எனக்கு இந்த ஆணைக் குழுவில் நம்பிக்கையில்லை. இது அரசாங்கத்தின் வற்புறுத்தலின் பெயரில் நடைபெறும் கண்துடைப்பு வேலையாகும். எனவே இத்தகைய ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிப்பதற்கு நான் விரும்பவில்லை. பதிலாக ஓர் அறிக்கையை மாத்திரம் உங்களிடம் சமர்ப்பிக்கிறேன் என்று காணாமல்போனோர் தொடர்பான விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
ஆணைக் குழுவின் ஆறாவது அமர்வு மன்னாரில் நேற்று மூன்றாவது நாளாக மன்னார் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. இதன்போது ஆயருக்கும் சாட்சியமளிக்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதன்படி நேற்று முற்பகல் 10.30 மணிக்கு மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையும் மன்னார் மறை மாவட்ட குரு முதல்வர் அன்ரனி விக்டர் சோசை அடிகளாரும் ஆணைக்குழுவின் முன் சமுகமளித்தனர்.
ஆணைக்குழு முன் சாட்சியமளிக்க ஆயர் அழைக்கப்பட்டார். அந்த நேரம் அவர் 7 பக்கங்கள் கொண்ட மனு ஒன்றை ஆணைக்குழுவிடம்
சமர்ப்பித்து அதனை ஆணைக்குழு முன் வாசித்துக்காட்டினார். அந்த மனுவில் முதல் இரண்டு பக்கங்கள் ஆணைக் குழுவுக்கு தெரிவிக்கும் கருத்துக்களையும், ஏனைய பக்கங்கள் ஏற்கனவே ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட 14 அம்சக் கோரிக்கைகளும் அடங்கியிருந்தன.
சுமார் 45 நிமிடங்கள் ஆணைக்குழு முன் அவர் விளக்கமளித்தார். இதனைத் தொடர்ந்து ஆணைக்குழுவின் தலைவர் ஆயருக்கு விளக்கமளித்தார்.
அதில், இந்த ஆணைக்குழு காணாமற்போனவர்கள் சம்பந்தமாகவே விசாரணைகளை மேற்கொள்ள கூடியிருக்கிறது. வரையறுக்கப்பட்ட தன்மையில் நாம் இருப்பதால் அதற்கு அப்பால் நாங்கள் செயற்பட முடியாது. ஆகவே காணாமற்போனவர்கள் தொடர்பாக தங்களால் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டால் அவற்றை ஏற்று நாங்கள் நடவடிக்கைகளை மேற்கொள்வோம். - என்றார்.
சாட்சியம் அளித்ததன் பின்னர் ஆயர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தார். அவர் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:-
இலங்கையில் காலத்துக்கு காலம் பல ஆணைக் குழுக்கள் உருவாக்கப்பட்டு அவை சாட்சியங்களை பதிவு செய்திருந்தன. ஆனால் இவற்றின்மூலம் தமிழ் மக்களுக்கு பலன் எதுவும் இதுவரையில் கிடைக்கவில்லை.
இந்த ஆணைக்குழுவும் அரசாங்கத்தினால் கட்டாயப்படுத்தப்பட்டு ஏற்படுத்தப்பட்டதே. நீங்கள் சாட்சியங்களை பதிவு செய்யும் முறையை நாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.
மக்கள் தங்களது ஆதங்கங்களை வெளிப்படுத்த உங்கள் ஆணைக்குழுவை ஒரு களமாக பயன்படுத்துகின்றனர் என்று மட்டுமே உணரமுடிகிறது. ஓர் உதாரணத்தை மட்டும் நான் சொல்ல விரும்புகின்றேன்.
கடந்த 2012 ஆம் ஆண்டு ஆவணி மாதம் கௌரவ ஜனாதிபதி அவர்கள், கொழும்பு அதிமேதகு கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை ஊடாக எனக்கு செய்தி ஒன்றை அனுப்பி வைத்திருந்தார். உங்கள் ஆதங்கங்களை வரிசைப்படுத்தி தனக்கு அனுப்பிவையுங்கள் என்று அதில் அவர் குறிப்பிட்டிருந்தார். நானும் எனது ஆதங்கங்களை கர்தினால் ஊடாக தெரிவித்தேன்.
அதன் பிற்பாடு கொழும்பு மறை மாவட்ட பேராயரின் இல்லத்தில் இடம்பெற்ற விசேட கூட்டம் ஒன்றுக்கு, ஜனாதிபதி அவரது செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோரை அனுப்பிவைத்திருந்தார். அந்தக் கூட்டத்தில் ஏற்கனவே நான் கொடுத்த 14 விடயங்கள் தொடர்பில் அவர்கள் எந்தப் பதிலும் கூறவில்லை.
எல்லாவற்றுக்கும் ஆதாரம் தேவை என்றனர். ஒவ்வொன்றுக்கும் தரவுகள் தேவை என்று சொல்கிறீர்கள். மக்கள் மத்தியில் நான் சென்று பேச முடியாத நிலையே வடக்கு, கிழக்கில் ஏற்பட்டுள்ளது. சி.ஐ.டி மற்றும் ஏனைய கண்காணிப்பாளர்களும் மக்களிடம் சென்று ஆயர் என்ன பேசினார் என்று கேட்பார்கள். அதனை சென்னால் மக்களுக்கு நெருக்கடி கொடுப்பார்கள், காணாமல் போகச் செய்வார்கள்.
எனவே நான் மக்களை துன்பப்படுத்த விரும்பவில்லை. துன்பத்துக்கு இட்டுச்செல்வதையும் நான் விரும்பவில்லை. நீங்கள் தேடுங்கள் தரவுகளை. எங்கெங்கு சரியான தகவல் இருக்கிறது, தேடினால் கிடைக்கும் என்பதை நான் சொல்கிறேன் என்று அவர்களுக்கு விளக்கினேன். தாம் நடவடிக்கை எடுப்போம் என்று தெரிவித்தனர்.
அதற்கு பிற்பாடு இரண்டு மூன்று கூட்டங்கள் நடைபெற்றன. எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இன்று இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன. நாங்கள் வானத்தை அண்ணார்ந்து பார்க்கும் நிலைதான் ஏற்பட்டுள்ளது. இப்படித்தான் எல்லா முயற்சிகளையும் அரசாங்கம் ஒரு கண்துடைப்புக்காக செய்கின்றது. உண்மையும் நீதியும் இல்லாத இடத்தில் நல்லிணக்கம் ஏற்படப்பேவதில்லை. உண்மையாக மக்களுக்கு விடுதலையை கொடுக்க வேண்டும். நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.
இப்படியான ஒரு நிலைமை ஏற்பட வேண்டும் என்று நாங்கள் முயற்சிக்கின்றோம். ஆனால் அரசாங்கமும், அரசுடன் ஈடுபடக்கூடிய அரசியல் வாதிகளும் இணைந்து இப்படிப்பட்ட ஒரு முயற்சியை, நல்ல நோக்கத்தை வேறு திசைக்கு கொண்டு சென்று தமது அரசியலுக்காக பயன்படுத்துகின்றனர்.
இது மிகவும் கவலையளிக்கிறது. நிரந்தரமாக தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு கிடைக்க வேண்டும். இதுவே எனது வேண்டுகோள். காணாமற்போனவர்கள் தொடர்பாக விசாரணைக் குழுவின் முன்னிலையில் எனது ஆதங்கத்தை வெளிப்படுத்துவதற்காகவே வந்தேன்- என மன்னார் மறைமாவட்ட ஆயர் தெரிவித்தார். -
0 comments :
Post a Comment