அக்கரைப்பற்று பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட நுரைச்சோலை விவசாயக் கண்டத்தில் 1250 ஏக்கர் காணியில் பல வருடங்களாக மேற்கொண்டுவரும் நெற்செய்கையை தொடர்ந்தும் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்ணனிகளின் அம்பாறை மாவட்ட சம்மேளனத்தினால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இது தொடர்பாக அனுப்பி வைக்கப்பட்டுள்ள மகஜரிலேயே இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
முன்னணிகளின் தேசிய உப தலைவரும் ஓய்வுபெற்ற கிராம உத்தியோகத்தர் சங்கத்தின் செயலாளருமான எம்.ஐ. உதுமாலெவ்வையினால் ஒப்பமிட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ள இம்மகஜரில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
சுமார் 500 விவசாயக் குடும்பங்கள் 1250 ஏக்கர் காணியில் இந் நொரைச்சோலை பிரதேசத்தில் பல வருடங்களாக நெற் செய்கை மேற்கொண்டு வருகின்றனர். தற்பொழுது சீனிக்கூட்டுத் தாபனத்தினால் கரும்புச்செய்கை பண்ணுமாறு பலவந்தமாக அறிவிக்கப்பட்டள்ளது. இவ்விவசாயிகள் அனைவரும் தொடர்ந்தும் இக்காணிகளில் விவசாயம் (நெற்செய்கை) மேற்கொள்ளவே விரும்புகின்றனர்.
எனவே அதிமேதகு ஜனாதிபதியான நீங்கள் இது விடயமாக நடவடிக்கை எடுத்து இவ் ஏழை விவசாயக் குடும்பங்களினது நன்மை கருதி இக்காணியில் நெற்செய்கை மேற்கொள்ள உதவுமாறு அம்மகஜரில் கேட்கப்பட்டுள்ளது.
இது விடயமாக அமைச்சர்களான ரஊப் ஹக்கீம், ஏ.எல்.எம்.அதாஉல்லா, றிசாத் பதியுதீன், ஏ.எச்.எம்.பௌசி ஆகியோருக்கு முறைப்பாடு தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென அம்மகஜரில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

0 comments :
Post a Comment