பிரதான எதிர்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் பலத்தினை கண்டு அரசாங்கம் அச்சம் அடைந்துள்ளது. அரசாங்கம் எத்தனை சித்து விளையாட்டுக்கள் செய்தாலும் ஐக்கிய தேசிய கட்சியின் வெற்றியை இனி தடுத்து நிறுத்த முடியாது என்று ஐக்கிய தேசிய கட்சியின் பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
ஸ்ரீகொத்தாவில் அமைந்துள்ள ஐக்கிய தேசிய கட்சியின் தலைமை செயலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து அங்கு கருத்து தெரிவிக்கையில்,
இந்த நாட்டில் இன்று ஜனநாயகம் செத்துக் கொண்டிருக்கிறது. அதற்கு முக்கிய காரணமாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை காணப்படுகின்றது. எனவே, அதனை இல்லாது செய்து ஜனநாயகத்தினை நாட்டில் நிலைநாட்ட வேண்டும். என்பதே ஐக்கிய தேசிய கட்சியின் நோக்கமாக உள்ளது.
அரசாங்கம் மக்களுக்கு என்று எதுவுமே செய்யவில்லை. மாறாக உலக வங்கியிடமும் சர்வதேச நாணய நிதியத்திடமும் மக்களை கடனாளிகளாக அடகு வைத்துள்ளது. இந்த நிலைமைகளை மாற்ற வேண்டும். எமது நாட்டை காப்பாற்ற வேண்டும். அதற்கு ஐக்கிய தேசிய கட்சி முழு முயற்சியுடன் செயற்படும்.
மேலும், அரசாங்கம் மக்களிடம் தனது செல்வாக்கை இழந்து விட்டது. மக்களை இனியும் அரசாங்கத்தினாலும் ஏமாற்ற முடியாது. அது ஊவா தேர்தலில் தெட்டத்தெளிவாக வெளிப்பட்டுள்ளது.
இந்த நாட்டில் சனநாயகம் நிலை பெற வேண்டுமென்றால் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் வெற்றி இன்றியமையாத ஒன்றாகும். அதற்கு அனைத்து தரப்பினையும் ஒன்றிணைத்து செயற்பட நாம் தயாராக உள்ளோம்.
ஆயினும் அரசாங்கம் ஐக்கிய தேசிய கட்சியின் நடவடிக்கைகளை புலனாய்வு பிரிவினரின் உதவியோடு நோட்டமிட்டு வருகின்றது. இது எமக்கு நன்றாகவே தெரிவும் இத்தருணத்தில் ஒரு விடயத்தினை நாம் தெளிவுப்படக் கூறவேண்டும். அதாவது, ஐக்கிய தேசிய கட்சி அரசாங்க தரப்பில் உள்ள மிக முக்கியமானவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. அதன் மூலம் பல தீர்மானங்களுக்கும் வந்துள்ளோம்.
இதனை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை இதனையாருக்கும் பயந்து ஒழிக்க வேண்டிய தேவையும் எமக்கு இல்லை. எனவே, தெட்ட தெளிவாகவே கூறுகிறோம் நாம் அனைத்து தரப்புடனும் பேச்சுவார்த்தை நடாத்தி இந்நாட்டில் ஜனநாயகம் நிலை பெறச்செய்வதற்கு முயற்சிப்போம். சோபித்த தேரர், பொதுபலசேனா, முஸ்லிம் காங்கிரஸ் என்று அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் நாம் உள்வாங்கி தமிழ் சிங்களம் முஸ்லிம் என்று அனைத்து மக்களின் பிரச்சினைகளுக்கும் தீர்வு பெற கூடிய தீர்மானங்களை முன்னெடுப்போம்.
ஜனாதிபதி தேர்தலில் நாம் வெற்றிப் பெற்றால் நிறைவேற்று அதிகாரத்தின் ஜனாதிபதி முறைமையை இல்லாது செய்வோம். அத்தோடு 17ஆவது திருத்தத்தினை மீள கொண்டு வருவோம். தேர்தல் முறையை மாற்றியமைப்போம். மேலும், பாராளுமன்றம் மூலமாக எமது எதிர்பார்ப்பினை அடையவும் அல்லது மக்கள் தீர்ப்பு மூலமாக தீர்மானங்களை நாட்டில் நிறைவேற்றுவதற்குமான நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவோம். அப்போது தான் இந்த நாட்டில் ஜனநாயகம் உயிர் பெறும்.
எமது தேர்தல் வெற்றிக்கு ஒத்துழைப்பு வழங்கும் அனைவரையும் இணைத்துக் கொண்டு புதிய முறைமை ஒன்றினை நோக்கி நாட்டினை ஈர்த்துச் செல்வோம்.
இன்று அரசாங்கத்திற்குள்ளேயே பிளவு ஏற்பட்டுள்ளது. அங்கு நடக்கும் சர்வாதிகாரப் போக்கு அவர்களுக்கே சலிப்பினை ஏற்படுத்தி விட்டது. எனவே, இந்த நாட்டில் மாற்றம் ஒன்று ஏற்படவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
இதற்கு ஜனாதிபதி தேர்தல் வழிவகுக்கும் ஆயினும் தேர்தல் நியாயமானதாகவும் சுதந்திரமானதாகவும் நடைபெறவேண்டும். இராணுவ அடக்குமுறைகள் இன்றி மக்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்படாமல் நியாயமானதாக நடைபெற வேண்டும். இதற்கு தேர்தல்கள் ஆணையகமும் தேர்தல் திணைக்களமும் உறுதியளிக்க வேண்டும் என்றார்.

0 comments :
Post a Comment