முஸ்லிம்களுக்கு மிகவும் சோதனை நிறைந்த இக்கால கட்டத்தில் ஈமானிய பலத்துடன் ஏனைய சமூகத்தினருக்கு முன்மாதிரியாக நடந்து கொள்வதற்கு நாம் அனைவரும் திடசங்கற்பம் பூணுவோம் என்று கல்முனை மாநகர முதல்வரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிச் செயலாளர் நாயகமுமான சட்ட முதுமாணி எம்.நிஸாம் காரியப்பர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பெருநாள் வாழ்த்து செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது;
இன்று எமது உள்நாட்டில் மாத்திரமல்லாமல் சர்வதேச ரீதியில் முஸ்லிம்கள் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர். முஸ்லிம்களின் உயிர்களுக்கும் உடமைகளுக்கும் உத்தரவாதமில்லாத சூழல் ஏற்பட்டிருக்கிறது. சில நாடுகளில் முஸ்லிம்களின் வாழ்வுரிமை கேள்விக்குறியாக்கப்பட்டிருக்கிறது
ஆனால் முஸ்லிம்களையும் புனித இஸ்லாம் மார்க்கத்தையும் இறைவன் நிச்சயம் பாதுகாப்பான். முஸ்லிம் உம்மாவை இந்த உலகில் இறைவன் ஸ்திரப்படுத்துவான். அதில் நமக்கு உறுதியான நம்பிக்கை உண்டு. எனினும் அதற்கான தேடலும் முயற்சியும் நம்மிடம் இருக்க வேண்டும். அதற்கு சமூக ஒற்றுமையுடன் நம்மை நாம் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.
அதேவேளை புனித இஸ்லாம் மார்க்கத்தை பின்பற்றுகின்ற நாம் அதனை பற்றுறுதியுடன் கடைப்பிடித்து ஏனைய சமூகங்களுக்கு முன்மாதிரியாக நடந்து கொள்ள வேண்டியது இன்றைய சூழ்நிலையில் மிகவும் அவசியமான ஒரு தேவையாக கருதப்படுகிறது. அதற்காக முடிந்தளவு நம்மை நாம் அர்ப்பணிக்க வேண்டும். அதன் மூலம் நிச்சயம் நமக்கு வெற்றி உண்டு.
ஏனைய சமூகத்தினர் எம்மை விரல் நீட்டி குற்றம் சுமத்துகின்ற அளவுக்கு எமது செயற்பாடுகள் அமைந்து விடக்கூடாது. சமூக ஒற்றுமை, இன ஐக்கியம், பரஸ்பரம் புரிந்துணர்வு என்பன கட்டியெழுப்பப்பட வேண்டும். இஸ்லாமிய வழிமுறைகளை மனத்தூய்மையுடன் கடைப்பிடிப்பதன் மூலம் இந்தப் பண்புகளை நம்மில் வளர்த்துக் கொள்ள முடியும்.
புனித ஹஜ் நமக்கு கற்றுத் தருகின்ற வாழ்வியல் நெறிமுறைகளை முழுமையாக கடைப்பிடித்து ஒழுகுவதன் மூலம் நமது ஈமானையும் சமூக ஒற்றுமையையும் பலப்படுத்திக் கொள்வதுடன் மாற்று மத சகோதரர்களுடன் நல்லுறவை பேணி சகவாழ்வை முன்னெடுப்பதற்கு எல்லாம் வல்ல இறைவனை இப்புனிதத் திருநாளில் பிரார்த்திக்கின்றேன். -ஈத்முபாரக்-
.jpg)
0 comments :
Post a Comment