் எடுக்க வேண்டும்.
அத்தோடு தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கு சர்வதேச கண்காணிப்பாளர்களுக்கும் இடமளிக்க வேண்டும். மேலும், ஜனாதிபதி தேர்தல் பிரசாரப் பணிகளுக்காக ஆளும் கட்சி 45 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட வேண்டும்.
மேற்குறித்த ஆலோசனைகளையே ஐக்கிய தேசியக் கட்சி முன்வைத்துள்ளது.
இது தொடர்பில் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்த நாயக்க ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்;
ஆளும் கட்சியானது ஜனாதிபதித் தேர்தலை இலக்குவைத்து தற்போதே சட்ட விதிமுறைகளை மீறும் செயலில் களமிறங்கியுள்ளது. ஆகவே, இந்த தேர்தல் நீதியானதும் நியாயமானதுமாக இடம்பெறும் என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.
எனவே, குறித்த ஆலோசனைகளை நிறைவேற்ற தேர்தல் ஆணையாளர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
0 comments :
Post a Comment