ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக நாம் இருந்து வந்துள்ளோம். யுத்த வெற்றியின் பின்னர் அந்த நிலை தற்போது மாறியுள்ளது. ஆனாலும் மீளவும் அத்தகைய நிலையை நாம் அடைவோம். எமது கட்சி சரியான நேரத்தில் சரியான முடிவினை எடுக்கும். இந்த விடயத்தில் அந்தரப்படவேண்டிய அவசியம் இல்லை என்று முஸ்லிம் காங்கிரஸின்தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
அளுத்கம சம்பவம் பாரதூரமான விடயமாகும். இது மிகவும் கச்சிதமாக திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு அழிவாகும். அதற்கான ஆதாரங்கள் தாராளமாக காணப்படுகின்றன. நிலைமை அவ்வாறு இருக்கையில், குற்றம் இரு தரப்பிலும் இருக்கின்றது என்ற பாணியில் தற்போது ஆட்சியாளர்கள் கூறுவதானது ,முஸ்லிம் சமூகத்தை மிகவும் புண்படுத்தியுள்ளது. இந்த தவறை அரசாங்கம் ஏற்காவிடின் காலம் பதில் சொல்லும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
உற்பத்தித்திறன் அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளருமான பஷீர் சேகுதாவூதின் முக்கிய பாராளுமன்ற உரைகளை உள்ளடக்கிய “சோர்விலாச் சொல்” எனும் நூல் வெளியீடு நேற்றைய தினம் பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் நடைபெற்றது. முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் எம்.என்.அமீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் கலந்துகொண்டதுடன் நூலின் திறனாய்வை பேராதனைப் பல்கலைக்கழக கலைப்பீட மெய்யியல் துறையின் பேராசிரியர் கலாநிதி எம்.எஸ்.எம்.அனஸ் ஆற்றினார்.
இந்தியாவிலுள்ள ஸ்ரீ குரு கிராந் கற்கைகளுக்கான ஆய்வு மையத்தின் பேராசிரியர் கலாநிதி என்.முத்துமோகன், ஈரோஸ் அமைப்பின் முக்கியஸ்தரும் ஐக்கிய இராச்சியத்திலுள்ள திருக்குடும்ப தொழில்கல்லூரியின் கணித பௌதீக விரிவுரையாளர் ரவிச்சந்திர சுந்தரலிங்கம் ஆகியோர் கருத்துரைகளை வழங்கினார்கள். தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அரசியல் கட்சித்தலைவர்கள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், புத்திஜீவிகள் உட்பட முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இங்கு உரையாற்றுகையிலேயே அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில்,
1990 திருப்புமுனை
தமிழ்ர்களுடைய போராட்ட வரலாற்றிலே 1983ஆம் ஆண்டு எவ்வாறு ஒரு திருப்பு முனையாகப் பார்க்கப்படுகின்றதோ அதேபோன்று தான் இந்த நாட்டிலுள்ள ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்திற்கும் திருப்பு முனையாக 1990ஆம் ஆண்டு காணப்படுகின்றது. 1990ஆம் ஆண்டைப் பொறுத்தவரையில் வடக்கிலிருந்து முஸ்லிம்கள் இனச்சுத்திகரிப்புச் செய்யப்பட்ட வருடம். அதனைத் தொடர்ந்து கொழும்பிலிருந்து கல்முனைக்கு ஊடாக வந்து கொண்டிருந்த ஹஜ் யாத்திரிகள் குருக்கள் மடத்தில் படுகொலை செய்யப்பட்டமை, சாதாம் உசைன் கிராமத்தில் 103பேருடைய அகோரமான கொலைகள், காத்தான்குடி பள்ளிவாயல்களில் இடம்பெற்ற படுகொலைகள், அதனைத்தொடர்ந்து காரைதீவு, பள்ளியகொடல்ல போன் இடங்களில் நடந்த கொலைகள் என பட்டியல் நீண்டு செல்கின்றது. 1985ஆம் ஆண்டு முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன எனகூறப்பட்டலும் 1990ஆம் ஆண்டில் இராணுவ ரீதியாக திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட படுகொலைகளாக இவை காணப்படுவதால் தான் 90ஆம் ஆண்டு முஸ்லிம்களின் அரசியல் வரலாற்றில் திருப்பு முனை வருடமாக பதிவாகியிருக்கின்றது.
அரசியல் தவறாக மாறலாம்
தமிழீழக் கோட்பாடுகளால் தமக்கு ஏற்பட்ட அநீதிகளால் முஸ்லிம் சமூகம் விலத்திச் செல்ல எத்தனித்த போது அதனை ஆயுத முனையினால் அடக்கி ஆளலாம் என தமிழ் ஆயுதக்குழுவினர் நினைத்தார்கள். அதனையொத்தவொரு அடக்குமுறைச் சம்பவமாகத்தான் அளுத்கம, பேருவளை, தர்கா நகர் சம்பவங்கள் பார்க்கப்படவேண்டும்.
இது மிகவும் கச்சிதமாக திட்டமிடப்பட்டு நடத்தப்படட ஒரு அழிவாகவே நாம் பார்க்கின்றோம். அதற்கான ஆதாரங்களும் தாரளமாக காணப்படுகின்றன. அத்துடன் இவ்வாறான வன்முறையொன்று நடைபெறுவற்கு முன்னதாகவே அது தொடர்பிலான எதிர்வு கூறல்கள் பலராலும் பலவாறும் கூறப்பட்டிருந்தது. அவ்வாறிருக்கையில் குற்றம் இருதரப்பிலும் இருக்கின்றது
என்ற பாணியில் தற்போது ஆட்சியாளர்கள் கூறுவதானது முஸ்லிம் சமூகத்தை மிகவும்; புண்படுத்தும் செயலாக இருக்கின்றது.
இந்த சம்பவம் தொடர்பாக அரசாங்கத்திலுள்ள நடுநிலையாளர்களே தற்போது பேச ஆரம்பித்திருக்கின்றார்கள். அவர்கள் ஆதங்கப்படுகின்றார்கள். இது வரவேற்கத்தக்க விடயமாகும். எந்த ஆட்சியாளர்களும் தாங்கள் விட்ட தவறுகளை ஏற்றுக்கொள்வதில் தயக்கமிருக்கும் என்பது உண்மையான விடயம். இருந்தாலும் இந்த விடயத்தின் பாரதூரத்தை அறிந்து இது மிகப்பெரும் திருப்பு முனையாக அமையும் என்பதை அவர்கள் உணரத்தவறினால் அது மிகப்பெரும் அரசியல் தவறாக இருக்கும் என்பதற்கு காலம் பதில் சொல்லும். அதேபோன்று ஐக்கிய நாடுகளிலுள்ள இலங்கையின் துணை வதிவிடப்பிரதிநிதி அளுத்கம விடயங்கள் தொடர்பில் தெரிவித்த கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாது.
பராளுமன்றத்தின் பலவீனம்
பாரளுமன்றம் என்பது அரசியலை வழிநடுத்துகின்ற அல்லது செல்நெறியை தீர்மானிக்கின்றதாக இருந்த நிலைமையானது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை கொண்டுவரப்பட்டதன் பின்னர் வலுவிழந்து போய்விட்டதாக பரலாக பேசப்படுகின்றது. பாராளுமன்றத்தில் கூறும் விடங்களுக்கு அதிகார வர்க்கம் அங்கீராம் வழங்குமோ அல்லது அதற்கேற்று செயற்படுமோ என்ற நிலை வெகுவாக இல்லாதிருக்கின்றது. இது நாம் உருவாக்கியிருக்கும் பாராளுமன்ற ஜனநாயகத்தில்; காணப்படும் பலவீனம் ஆகும். இதனை மாற்றயமைக்க வேண்டுமென சிலர் பலவீனமான முயற்சிகளில் இறங்கியிருக்கின்றார்கள். எதிரணிகளின் ஒன்றுகூடலும் நிறைவேற்று அதிகார ஒழிப்பு நோக்கிய நகர்வாகத்தான் நடந்துகொண்டிருக்கின்றது. இதனைக் கருத்தில் கொண்டு நாம் எமது அடுத்த கட்ட நகர்வுகள் எவ்வாறு அமையவேண்டும் என கலந்துரையாடினோம். எமது கட்சிக்குள்ளும் ஏனைய கட்சிகளுடனும் அதுநோக்கி எவ்வாறு நகர்வுகளை முன்னெடுக்க வேண்டும் என்பது குறித்து சனிக்கிழமையன்று நடைபெற்ற உயர்மட்டக்குழு கூட்டத்தில் தீர்மானித்திருக்கின்றோம்.
பொறுப்புள்ள கட்சி
இன்னமும் ஆறுமாத காலத்தில் தேர்தலொன்று வரவிருப்பதாக கூறப்படுகின்றது. ஆறுமாத காலம் என்பது அரசியலில் நீண்ட காலம். அதற்கு முன்னதாக பல்வேறு மாற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. நானாக இருக்கலாம் அல்லது எனது கட்சியைச் சார்ந்தவர்களாக இருக்கலாம் யாரும் தனிப்பட்ட ரீதியில் முடிவுகளை எடுப்பதில்லை. பொறுப்புள்ள அரசியல் கட்சி என்ற வகையில் அவசரப்படாது நிதானமாகவே முடிவெடுக்கவேண்டிய அவசியத்தில் உள்ளோம். இதனை வெளியில் இருந்து பார்ப்பவர்களும் புரிந்து கொள்ள வேண்டும். நாம் எந்த விடயத்திலும் அவசரப்பட்டு ஒரு முடிவுக்கு வந்துவிட முடியாது. அரசியல் என்பது கிழமைக்கு கிழமை, மாதத்திற்கு மாதம் மாறுபடும் ஒரு தளமாகும். இந்த அடிப்படையில் முஸ்லிம் காங்கிரஸின் முடிவுகளை ஜீரணிப்பதற்கு பலருக்கு சங்கடமாக இருக்கலாம். ஆனால் கட்சியாக நாம் எடுக்கும் இறுதி முடிவை மட்டும் விமர்ச்சிக வேண்டுமே தவிர தனிப்பட்ட ரீதியில் எடுக்கும் முடிவுகளை தவறாக புரிந்துகொள்ளக் கூடாது.
யுத்த வெற்றியின் பாதிப்பு
தற்போது மு.கா தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் சிங்கள மக்களிடையே பரப்பட்டடு வருகின்றன. முஸ்லிம் காங்கிரஸை வைத்து ஆட்சிமாற்றத்தை செய்து விடலாம் என்று பலர் நினைக்கின்றார்கள். அவ்வாறான நிலைமையொன்று கடந்த காலத்தில் காணப்பட்டது. குறிப்பாக கடந்த பத்துவருடங்காலத்திற்கு முன்னதாக பார்த்தால் மு.காவின் பேரம்பேசும் சக்தி அவ்வாறான நிலையில் வைத்திருந்தது. அவ்வாhறனதொரு காலத்தை நாம் கடந்து வந்திருந்தோம். ஆனால் 2009இல் யுத்த வெற்றியானது அந்த சக்தியை இல்லாது செய்து விட்டது. இருப்பினும் மீண்டும் அந்த நிலைமையை உருவாக்கவோம். அதற்குரிய மேலும் உந்துதலை கட்சிப் பேராளிகளே வழங்க வேண்டும். அரசியல் சமன் பாட்டில் சமநிலை தன்மை மாற்றம் என்பது அவசியம் அதுவே ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதாய் அமையும்.
இணக்க எதிர்பு அரசியல்
அரசியலை மூன்று வகையில் முன்னெடுக்கலாம். இணக்க அரசியல், எதிர்ப்பு அரசியல், சரணாகதி அரசியல். மு.கா இன்று இணக்க அரசியலைச் செய்கின்ற போதும் எமது சமூம் அதனை சரணாகதி அரசியலாகவே பார்க்கின்றதோடு, மாற்றைய கட்சிகளும் அதனை அவ்வாறே நோக்குகின்றன. பல்வேறு விடயங்களுக்காக ஜனாதிபதியுடனும், பாதுகாப்புச் செயலாளருடனும் நாம் விவாதங்களில் ஈடுபடுவதை பகிரங்கமாக கூறமுடியாது. என்னைப் பொறுத்தவரையில் மு.கா தற்போது இணக்கத்துடனான ஒருவகை எதிர்ப்பு அரசியலையே முன்னெடுத்து வருகின்றது என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இதனை; வெளியில் இருந்து பார்ப்பவர்கள் பல கோணத்தில் விமர்சிக்கின்றார்கள். இவ்வாhறன செயற்பாடு பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவடன் மறுக்கப்படும் உரிமைகளை பெறும் எமது முயற்சியையும் நழுவிச் செல்வதற்கு காரணமாக அமைந்து விடக்கூடாது.
நியாயத்தை மறுக்க முடியாது
தமிழ்ச் சமூகம் கோரும் நியாயமான கோரிக்கைகளை மறுதலிக்க முடியாது. குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு மட்டும் ஏன் முன்னாள் இராணுவ அதிகாரிகளை ஆளுநர்களாக நியமிக்க வேண்டும் என்ற கேள்வியெழுப்புகின்றார்கள். அதில் உண்மையான நியாயம் இருக்கின்றது. அதற்கான உரிய பதிலை ஆட்சியாளர்கள் வழங்க வேண்டும். அதேபோன்று தமிழ்த் தரப்பும் முஸ்லிம்களின் அபிலாஷைகளை புரிந்து கொண்டு உரிமைகளுக்கான தமது செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.
ஜனாதிபதி சாதாரணவொருவரல்ல
ஜனாதிபதி சாதாரண ஒருவர் அல்ல. அவர் ஒரு பழுத்த அரசியில்வாதி. அரசியல் பக்குவம் என்பது ஆத்திரம் ஆவேசத்தால் தவறிப்போகலாம். சர்வதேச ரீதியான நெருக்கடிகள் பலகோணங்களில் வரும்போது அதனை எதிர்கொண்டு நாட்டை வழிநாடத்துவது சாதரண விடயமல்ல. ஆனால் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக நடைபெறும் அநீதிகளுக்கு எதிராக பேச ஆரம்பிக்கும் போது அதனை ஜீவரணித்துக்கொள்ள வேண்டும். அதனை விடுத்து இருதரப்பிலும் தவறிருக்கின்றது எனக் கூறி ப+சிமெழுக நினைப்பது அநியாயமானதாகும்.
காத்திருக்க வேண்டும்
சரியான முடிவுகளை எடுப்பதற்காக பரவலான கருத்தாடல்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது. மு.கா.யாருடைய எடுபிடிகளாகவும் இருக்க முடியாது. அதற்கான முதகெலும்மை மக்கள் எமக்கு தந்திருக்கின்றார்கள். எதிர்காலத்திலும் தருவார்கள். எமது மனச்சாட்சிக்கு ஏற்ற வகையில் நேர்மையாகச் சிந்திக்கும் சக்திகளுடன் பேசுவதற்கும் அதேநேரம் அரசாங்கத்துடன் பேசுவதற்கும் நாம் தயாராக இருக்கின்றோம்.
யுத்தம் நிறைவடைந்து ஐந்து வருடங்களாகியிருக்கின்ற நிலையில் உள்ளுரிலும் சர்வதேசத்திலும் அரசாங்கத்தின் பிரசாரங்கள் எடுபடாத நிலை ஏற்பட்டுள்ளது. அதற்காக சரியான திர்மானங்களை எடுப்பதற்கு கத்திருக்க வேண்டியுள்ளது. சரியான நேரத்தில் எடுக்கும் முடிவுகள் தவாறாக அமையக்கூடாது என்பதோடு பிழையான நேரத்தில் எடுக்கும் சரியான முடிவுகளும் தவறாக அமையும் என்பதில் நாம் உறுதியாக உள்ளோம்.
0 comments :
Post a Comment