புகலிடக் கோரிக்கையாளர்கள் விடயத்தில் கடும் போக்கை கடைப்பிடிக்கும் அவுஸ்திரேலியா, தீர்வு விடயத்திலும் அதேபோக்கை கடைப்பிடிக்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இலங்கையில் தமிழ் மக்கள் இன்னமும் நிம்மதியாக வாழ முடியாத சூழ்நிலை காணப்படுகின்றது. மீளக்குடியமர்த்தப்பட்ட மக்களின் அடிப்படைத் தேவைகள் இதுவரை நிறைவேற்றிக் கொடுக்கப்படவில்லை.
இன்னமும் அநேகர் வீடு வசதியின்றி வாழ்கின்றார்கள், மீளக்குடியமர்த்தப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட 25 ஆயிரம் ரூபா கொடுப்பனவை ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இன்றுவரை பெறவில்லை.
காணி சுவீகரிப்பு, தேடுதல் நடவடிக்கை என்று பிரச்சினைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. இத்தகைய நிலைமைகளின் காரணமாகவே இலங்கை தமிழ் மக்கள் அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோருகின்றனர் , இதனை தவிர பணம் சம்பாதிப்பதற்காகச் செல்லவில்லை.
இந்த நிலையில் மனிதாபிமானத்துடன் அவர்களுக்கு புகலிடம் அளிப்பது அவுஸ்திரேலியாவின் கடமையாகும்.
இதனை விடுத்து அவர்களை கடலில் வழிமறித்து திருப்பி அனுப்புவது தமிழர்கள் விடயத்தில் அந்நாடு கடைப்பிடிக்கும் கடும்போக்கையே எடுத்துக் காட்டுகின்றது.
இது போதாது என்று இரண்டு ரோந்து படகுகளும் இலங்கைக்கு நேரில் கையளிக்கப்பட்டுள்ளன.தமிழ் மக்களுக்கு நிரந்தரத் தீர்வை வழங்குமாறு இலங்கை அரசை கோரும் ஏனைய நாடுகளைப் போல அவுஸ்திரேலியாவும் கோர வேண்டும்.
இந்த விடயத்தில் புலம்பெயர் தமிழ் மக்களும் முன்வர வேண்டும், புலம்பெயர்ந்து வாழும் தமிழ் உறவுகள் அதற்கான அழுத்தத்தை அவுஸ்திரேலியாவுக்கு கொடுக்க வேண்டும்.இவ்வாறான முயற்சிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் மட்டுமே முன்னெடுக்கமுடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

0 comments :
Post a Comment