சலீம் றமீஸ்-
அர்ப்பணிப்புடன் செயல்பட்டு மக்களுக்காக முன்னெடுத்து வருகின்ற பணிகளை சுயநல அரசியல் நலனை மட்டும் கருத்திற் கொண்டு பிரதேசவாத உணர்வுகளை தூண்டி மக்களை தவறான முறையில் வழி நடாத்தும் செயற்பாடுகளிலிருந்து நாம் மாற வேண்டும்.
கிழக்கு மாகாண அமைச்சர் உதுமாலெப்பை அர்ப்பணிப்புடன் மக்களுக்காக முன்னெடுத்து வருகின்ற பணிகளை சுயநல அரசியல் நலனை மட்டும் கருத்திற் கொண்டு பிரதேசவாத உணர்வுகளை தூண்டி மக்களை தவறான முறையில் வழி நடத்தும் செயற்பாடுகளில் இருந்து நாம் மாற வேண்டும் என பொத்துவில் பிரதேச உப-கல்வி வலய திறப்பு விழா நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை குறிப்பிட்டார்.
பொத்துவில் பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் ஏ. அப்துல் மஜீட் தலமையில் நடைபெற்ற நிகழ்வுக்கு பிரதம அதிதியாக உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் அல்ஹாஜ் ஏ.எல்.எம்.அதாஉல்லா, கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் விமலவீர திஸாநாயக்க ஆகியோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து உரையாற்றுகையில்;
கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சராக என்னை இரண்டு தடவைகள் சிபாரிசு செய்த அமைச்சர் அதாஉல்லா அவர்கள் கிழக்கு மாகாணத்தில் யுத்தத்தினாலும், இயற்கை அனர்த்தங்களினாலும் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை அடையாளம் கண்டு உட்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்வதுடன், கிழக்கு மாகாணத்தில் இன ஒற்றுமையை ஏற்படுத்தும் செயற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டதுடன், குறிப்பாக அரசியல் அதிகாரங்கள் இல்லாமல் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டு வரும் பிரதேசங்களான மூதூர், பொத்துவில் பிரதேசங்களுக்கு முடியுமான வரை பணி புரியுமாறும் கேட்டுக் கொண்டார்.
கடந்த 6 வருட காலமாக அர்ப்பணிப்புடன் செயல்பட்டு கிழக்கு மாகாணத்தில் முடிந்தளவு பணிகளை புரிந்து வருகின்றேன். நமது மக்களுக்காக முன்னெடுத்து வரும் அபிவிருத்தி திட்டங்களை செயற்படுத்தும் போது தங்களின் அரசியல் இருப்பிடம் இல்லாமல் போய் விடும் என அஞ்சும் சிலர் பிரதேசவாதங்களை உருவாக்கி வருகின்றமையை எண்ணி வேதனைப்பட வேண்டியுள்ளது.
இங்கு உரையாற்றிய பொத்துவில் பிரதேச சபைத் தலைவர் வாசித் பொத்துவில் உப-கல்வி வலயம் அக்கரைப்பற்று வலயத்தில் இருந்து பறித்தெடுத்ததாக தவறான கருத்தைக் கூறி பிரதேசவாத உணர்வுகளை உசிப்பேற்றினார். இது மிகவும் கவலைப்பட வேண்டிய விடயமாகும். நாம் இந்த உலகத்தில் சிறிது காலமே உயிர் வாழப்போகின்றோம். இப்போதல்லாம் திடீர் திடீர் என மரணங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் அரசியல் அதிகாரம் என்பது நிரந்தரமானவை என்று நாம் நினைத்து செயல்படக் கூடாது. நமது மக்களுக்காக நல்லவைகளைப் பற்றி சிந்தித்து திட்டமிட்டு முடிந்தளவு மக்கள் நலனுக்காக பணி புரிந்து விட்டு மரணிக்க கூடியவர்களாக நாம் செயல்பட வேண்டும்.
அமைச்சர் அதாஉல்லா அவர்கள் பொத்துவிலுக்கென தனியான கல்வி வலயம் வழங்கப்பட வேண்டும் என எப்போதே கூறிவிட்டார். இதற்கமைய கல்வி அமைச்சர் திரு.விமலவீர திஸாநாயக்கவும் நானும் பல வருடங்களுக்கு முன் இணைந்து இது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.
சுகாதார அமைச்சர் சகோதரர் மன்சூர் அவர்கள் உரையாற்றும் போது பொத்துவில் பிரதேசம் தேர்தல் காலங்களில் இலகுவாக வாக்குகளைப் பெற்றுக் கொள்ளக் கூடிய பிரதேசமாகும் எனக் குறிப்பிட்டார். இது தொடர்பாக அமைச்சர் மன்சூர் அவர்களின் கருத்து உண்மையானதாகும்.
பொத்துவில் பிரதேசம் ஒவ்வொரு தேர்தல் காலங்களிலும் அதிகப்படியான வாக்குகளை முஸ்லிம் காங்கிரஸ_க்கே அளித்துள்ளது. தேசிய காங்கிரஸ_க்கு கணிசமான வாக்குகளே கிடைத்துள்ளது. ஆனால் பொத்துவில் பிரதேசம் தேசிய காங்கிரஸ_க்கு நூறு வீதம் வாக்களித்த பிரதேசமாக நினைத்து அமைச்சர் அதாஉல்லாவும் நானும் இணைந்து பொத்துவில் பிரதேச மக்கள் மீது உண்மைக்கு உண்மையான அன்பு வைத்து வரலாற்று அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டு வருகின்றோம்.
அமைச்சர் அதாஉல்லா அவர்கள் பொத்துவில் பிரதேசத்தின் கலாச்சார மண்டபத்தை நிறைவு செய்து கொடுத்தார். அதனால் இன்று பொத்துவில் ஜூம்ஆப் பள்ளிவாசல் கட்டிட நிர்மாணப் பணிகள் முடியும் வரை கலாச்சார மண்டபத்தை தற்காலிகமாக ஜூம்ஆப் பள்ளிவாசலாக நமது மக்கள் பாவித்துக் கொண்டிருக்கின்றனர். கலாச்சார மண்டப விடயத்தினை நீதிமன்றம் வரை கொண்டு சென்றவர்களும் நம் மத்தியில் உள்ளனர். இன்று அல்லாஹ்வை “ஸ_ஜூது” செய்யும் இடமாக கலாச்சார மண்டபம்மாறியுள்ளது.
நாம் இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டும். பொத்துவில் பிரதேச சபைக்கான நவீன கட்டிடம், வாகன வசதிகள், நிதி வசதிகள், பொத்துவில் பிரதேசத்துக்கான நீர் வழங்கலுக்கான காணி கொள்வனவு, கல்வித்துறை, விளையாட்டுத்துறை, விவாசய, நீர்ப்பாசன, வீதி பணிகளுக்காக அமைச்சர் அதாஉல்லா அவர்கள் பல கோடி நிதியினை பொத்துவில் பிரதேசத்துக்காக வழங்கி உள்ளார். இந்த வருட நிதி ஒதுக்கீட்டில் கூட எனது வேண்டுகோளை ஏற்று பொத்துவில் பிரதேச அபிவிருத்திக்கு சுமார் 15 மில்லியன் நிதியினை வழங்கியுள்ளார்.
இன்னும் அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை பிரதேசங்களுக்கான நிதிகள் வந்து சேரவில்லை. ஆனால் பொத்துவில் பிரதேசத்திற்கான நிதியினை வந்துள்ளது. இன்று திறந்து வைக்கப்பட்டுள்ள பொத்துவில் உப-கல்வி வலயம் எதிர்காலத்தில் நிரந்தரமான கல்வி வலயமாக உருவாக்குவதற்கான முயற்சியினை நாம் மேற்கொள்ள வேண்டும். பொத்துவில் பிரதான வீதியில் காணியினைப் பெற்று தனிக் கல்வி வலயத்திற்கான புதிய கட்டிடம் நிர்மாணிக்கப்பட வேண்டும். இதற்காக அமைச்சர் அதாஉல்லா அவர்களிடம் நான் கோரிக்கை விடுத்துள்ளேன். இதற்கான காணியினை பொத்துவில் பிரதேச செயலாளரிடம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளேன்.
பொத்துவில் பிரதேச கல்விமான்கள், அரசியல் பிரமுகர்கள் கலந்து கொள்ளும் இந்நிகழ்வில் பொத்துவில் பிரதேச கல்வி வளர்ச்சி தொடர்பாக எல்லோரும் ஒன்றிணைந்து திட்டங்கள் உருவாக்கி எதிர்காலத்தில் செயல்பட வேண்டிய பாரிய பொறுப்பு எமக்கு இன்றிலிருந்து ஏற்பட்டுள்ளது.
எனவே, இதற்காக எல்லோரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.
கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் திரு.விமலவீர திஸாநாயக்க அவர்கள் நமது கிழக்கு மாகாணத்தில் வாழும் மூன்று இன மக்களுக்கும் இன பேதமின்றி சேவை புரியும் அமைச்சராகும். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட நமது கிழக்கு மாகாண கல்வித் துறையை வளர்ப்பதற்காக கடந்த 6 வருட காலமாக தியாகத்துடன் செயல்படுபவர். நமது பிரதேச கல்வித் துறைகளுக்கான வளத் தட்டுப்பாடுகள், ஆசிரியர்கள் வெற்றிடங்களை நிரப்புவதற்கும் நமக்கு பாரிய பங்கினை வழங்கி உள்ளார். பொத்துவில் உப-
கல்வி வலயம், தனியான கல்வி வலயமாக உருவாக்குவதற்கும் உதவிகள் புரிந்து வருகின்றார்.
இதற்காக நமது மக்கள் சார்பில் கல்வி அமைச்சர் விமலவீர திஸாநாயக்கவிற்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திரு.புஸ்பகுமார, மாகாண கல்விப் பணிப்பாளர் நிஸாம், கல்வி அதிகாரிகளையும் நாம் பாராட்டுகின்றேன் எனக் குறிப்பிட்டார். இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் மன்சூர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் அமீர், ஏ.எல்.எம்.நஸீர், ஏ.எல்.தவம் உட்பட கல்விமான்கள், அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
.jpg)
0 comments :
Post a Comment