பி. முஹாஜிரீன்-
அட்டாளைச் சேனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாலமுனைக் கிராமத்தில் மின்சார வசதியில்லாத ஏழைக் குடும்பங்களுக்கு இலவச மின்சார வசதி பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கட்டாரில் தொழில் புரிவோர் அமைப்பான அல் மீஸான் நலன்புரி அமைப்பினுடைய தலைவர் எஸ்.ரி.எம். ஹூதைப் தெரிவித்தார்.
அல் மீஸான் நலன்புரி அமைப்பினுடைய விசேட கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை (24) அமைப்பினுடைய தலைவர் எஸ்.ரி.எம். ஹூதைப் தலைமையில் நடைபெற்றபோது மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டது.
இதனடிப்படையில் அடிப்படை வசதிகளற்ற ஏழைக் குடும்பங்கள் தொடர்பான தகவல்கள் திரட்டுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு நிருவாகக் குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களது ஏனைய தேவைகள் தொடர்பான விபரங்களும் சேகரிக்கப்படுகின்றன.
இதற்கான தகவல் சேகரிப்பதற்காக அல் மீஸான் நலன்புரி அமைப்பின் உப தலைவர் எம்.எஸ். உவைஸ், உப செயலாளர் ஏ.எல் முர்ஸித், உறுப்பினர்களான ஏ.பி. நாசர், எஸ். முஹாஜிரீன் ஆகியோர் உள்ளடங்கிய குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தகவல் சேகரிப்பு நிறைவடைந்ததும் தெரிவு செய்யப்படும் குடும்பங்களுக்கு மிக விரைவில் மின்சார வசதி உட்பட ஏனைய அடிப்படைத் தேவைகளும் நிறைவேற்றிக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுமென அமைப்பின் தலைவர் எஸ்.ரி.எம். ஹூதைப் மேலும் கூறினார்.

0 comments :
Post a Comment