மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளனர்.
நேற்று இரவு 10 மணியளவில் மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு -கல்முனை பிரதான வீதியில் கிரான்குளத்தில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
கிரான்குளம் வளைவு பகுதியில் வீதியை கடக்க முற்பட்ட மூவர் மீது மட்டக்களப்பில் இருந்து கல்முனைக்கு சென்ற வான் மோதியதன் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது படுகாயமடைந்த மூவரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டபோதிலும் அதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் கிரான்குளம்,ஆலையடிவீதியை சேர்ந்த உருத்திரநாதன்(22வயது) எனவும் படுகாயமடைந்தவர்கள் கிரான்குளம் பிரதான வீதியை சேர்ந்த சுரேஸ்குமார்(21வயது),வீச் வீதியை சேர்ந்த பிரதீபன்(24வயது)எனவும் காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் வான் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் வானும் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில் ஓந்தாச்சமடத்தில் நேற்று திங்கட்கிழமை பிற்பகல் 4 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் முதியவர் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.
களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோட்டைக்கல்லாற்றினை சேர்ந்த நல்லையா நவரெட்ணம் (65 வயது) என்பவரே உயிரிழந்துள்ளார்.
வேகமாக வந்த தனியார் பஸ்வண்டி துவிச்சக்கர வண்டியில் சென்றவரை மோதியதன் காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இவர் ஓந்தாச்சிமடத்தில் உள்ள மர ஆலை ஒன்றில் கணக்காளராக தொழில் புரிந்துவந்த நிலையில் தனது தொழில் நிலையத்துக்கு அருகில் உள்ள கடைக்கு சென்று திரும்பும்போதே இந்த விபத்து நடைபெற்றுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தின் போது உயிரிழந்தவரின் சடலம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டு பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் இன்று ஒப்படைக்கப்பட்டுள்ளது.
களுவாஞ்சிகுடி போக்குவரத்து பொலிசார் இது தொடர்பான விசாரணையை மேற்கொண்டதுடன் சாரதியை கைது செய்துள்ளதுடன் பஸ் வண்டியும் தடுத்துவைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசாரணையை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

0 comments :
Post a Comment