திருகோணமலை மாவட்டத்தில் இந்திய அரசாங்கத்தினால் கட்டிக் கொடுக்கப்படவுள்ள வீடமைப்புத் திட்டத்தில் முஸ்லிம், சிங்கள மக்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளமை கவலைக்குரிய விடயமாகும் என கிழக்கு மாகாணசபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு மீளக் குடியேறியுள்ள மக்களுக்கு இந்திய அரசாங்கத்தினால் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டு வருகின்றன. பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ஊடாக இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. திருகோணமலை மாவட்டத்தில் இத்திட்டம் வெள்ளிக்கிழமை மூதூரில் இந்திய தூதுவரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் நடந்த உள்நாட்டு யுத்தத்தைப் பொறுத்தவரை கூடுதலான இழப்புகளை சந்தித்தித்தவர்கள் தமிழ் மக்கள். எனவே, அவர்களுக்கான வீடமைப்புத்திட்டம் நியாயமானது. அதிக வீடுகள் பெற வேண்டிய தகுதி அச்சமூகத்திற்கு உண்டு என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.
அதே வேளை இந்த யுத்தத்தினால் முஸ்லிம், சிங்கள மக்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். எனவே, பாதிப்புக்கான நிவாரணம் வழங்குகின்றபோது இம்மக்களும் உள்வாங்கப்பட வேண்டும். பாதிப்பின் விகிதாசாரத்திற்கேற்ப சொற்ப வீடுகளாவது இவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.
ஆனால் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு இந்தத்திட்டத்தில் திருகோணமலை மாவட்ட முஸ்லிம், சிங்கள மக்களைப் புறக்கணித்துள்ளது. அடிக்கல் நடும் வைபவம் பாதிக்கப்பட்ட முஸ்லிம், சிங்கள கிராமங்களிலும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கவில்லை.
இந்த வைபவத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் கலந்து கொண்டிருக்கிறார். எனினும் இந்த விடயம் குறித்து அவர் கவனத்தில் எடுத்தாகத் தெரிய வில்லை. எனவே, அவரும் முஸ்லிம் சிங்கள மக்களை புறக்கணித்துள்ளாரா? ஏன்ற கேள்வி எழுகின்றது.
சம காலத்தில் எல்லாச் சமூகத்தையும் பிரதிபலிக்கும் வகையில் வீடுகள் கட்டப்பட்டால் தான் பாதிக்கப்பட்ட மக்கள் தாங்கள் நியாயமாக நடத்தப்படுவதை எண்ணி சந்தோசப்படுவார்கள். எனவே, இந்த விடயம் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments :
Post a Comment