ஜனாதிபதி தேர்தல் முதலில் நடத்தப்படாது பொதுத் தேர்தல் நடத்தப்படுவதையே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் விரும்புவதாக கருத்து வெளியிட்ட நீதியமைச்சரும் முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் தனது கட்சி ஏனைய அரசியல் கட்சிகளுடனும் இறுதியில் ஆளும் கட்சியுடனும் சமகால அரசியல் பிரச்சினைகள் உட்பட சில முக்கிய விடயங்கள் பற்றி கலந்துரையாடவுள்ளதாக தெரிவித்தார்.
இன்றைய பாராளுமன்றம் வாக்களித்த மக்களின் அபிலாசைகளைப் பிரதிபலிக்கவில்லையெனவும் கடந்த தேர்தலில் ஐ.தே.க. உட்பட ஏனைய கட்சிகளின் சார்பில் போட்டியிட்டு வெற்றியீட்டிய பின்னர் ஆளும் கட்சியில் இணைந்து கொண்டவர்களின் எண்ணிக்கையே அதிகமாக காணப்படுகிறது. இது மக்களின் உண்மையான ஆணையைப் பிரதிபலிக்கவில்லை எனவும் அவர் கூறினார்.
அமைச்சர் ஹக்கீம் கேசரிக்கு தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்;
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐ.தே. கட்சியிலிருந்து ஆளும் கட்சியுடன் சேருவதற்கு நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அதனாலேயே கட்சி மாறியது. ஐ.தே. கட்சியுடன் முஸ்லிம் காங்கிரஸ் ஏற்படுத்திக்கொண்டிருந்த புரிந்துணர்வு கொள்கை அடிப்படையில் இது நடைபெற்றது.
சமகால அரசியல் மற்றும் முக்கிய விடயங்கள் தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்குள் கலந்துரையாடல்களை நடாத்தவுள்ளது. அடுத்த வாரம் கொழும்புஇ கம்பஹாஇ களுத்துறை மற்றும் மாத்தறை ஆகிய நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த மாகாண சபை தேர்தலில் போட்டியிட்ட முஸ்லிம் காங்கிரஸ் அபேட்சகர்கள் கொழும்புக்கு அழைக்கப்பட்டு கலந்துரையாடல் மேற்கொள்ளப்படவுள்ளன.
ஏனைய அரசியல் கட்சிகளுடனும் முஸ்லிம் காங்கிரஸின் முக்கியஸ்தர்களுடனும் சமகால அரசியல் நிலைமை பற்றி கலந்துரையாடி பெற்றுக் கொள்ளப்படும் தகவல்களை மையமாகக் கொண்டு ஆளும் தரப்புடன் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றார். பாராளுமன்ற தேர்தலே முதலில் நடாத்தப்பட வேண்டும் என்பதே முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாடாக உள்ளது என்றார். கட்சியின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ரி. ஹசன் அலியும் அமைச்சரின் கருத்தினை உறுதி செய்தார்.

0 comments :
Post a Comment