த.நவோஜ்-
குழாய் நீர் வசதியை வந்தாறுமூலையிலிருந்து நாவலடிவரை விஸ்தரிப்பதற்காக அமைச்சரவை அனுமதியைப் பெற்று கல்குடா தொகுதி மக்களது குடி நீர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வினைப் பெற்றுத் தருமாறு கல்குடா மஜ்லிஸ் ஸுரா சபையால் உற்பத்தித்திறன் ஊக்குவிப்பு அமைச்சர் பஷீர் சேகுதாவூத்திடம் வியாழக்கிழமை மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டது.
ஓட்டமாவடி தேசிய பாடசாலையில் அமைச்சரைச் சந்தித்த கல்குடா மஜ்லிஸ் ஸுரா சபை உறுப்பினர்கள் மகஜரைக் கையளித்தனர். அம்மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது!
ஒரு மனிதனின் அடிப்படை வசதிகளுள் ஒன்றாக சுத்தமான குடி நீரைப் பெற்றுக் கொள்ளுதல் காணப்படுகிறது. அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் இதற்கான அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு முதற்கட்டமாக மட்டக்களப்பிலிருந்து வந்தாறுமூலை வரை குழாய் நீர் குடி நீர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதன் இரண்டாம் கட்டம் வந்தாறுமூலையிலிருந்து நாவலடி வரை விஸ்தரிக்கப்பட இருந்தது. இத்திட்டத்தில் குறிப்பாக ஓட்டமாவடி, வாழைச்சேனை, நாவலடி, பாசிக்குடா சுற்றுலா பகுதி மற்றும் தமிழ் பிரதேசங்கள் பலவற்றை உள்ளடக்கி நீர் வினியோகம் செய்யப்படவிருந்தது.
குறிப்பாக ஓட்டமாவடி, வாழைச்சேனை, நாவலடி பகுதிகளின் நிலைமையை தாங்கள் நன்கு அறிந்துள்ளீர்கள் ஓட்டமாவடி, வாழைச்சேனை மூஸ்லீம் பகுதிகளில் சனத்தொகை செறிவின் காரணமாக நிலக் கீழ் நீர் மாசடைந்துள்ளது. இந் நீரைப் பயன்படுத்துவதனால் மக்கள் புற்றுநோய் உட்பட பல்வேறு நோய் நிலைமைகளுக்கு ஆளாகின்றனர்.
அதே போன்று நாவலடி பிரதேசம் எமது மக்கள் மீள்குடியேறிவரும் பகுதியாகும் இப்பகுதி நிலக் கீழ் பாறையாக காணப்படுவதால் குடிநீர் வசதிகளை ஏற்படுத்த முடியாதுள்ளது. இதனால் வறட்சியான காலங்களில் மக்கள் தமது இடங்களில் இருந்து வெளியேற வேண்டியுள்ளது. அத்தோடு; குறித்த மக்கள் தங்களுக்குறிய நிரந்தர வசதிகளை ஏற்படுத்த முடியாதுள்ளது. மக்கள் அடிக்கடி இடம்பெயர்ந்து மீள்வருவதால் இராணுவ தரப்பினரின் கெடுபிடிகளுக்கும் ஆளாகின்றனர்.
அதேபோன்று தற்போது பாசிக்குடா பகுதி சுற்றுலாத் துறையில் நன்கு அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது. இப்பகுதிக்கான நீர் வினியோகம் வாகனேரி குளத்திலிருந்து மேற்கொள்ளப்படுகிறது. தற்போதய நிலையில் சுமார் நாளொன்றுக்கு 15000 லீட்டர் நீர் சுற்றுலாப் பகுதிக்கு வினியோகிக்கப்படுகிறது. இதனால் இக்குளத்தை நம்பி விவசாய செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் பயிர்செய்கை காலத்தில் பாரிய நீர் நெருக்கடியை எதிர்நோக்குகின்றனர். இதன் தாக்கம் 2014ம் ஆண்டு சிறுபோகத்தில் ஏற்பட்டதையும் தாங்கள் அறிந்திருப்பீர்கள்.
மாண்புமிகு அமைச்சர் அவர்களே மேற்படி பிரச்சனைகள் அனைத்திற்கும் நிரந்தர தீர்வை தேடும் வழிமுறையாக வந்தாறுமூலையிலிருந்து நாவலடிவரை விஸ்தரிக்கப்பட இருக்கின்ற இத்திட்டத்தை சமூகத்தினதும், இப்பிரதேச மக்களினதும் நலன்கருதி உடனடியாக ஆரம்பிப்பதற்கு தங்களால் ஆன முழு முயற்சியையும் மேற்கொள்ளுமாறு வேண்டி கல்குடா மஜ்லிஸ் ஸுரா இப்பிரதேச மக்கள் சார்பாக தங்களிடம் இவ்வேண்டுகோளை முன்வைக்கிறது.
மாண்புமிகு அமைச்சர் அவர்களே இவ்வேலைத் திட்டத்தின் தற்போதய முன்னெடுப்பு நிலை தொடர்பாக நீர் வினியோக வடிகாலமைப்பு சபையின் மாவட்ட காரியாலய அதிகாரிகளை தொடர்பு கொண்டு விசாரித்த போது இத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கான சகல முன்னாயத்த வேலைகளும் முடிவுறுத்தப்பட்டு ஒப்பந்தம் வழங்கும் நிலையில் உள்ளதாகவும், அதற்கான அமைச்சரவை அனுமதிக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சரவை அனுமதி கிடைத்தால் வேலைத் திட்டத்தை உடன் ஆரம்பிக்க முடியும் என்பதாக அறியக்கிடைத்தது.
மாண்புமிகு அமைச்சர் அவர்களே இம்மாவட்டத்தின் அதிகாரத்திற்குரிய அமைச்சரவை அந்தஸ்து உள்ள அமைச்சர் என்ற வகையில் அதிமேதகு ஜனாதிபதி, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர், திட்டத்திற்கு பொறுப்பான அமைச்சர்களிடம் இத்திட்டத்தின் அவசியத்தை முன்வைத்து இத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கான அமைச்சரவை அனுமதியைப் பெற்று இக்குடிநீர் வசதியை எமது மக்களுக்கு பெற்றுத்தருமாறு தாங்களை வேண்டிக் கொள்கிறோம் என்றும் அம் மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment