தற்போதுள்ள சட்டப்படி 18 வயதிற்குட்பட்டவர்கள் சிறுவர்களாகக் கருதப்படுகிறார்கள். அவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபட்டால் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்படுகிறார்கள். அதிகபட்ச தண்டனையாக 3 ஆண்டுகள் வரைதான் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அவர்கள் இருக்க முடியும்.
இந்நிலையில், இந்தியாவில் தற்போது நடைபெறும் பெரும்பாலான பலாத்கார குற்றங்களில் 18 வயதிற்கும் குறைவானோர் அதிகம் ஈடுபடுவதாகத் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, சிறுவர் நீதி பேணல் மற்றும் பாதுகாப்பு சட்டம்-2014 என்ற சட்டமூலத்தை பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் தயாரித்துள்ளது.
இதன்படி, கொலை, பலாத்காரம் உள்ளிட்ட கொடுஞ்செயல்களில் ஈடுபடும் 16 முதல் 18 வயதிற்கிடையேயான வயதுள்ள சிறுவர்களை எந்த சட்டத்தின்கீழ் விசாரிக்க வேண்டும் என்று முடிவெடுக்கும் அதிகாரம் சிறுவர் நீதி வாரியத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
குற்றவாளியை சிறுவர் நீதிமன்றத்திற்கு அனுப்புவதா அல்லது வழக்கமான நீதிமன்றத்திற்கு அனுப்புவதா என்ற தீர்மானத்தை மேற்கொள்ளும் அதிகாரம் நீதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது.
அதே நேரம், 16 முதல் 18 வயதிற்குட்பட்ட சிறுவர்களை வழக்கமான நீதிமன்றத்தில் விசாரிக்க முடிவெடுத்தாலும்கூட, குற்றவாளிகளுக்கு மரண தண்டனையோ அல்லது ஆயுள் தண்டனையோ அளிக்க முடியாது.

0 comments :
Post a Comment