கலைத்துறை, ஊடகத் தொடர்பாடல், இஸ்லாமிய பாடல் துறைக்கு அளப்பரிய பங்களிப்புச் செய்த கலாநிதி இசைக்கோ என்.எம். நூர்தினீன் மறைவு குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் ஆழ்ந்த கவலை தெரிவிக்கின்றது.
அல்ஹாஜ் நூர்தீனின் மறைவு குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன், செயலாளர் ரிப்தி அலி ஆகியோ இணைந்து விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;
சுகவீனமுற்று சிறிதுகாலம் எழுந்து நடமாட முடியாத நிலை ஏற்படும்வரை தனது கலைத்துறை ஈடுபாடு, பொதுநலன் நோக்கு நடவடிக்கைகள், ஊடகத் தொடர்பாடல்கள் என்று இசைக்கோ நூர்தீன் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்ததை எம்மால் எளிதில் மறந்துவிட முடியாது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தைப் பொறுத்தவரை, அதன் ஸ்தாபக அங்கத்தவரும் செயற்குழுவில் பல பதவிகளை வகிந்து அதன் ஆலோசகராக பணிபுரிந்த மர்ஹூம் நூர்தீன் அதன் வளர்ச்சிக்காக பெரும் பங்களிப்புச் செய்த ஒருவர். பொருளாதார ரீதியாக எமது இயக்கத்தின் வளர்ச்சிக்கு அவர் நிறைந்த பங்களிப்புச் செய்திருந்ததை நன்றியுடன் நினைவுகூருகிறோம்.
மர்ஹூம் நூர்தீன், கலைஞர்களுக்கு வாழ்வளிப்பதில் சிறப்பாக பங்களிப்புச் செய்திருக்கிறார். இளம் கலைஞர்களை உருவாக்குவதற்காக தனது அலுவகத்தை ஒதுக்கி, உபகரணங்களைப் பயன்படுத்தி பயிற்சிகளை வழங்கி பல கலைஞர்களை உருவாக்கியுள்ளார்.
பெரும் கலைஞராக இருந்தும் பல்வேறு வர்த்தக நிறுவனங்களில் முகாமைத்துவ பணிப்பாளராகவு இருந்தும்கூட இடாம்பிகமோ, கர்வமோ இன்றி சிறுபிள்ளைகள் போல் எம்மோடு ஓடியாடி சமூக எழுச்சிக்காக உழைத்திருக்கிறார். இனிய பண்புகளை உடைய அமைதியைப் பேணுகின்ற, மற்றவர்களுக்கு எப்போதும் உதவும் எண்ணமுடைய நூர்தீனின் மறைவு இத்துறையில் ஒரு பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் இவரது துணைவியாருக்கும், பிள்ளைகளுக்கும் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிப்பதோடு, அன்னாருக்கு ஜன்னத்துல் பிர்தெளஸ் எனும் சுவர்க்கம் கிடைப்பதற்கு பிரார்த்திக்கின்றது.
0 comments :
Post a Comment