தென் கிழக்குப் பல்கலைக் கழகத்தின் ஸ்தாபகரான எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களை அந்த பல்கலைக் கழகத்தில் நினைவுகூர்வதற்கு அதன் நிர்வாகத்தினர் முன்வராமல் இருட்டடிப்பு செய்வதன் பின்னணி என்ன என்று கிழக்கு மாகாண சபையின் முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவரும் கட்சியின் சர்வதேச விவகாரங்களுக்கான பிரதிப் பணிப்பாளருமான ஏ.எம்.ஜெமீல் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்;
"இன்று முஸ்லிம் சமூகத்தின் கல்விக் கலங்கரை விளக்காகத் திகழ்கின்ற தென் கிழக்குப் பல்கலைக் கழகம் மறைந்த எமது மாபெரும் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களின் தூரதிருஷ்டியான சிந்தனையின் பேரில் தனது அரசியல் பலத்தின் ஊடாக வென்றெடுத்த ஒரு மாபெரும் சொத்தாகும். இது சமூகத்திற்காக அவரால் மேற்கொள்ளப்பட்ட ஒரு வரலாற்றுச் சாதனையுமாகும்.
எம்.எச்.எம்.அஷ்ரப் என்கின்ற ஒரு தலைவன் இந்த மண்ணில் பிறந்திருக்கா விட்டால் தென் கிழக்கு பல்கலைக் கழகம் எனும் இந்த கலங்கரை விளக்கும் எமது சமூகத்தில் உதயமாகி- பிரகாசித்திருக்காது என்பது திண்ணம். இதற்காக நாமும் கடுமையாகப் போராடினோம்.
முஸ்லிம் சமூகத்தின் உரிமைப் போராட்டத்திற்கு களமாக அமைய வேண்டும் என்கின்ற ஓர் உயர்ந்த நோக்கத்தை இலக்காகக் கொண்டு உருவாக்கப்பட்ட இப்பல்கலைக் கழகம் இன்று அதன் நோக்கத்தில் இருந்து விலகி- வழி தவறிச் செல்வதை அவதானிக்க முடிகிறது.
ஏதோ கட்டிடங்களைக் கட்டுவதும் கொந்தராத்து செய்வதும் தொழில் வாய்ப்புகளை வழங்குவதற்குமான ஒரு நிறுவனம் போன்றே இப்பல்கலைக் கழகம் இன்று நோக்கப்படுகிறது. இந்த பின்னணியில்தான் அதன் ஸ்தாபகர் அப்பல்கலைக் கழகத்தினால் மறக்கடிக்கப்பட்டிருப்பதாக உணர்கின்றோம். இது மிகவும் கவலைக்கும் கண்டனத்திற்கும் உரிய விடயமாகும்.
வருடாந்தம் செப்டம்பர் 16ஆம் திகதி மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களின் நினைவு தினமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இவ்வருடம்மும் அவரது 14 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு கிழக்கு மாகாணம் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மூலை முடுக்கெல்லாம் ஞாபகார்த்த நிகழ்வுகள் இடம்பெற்ற போதிலும் அவர் பெற்றெடுத்த தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தில் மாத்திரம் அவ்வாறான நிகழ்வு எதுவும் ஏன் ஏற்பாடு செய்யப்படவில்லை என்கின்ற கேள்வி அஷ்ரப் அவர்களை நேசிக்கின்ற அனைத்து உள்ளங்கள் மத்தியிலும் எழுகின்றது.
குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் அனைத்து பாடசாலைகளிலும் தலைவர் தினம் பிரகடனம் செய்யப்பட்டு நினைவு நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்ததுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மாத்திரமல்லாமல் மாற்றுக் கட்சிகளின் முக்கியஸ்தர்களினாலும் இந்நிகழ்வுகள் பிரதேச ரீதியாக நடத்தப்பட்டன.
இந்நிலையில் இதே மாவட்டத்தில் தனது இதயம் என்று அஷ்ரப் அவர்களினால் வர்ணிக்கப்பட்ட ஒலுவில் பிரதேசத்தில் அமைந்துள்ள தென் கிழக்குப் பல்கலைக் கழகம் ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்யாமல் அவர் மறக்கடிக்கப்பட்டதன் மர்மம் என்ன என்று எமது கல்விச் சமூகம் அங்கலாய்க்கிறது.
இந்நிலையானது தற்போதைய உபவேந்தர் பதவியேற்ற காலம் தொட்டு நீடித்து வருகின்றது. உண்மையில் இது அரசியல் உள்நோக்கத்துடன் திட்டமிட்டு செய்யப்படுகின்ற ஒரு புறக்கணிப்பாகவே பார்க்க வேண்டியுள்ளது. ஏனெனில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு மாற்றுத் தளத்தில் நின்று அரசியலில் ஈடுபட்டு- தேர்தலில் குதிக்கும் எண்ணம் உபவேந்தருக்கு இருப்பதாகவும் அதன் பேரிலேயே அந்தக் கட்சியின் ஸ்தாபகத் தலைவர் தொடர்பான நினைவுக் கூட்டம் ஒன்றைக் கூட நடாத்துவதை அவர் தவிர்த்து வருவதாகவும் பல்கலைக் கழக வட்டாரத்தில் பரவலாக பேசப்படுகிறது.
அண்மையில் வழங்கப்பட்ட பல்கலைக் கழகத்திற்கான கவுன்சில் உறுப்பினர்கள் நியமனத்தில் கூட முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினால் பிரேரிக்கப்பட்டவர்களை உபவேந்தர் நிராகரித்திருந்தமையும் இதன் பின்னணியில்தான் என்றும் நிரூபணமாகியுள்ளது.
தென் கிழக்குப் பல்கலைக் கழகத்தில் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்கள் தொடர்பில் ஒரு ஞாபகார்த்த நிகழ்வை நடாத்தும் போது அவரது அறிவு, ஆளுமை, திறமைகளை பிரயோகிப்பதற்கு அச்சாணியாக அமைந்திருந்த முஸ்லிம் காங்கிரஸ் பற்றியும் அதன் தேவைப்பாடுகள் தொடர்பிலும் பேச்சாளர்களினால் சிலாகித்துப் பேசப்படும் என்கின்ற அச்சமே அவரது நினைவு தினத்தை ஒட்டுமொத்தமாக புறமொதுக்குவதற்கு காரணம் என்று கருதுகின்றோம்.
இது மிகப் பெரும் அநியாயமாகும். தர்மத்திற்கு முற்றிலும் மாறான இந்த செயற்பாட்டை எவரும் கண்டு கொள்ளாமல் இருக்க முடியாது. தனது எதிர்கால சுயநல அரசியலுக்காக ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்றையே இருட்டடிப்பு செய்வதற்கு உபவேந்தர் துணிந்திருப்பதானது மிகப் பெரும் அக்கிரமமாகும்.
அது மாத்திரமல்லாமல் உபவேந்தரின் இந்த மோசமான செயற்பாடு முஸ்லிம் சமூகத்தினருக்கும் எதிர்கால சந்ததியினருக்கும் அவர் செய்யும் பெரும் துரோகமுமாகும் என்பதை அவர் உனஎந்து கொள்ள வேண்டும். இல்லையேல் அஷ்ரப் எனும் மா மனிதரை நேசிக்கின்ற மக்களால் உணர்த்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படலாம் என இந்த சந்தர்ப்பத்தில் சொல்லி வைக்க விரும்புகின்றேன்" என்று குறிப்பிட்டார்.
.jpg)
0 comments :
Post a Comment