1983 இல் கறை படிந்த ஜூலையை உருவாக்கி அப்பாவித் தமிழ் மக்களைக் கொன்று குவித்து அவர்களின் சொத்துக்களை சூறையாடிய ஐக்கிய தேசியக் கட்சியிரோடு கூடிக்குலாவித்திரியும் தமிழினத் துரோகிகள் முஸ்லிம்களுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கத் தேவையில்லை. இவ்வாறு செயற்படுவதற்கு அவர்களுக்கு வெட்கமில்லையா? தமிழர்களைக் கொன்று குவித்த ஐ.தே.க. மீது இடி விழ வேண்டும். என்று ஆளும் கட்சி எம்.பி ஏ.எச்.எம். அஸ்வர் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை அமர்வின் போது ஆளும் கட்சியின் சாந்த பண்டார எம்.பி.யினால் கொண்டு வரப்பட்ட 1983 இல் வேலை இழக்கச் செய்யப்பட்ட அரச ஊழியர்கள் தொடர்பிலான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அஸ்வர் எம்.பி இங்கு மேலும் கூறுகையில்;
1983 ஜூலையில் ஐக்கிய தேசியக் கட்சி தமிழ் மக்கள்மீது இனக்கலவரமொன்றை கட்டவிழ்த்துவிட்டு நாடு முழுவதும் தமிழ் மக்களைக்கொன்று குவித்தது. தமிழ் மக்களே அன்று இலக்கு வைக்கப்பட்டனர். அப்பாவித் தமிழ் மக்களின் வீடுகள் வர்த்தக நிலையங்கள் கொள்ளையிடப்பட்டன அழிக்கப்பட்டன.
யாழ். பொது நூலகம் எரிக்கப்பட்டது. அன்று நடந்த இனப்படுகொலைக் கலவரத்தை அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்த்தன ஒரு வார்த்தையின் ஊடாக கட்டுப்படுத்திருக்க முடியும். ஆனால்இ அதனை அவர் செய்யவில்லை. அப்படியான ஐக்கிய தேசியக் கட்சியுடன் இன்று கூடிக்குலாவிக் கொண்டிருக்கின்ற தமிழினத் துரோகிகளுக்கு வெட்கமில்லையா.? நான் இந்த சபையில் தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கும் போது யோகராஜன் இடையூறு செய்கிறார்.
தமிழினத் துரோகிகள் முஸ்லிம்களுக்காக இன்று நீலிக்கண்ணீர் வடிக்கின்றனர் இவர்களைப் பற்றி முஸ்லிம் சமூகம் நன்கு அறியும். மேலும் அப்பாவித் தமிழ் மக்களைக் கொன்று குவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் மீது இடி விழ வேண்டும்என்றார்.

0 comments :
Post a Comment