முஸ்லீம் அமைச்சர்களின் கூட்டுத் தலைமையே ஏற்கத்தக்கது.

பொத்துவில் எம்.ஏ.தாஜகான்-

பேரினவாதத்தின் பிடியில் முஸ்லீம் சமூகம் சிக்குண்டுள்ள இவ்வேளையில் தமது அரசியல் இலக்குகளை அடைவதற்கான அக்கறையுள்ளவர்கள் பிராந்திய ரீதியாக முஸ்லீம்களை பிளவுபடுத்தும் வகையில் வெளிப்படுத்தும் கருத்துக்கள்; குறித்து முஸ்லீம்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என்று முற்போக்கு முஸ்லீம் காங்கிரஸ் முதல்வர் சட்டத்தரணி எம் இஸ்மாயில் ஆதம்லெப்பை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து தெரிவிக்கையில்..

2014.07.24ம் திகதிய வீரகேசரி நாளிதழிலும் 2014.07.25ம் திகதிய நவமணிp வார இதழிலும் 'அமைச்சர் ஹக்கீம் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் தலைவராக இருந்து கொண்டு முஸ்லீம்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது' என்றும் 'முஸ்லீம்களுக்கு இரட்டைத் தலைமைத்துவம் தேவை' என்றும்; முன்னாள் பிரதியமைச்சர் எம்.எச். சேகு இஸ்ஸதீன் தெரிவித்திருந்த கருத்துக்கள் தொடர்பாக மு.மு.கா முதல்வர் பத்திரிகைகளுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, கடந்த ஜுன் மாத நடுப்பகுதியிலும் அதை அண்மித்த நாட்களிலும் களுத்துறை மாவட்ட முஸ்லீம்கள் மீது யாருமே எதிர்பார்த்திராத வகையில் பேரினவாதிகள் வன்செயல்களை கட்டவிழ்த்துவிட்டமையும் அதன் பின்னர் முஸ்லீம்களை பயங்கரவாதிகள், அடிப்படைவாதிகள் ,குழப்பத்தை உருவாக்கியவர்கள் என்றும் இல்லாத பொல்லாதவற்றைத் தமது அறிக்கைகளால் வெளிப்படுத்தி அபாண்டமான பழிகளைச் சுமத்தியமையும் யாவரும் அறிந்ததே.

களுத்துறை மாவட்டத்தின் முஸ்லீம் பிரதேசங்களில் நடந்த அசம்பாவிதங்கள் இலங்கை வாழ் முஸ்லீம் சமூகத்தின் மத்தியில் ஏற்படுத்தியுள்ள பாதிப்பும் தாக்கமும் சாதாரணமானதொன்று எனக் கணிப்பதற்கும் மறப்பதற்கும் உரியதுமல்ல. இது போன்றதொரு பிரச்சினைக்கு முகம்கொடுப்பதற்கு சகல முஸ்லீம் பிரதிநிதிகளும் , தலைமைகளும் சம்பந்தப்படவேண்டும் என்ற சிந்தனை இன்று மக்கள் மத்தியில் உருவாகியுள்ளது.

இச்சம்பவங்கள் நடைபெற்ற சந்தர்ப்பத்தில் நமது தலைவர்கள் சிலரின் நடவடிக்கைகள் சமூகத்தின் பல திறத்தவராலும் விமர்சனத்துக்குள்ளாகிய போதிலும் ஜுலை மாதத்தின் முதல் வாரம் தொடங்கி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் வௌ;வேறு கட்சிகளைச் சேர்ந்த முஸ்லீம் அமைச்சர்கள் ஐவர்( கௌரவ அமைச்சரகளான றஊப் ஹக்கீம், ஏ.எச். எம். பௌஸி, ஏ.எல்.எம். அதாவுல்லர் பசீர் சேகுதாவுத், றிசாட் பதியுதீன் ஆகியோர்.) ஒன்றிணைந்து இலங்கையில் முஸ்லீம் சமூகம் பயங்கரவாதத்தை ஆதரிக்கும் சமூகமல்ல. சுயலாபம் கருதி இலங்கை முஸ்லீம் சமூகத்தை இலக்கு வைத்து செயற்படும் தரப்பினர் தமது செயற்பாடுகளையும் முஸ்லீம்களுக்கு எதிரான பிரச்சாரங்களையும் வன்முறைகளையும் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று துணிச்சலான அறிக்கை ஒன்றினை விடுத்திருந்தனர்.

இவ்வாறான அறிக்கையை அமைச்சர்கள் ஒன்றிணைந்து கையொப்பமிட்டு வெளிப்படுத்தியமையானது இலங்கைவாழ் முஸ்லீம்களை ஆறுதல்படுத்திய நடவடிக்கையாகும். இலங்கைவாழ் முஸ்லீம்கள் ஒரு கூட்டுத் தலைமையின் கீழ் தமது எதிர்கால இருப்பையும் கலாசார பொருளாதார சுதந்திரத்தையும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியத் தேவைப்பாடு ஏற்பட்டுள்ளதை உணர்ந்து தமது கட்சி வேறுபாடுகளை கைவிட்டு அமைச்சர்கள் ஐவரும் ஒன்றிணைந்து வேற்றுமையில் ஒற்றுமை கண்டுள்ளமை வரவேற்கவேண்டியதாகும்.

இந்த அறிக்கையில் கைச்சாத்திட்ட அமைச்சர்களில் மூவர் வடகிழக்கைச் சேர்ந்தவர்கள் என்பதும் இங்கு கவனிக்கத்தக்கதாகும். முஸ்லீம்களின் பொதுப் பிரச்சினையில் முஸ்லீம் தலைவர்களின் பிராந்திய சிந்தனைகளுக்கப்பால் முஸ்லீம் சமூகத்தின் நன்மைக்காக கூட்டான செயற்பாடு பங்களிப்பு தேவை என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.

இவ்வாறான சூழ்நிலையில் முஸ்லீம்களின் அதிகபட்ச ஆணையையும் எட்டுப் பாராளுமன்ற உறுப்பினர்களையும், பதினொரு மாகாண சபை உறுப்பினர்களையும், நூற்றுக்கு மேற்பட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களையும் கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியில் பிராந்திய ரீதியாக இரட்டைத் தலைமைத்துவம் உருவாக வேண்டும் என்ற ரீதியில் கருத்துத் தெரிவித்திருப்பதை ஏற்க முடியாதுள்ளது. 

பிராந்திய ரீதியான சிந்தனை முஸ்லீம்கள் மத்தியில் உருவாகுவதற்கும் ஏனைய கட்சிகளில் அங்கம் வகிப்பவர்களும் வடகிழக்குப் பிராந்தியத்திற்கொரு தலைமையும் , தென்பிராந்தியத்திற்கொரு இன்னொரு தலைமையும் என்று சிந்திப்பார்களாயின் பிரிவினையும் வேறுபாடும் உருவாகி இலங்கை முஸ்லீம் சமூகம் இரண்டுபட்டுவிடும். முஸலீம்களின் குரல் பலவீனமடைந்துவிடும். இதனால் பேரினவாதிகளும் கூத்தாடிகளுமே நன்மையடைவார்கள். 

ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் எனும் அரசியல் இயக்கத்தின் உயரிய நோக்கங்கங்கள் சீரழிக்கப்பட்டுவிடும்.
1980ல் உருவாகிய ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் என்ற சுயாதீன இயக்கத்தின் கருத்தேற்பை உருவாக்கிய நால்வரில் ஒருவன் என்ற வகையில் நான் இதனை இச்சந்தர்ப்பத்தில் வெளிப்படுத்தவேண்டியுள்ளது. 
 
பல்வேறு வர்ணங்களைக் கொண்ட முஸ்லீம் தலைவர்களின் கூட்டுத் தலைமை ஒன்று உறுதியான செயற்பாட்டின் மூலம் இலங்கையின் மூலைமுடுக்குகளில் பின்தங்கிய பிரதேசங்களில் எண்ணிக்கையில் குறைந்தவர்களாய் வாழும் ஏழை முஸ்லீம்களின் இதயங்களில் நம்பிக்கை ஏற்படவேண்டும் என்றே முற்போக்கு முஸ்லீம் காங்கிரஸ் எதிர்பார்க்கின்றது.
இன்றைய சூழ்நிலையில் அரசுடன் இணைந்திருப்பவர்கள் முஸ்லீம்களின் நலனைக் கருத்திற் கொண்டு செயற்படுவதன் மூலம்தான் நமது சமூகத்திற்கு வரக்கூடிய ஆபத்துக்களிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். அதற்காகத்தான் தற்போது ஏற்பட்டுள்ள புரிந்துணர்வையம் அமைச்சர்களின் கூட்டான செயற்பாட்டையும் நாம் ஆதரிக்க வேண்டியுள்ளது.

நாம் அறிகின்ற பிந்திய செய்திகளைக் கொண்டு கணிக்கின்ற போது நாட்டில் ஒரு தேசியத் தேர்தல் நடைபெறும் காலகட்டத்தில் மேற்குறித்த அமைச்சர்களின் கூட்டான செயற்பாட்டில் சில மாற்றங்கள் ஏற்படவும்கூடும். இது ஜனநாயகப் பண்புகளைக் கொண்ட ஒரு சமூகக் கட்டமைப்பில் தவிர்க்கமுடியாத நிலைமையாகும் என்றும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :