அதிகாரத்தைப் பகிர்ந்து நாட்டை ஐக்கியப்படுத்துவோம் என்ற அமைப்பு இன்று (23.07.14) கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் தேசிய ஐக்கிய முன்னணி தலைவரும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான அஸாத் சாலி தெரிவித்த கருத்துக்கள்.
இன்று இந்த நாட்டின் பொலிஸை அல்லது ஏனைய படையினரை எடுத்துக் கொண்டால் அவர்கள் சட்டத்தை நிலைநாட்டும் அல்லது சமாதானத்தை பாதுகாக்கும்; பிரிவினராகத் தெரியவில்லை. மாறாக சட்டம் சமாதானம் ஒழுங்கு என்பனவற்றை தொடர்ந்து துச்சமென மதித்து செயற்படுபவர்களாகவே காணப்படுகின்றனர். நாளுக்கு நாள் இந்த நிலை மோசமடைந்து கொண்டே செல்கின்றது.
இதைத் தான் இந்த நாட்டில் சட்டத்துக்கு மதிப்பே இல்லை என்று நாமும் தொடர்ந்து கூறி வருகின்றோம். பாராளுமன்ற உறுப்பினர் நில்வளா விஜேசிங்க கிராம சேவை அதிகாரி ஒருவரை தாக்கிவிட்டு இரண்டு நாற்களாக தலைமறைவாகி திரிந்தார். அவரை பொலிஸாரால் கைது செய்ய முடியவில்லையாம். அவர் வீட்டில் இருக்கவில்லையாம். கடைசியில் நேற்று அவராகவே சென்று நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். பொலிஸாரின் இந்த கதையை யார் தான் நம்புவது? ஒரு பாராளுமன்ற உறுப்பினரையே கண்டு பிடிக்க முடியவில்லை என்றால் இந்த பொலிஸாரால் மக்களுக்கு என்ன பயன்?. பாராளுமன்ற உறுப்பினர்களும் பிரதி அமைச்சர்களும் பொலிஸாரையே தாக்குகின்றனர்.
அவரின் வாகனங்களுக்கு தீ மூட்டுகின்றனர். ஆனால் பொலிஸ் திணைக்களத்தால் தனது திணைக்கள அதிகாரிகளையே காப்பாற்றிக் கொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது. அந்தளவுக்கு நாடு கெட்டுக் குட்டிச் சுவராகிவிட்டது. ஊவா மாகாண சபைக்கான தேர்தல் தொடர்பாக இதுவரை எந்த ஏற்பாடுகளும் இடம்பெறவில்லை. வேட்பு மனுக்கான திகதிகள் மட்டும் தான் அறிவிக்கப்பட்டுள்ளன. அதற்கிடையில் அரசாங்கம் தனது விளையாட்டைத் தொடங்கிவிட்டது. அந்த மாகாணத்தில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சி அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடவடிக்கைகள் தொடங்குவதற்கு முன்பே இந்தக் கதி என்றால் போகப்போக இன்னும் என்னவெல்லாம் நடக்கும் என்று சற்று யோசித்துப் பாருங்கள். இந்நிலையில் அங்கு எப்படி நியாயமான தேர்தலை எதிர்ப்பாக்க முடியும்? தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது அரசுக்கு நன்கு தெரியும். அதனால் தான் ஆரம்பத்திலேயே அடாவடித்தனத்தை தொடங்கி மக்களை அச்சம் மிக்க ஒரு சூழலுக்குள் இட்டுச் செல்ல முனைகிறார்கள்.
மக்கள் வாக்களிப்பில் பங்கேற்பதை முடியுமானவரையில் தடுப்பது தான் இந்த முயற்சி என்பது தெளிவாகின்றது.சில காலங்களுக்கு முன் ஜனாதிபதியின் மாளிகையில் இருந்து நான்கு பஞ்சவர்ணக் கிளிகள் காணாமல் போயிருந்தன. அவை தற்போது கண்டுபிடிக்கப்பட்டு மீண்டும் கூண்டில் அடைக்கப்பட்டுள்ளன. இந்த கிளிகளோடு சேர்த்து தற்போது ராஜகிரியவில் உள்ள ஒரு கிளியும் (தேர்தல் ஆணையாளர்) அடைக்கப்பட்டுள்ளது. அந்த கிளி ஜனாதிபதி கேட்கும் கேள்வ்pகளுக்கு பதில் சொல்லிக் கொண்டு அவருக்குப் பிடித்தமான விடயங்களை மட்டும் செய்து கொண்டு காலத்தைக் கடத்த தொடங்கியுள்ளது. இடது சாரி போக்குடைய ஒரு குடும்பத்தில் பிறந்து வளர்ந்த ஒருவர் இந்தளவுக்கு தாழ்ந்து போவார் என்று நாம் கொஞ்சம் கூட எதிர்ப்பார்க்கவில்லை. அரசாங்கத்துக்கு நன்மை அளிக்கும் வகையில் தான் அவர் பதுளையில் இருந்து மூன்று ஆசனங்களைப் பிரித்து மொனறாகலைக்கு அளித்துள்ளார்.
அரசுக்கு சார்பாக இல்லாத நாட்டின் ஏனைய மாவட்டங்களிலும் இந்த நிலை விரைவில் தொடருவதற்கு வாய்ப்புண்டு. விஷேடமாக கொழும்பின் ஆசனங்கள் பிரிக்கப்பட்டு அவை களுத்துறைக்கும் கம்பஹாவிற்கும் வழங்கப்படுவதற்கான ஆபத்து காத்திருக்கின்றது. எதிர்க்கட்சிகள் என்ற வகையில் நாம் எல்லோரும் இணைந்து போராட வேண்டிய விடயம் இதுதான். இவற்றை காலம் தாழ்த்துவது உசிதமல்ல எனபதை நாம் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகின்றோம்.நாட்டில் இனவாதம் இல்லை கொழும்பில் இருந்து அம்பாந்தோட்டைக்கும் அங்கிருந்து யாழ்ப்பாணத்துக்கும் அதேபோல் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கும் வந்து கூட விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க முடியும் என்று பெருமையாக அரசாங்கம் கூறுகின்றது ஆனால் யாழ்ப்பாணத்தில் இருந்து விளையாட வருபவர்கள் அடிவாங்கிக் கொண்டு செல்ல வேண்டியுள்ளது. அந்தளவுக்கு தோல்வியைக் கூட பொறுத்துக் கொள்ள முடியாத நிலை அல்லது விளையாட்டில் யாழ்ப்பாண மக்களின் வெற்றியைக் கூட சகித்துக் கொள்ள முடியாத நிலை தோன்றியுள்ளது.
நாட்டை முழுக்க முழுக்க இராணுவ மயப்படுத்தி மக்கள் மத்தியில் அச்ச நிலையைத் தோற்றுவித்தாவது தொடர்ந்து தாங்களே வெற்றியீட்ட வேண்டும் என்பதுதான் இந்த அரசாங்கத்தின் குறிக்கோளாகும். இந்த நாட்டில் எதிர்காலத்தில் மக்கள் வீதிகளில் இறங்கி அச்சமின்றி வாக்களிக்கும் நிலை கூட இல்லாமல் போகும் என்று தான் நாம் எதிர்ப்பார்க்கின்றோம். அப்படி ஒரு சூழலை தான் அரசாங்கம் உருவாக்கி வருகின்றது.குராம்ஷேக் கொலை வழக்கில் இரண்டரை வருடங்களுக்குள் விசாரணைகள் முடிக்கப்பட்டு தீர்ப்பும் அளிக்கப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் அரசாங்கமும் இலங்கையில் உள்ள அந்த நாட்டின் உயர் ஸ்தானிகர் ஆலயமும் கொடுத்த நெருக்குதல் தான் இதற்கு முக்கிய காரணம். இதற்காக நாம் பிரிட்டிஷ் அரசுக்கும்ää உயர் ஸ்தானிகர் ஆலயத்துக்கும் நன்றிகளைத் தெரிவிக்கின்றோம். ஆனால் இந்த நாட்டில் இன்னும் எத்தனையோ பேர் பல வருடங்களாக தமது வழக்குகளுக்கு தீர்ப்பு கிடைக்காமல் நீதிமன்றங்களுக்கு அலைந்த வண்ணம் உள்ளனர். குராம்ஷேக் விடயத்தில் இவ்வளவு விரைவாக ஒரு முடிவுக்கு வர முடியுமென்றால் ஏன் எமது உள்ளுர் பிரஜைகளின் வழக்குகளிலும் இந்த வேகம் இருக்க் கூடாது.
வெளிநாட்டு அழுத்தம் வந்தால் தான் எல்லாமே நடக்குமா? சட்டம் இரண்டு விதங்களில் செயற்படும் ஒரு நாடு இதுவென்பதை தான் இதன் மூலம் நாம் அறிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது.எமது வக்ப் சபை பற்றியும் அதற்கு ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள தகுதியற்ற தலைவர் பற்றியும் நாம் தொடர்ந்து கூறிவந்துள்ளோம். பள்ளிவாசல்களின் நிறத்தை நீலமாக மாற்றவும் தனது கட்சி உறுப்பினர்களிடம் நிர்வாகத்தை ஒப்படைக்கவும் தான் ஜனாதிபதி வக்ப் சபையைப் பயன்படுத்தி வருகின்றார். இந்த வக்ப் சபைக்கு மேலாக அதன் மீது அதிகாரம் செலுத்தக் கூடிய ஒரு அமைப்பும் உள்ளது. அதை வக்ப் ட்ரைபியுனல் அல்லது வக்ப் விசாரணை மன்றம் என்று அழைக்கின்றோம். இந்த விசாரணை மன்றம் நீதிச் சேவைகள் ஆணைக்குழுவால் நியமிக்கப்படுவதாகும். நீதிபதிகள் மற்றும் நீதிமன்ற நியமனங்களுக்குப் பொறுப்பானதே இந்த நீதிச் சேவைகள் ஆணைக்குழு. இங்கே அரசியலுக்கு இடமளிக்கப்படுவதில்லை.
வக்ப் சபையின் சில நடவடிக்கைகள் பிழையானதுää பள்ளிவாசல்கள் விடயங்களை அவர்கள் கையாண்டுள்ளமை தவறானது என்று வக்ப் விசாரணை மன்றம் வழங்கிய உத்தரவையும் மீறி தற்போது முஸ்லிம் சமய விவகாரத் திணைக்களப் பணிப்பாளரும் செயற்படத் தொடங்கியுள்ளார். இது சம்பந்தமான முக்கிய கோவைகளை மறைத்து விட்டு பணிப்பாளரும் வக்ப் சபை தலைவரோடு இணைந்து ஜனாதிபதியை மட்டும் குஷிப்படுத்தும் விடயங்களில் ஈடுபட்டுள்ளார். சம்பந்தப்பட்ட ஒரு விடயத்தில் வக்ப் விசாரணை மன்றம் வழங்கிய தீர்ப்பு வக்ப் சபையின் ஏனைய உறுப்பினர்களுக்குத் தெரியாமல் மறைக்கப்பட்டுள்ளது. பணிப்பாளர் ஒரு அரச அதிகாரி என்பதை மறந்து செயற்பட்டுள்ளார். தனது அதிகாரத்தை மீறி அவர் வக்ப் சபை தலைவருக்கு ஆதரவாக பொலிஸ் மற்றும் வங்கிக்கும் கடிதங்களை அனுப்பியுள்ளார்.
நோன்பு கால பாவனைக்காக எமக்கு அனுப்பப்ட்ட 200 மெட்ரிக் தொன் பேரீச்சம் பழங்கள் திருடப்பட்டமை தொடர்பாக நாம் ஏற்கனவே தெரிவித்திருந்தோம். அதன் பிறகு பஸில் ராஜபக்ஷ அமைச்சர் ஜோன்ஸ்டன் ஊடாக புறம்பாக 300 மெட்ரிக் தொன்னை அரசாங்கத்தின் சார்பாகக் கொண்டுவந்தார். அந்தப் பழங்களாவது முஸ்லிம் மக்களுக்கு கிடைக்கும் என்று நினைத்தால் தற்போது அதுவும் சூறையாடப்பட்டு விட்டது. இன்னும் எவருக்கும் ஒரு பழமாவது வழங்கப்படவில்லை. இவற்றை பள்ளிவாசல்கள் ஊடாக முஸ்லிம்களுக்கு வழங்குவதற்கு முன்பாக பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ஒவ்வொருவருக்கும் 750 கிலோ பேரீச்சம் பழங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் லொறிகளை கொண்டு வந்து அவற்றை பெற்றுச் செல்லுமாறும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்போது ரதன தேரர்ää மேதானந்த தேரர் சம்பிக்க ரணவக்க போன்றவர்களும் மற்றும் சோமதாஸää பியதாஸääதர்மலிங்கம் என எல்லோரும் ஈச்சம் பழங்களைப் பெற்றுக் கொள்ளவுள்ளனர். இது ஒரு கேலிக்கூத்தான விடயமாகும். இதற்கு முன் ஒருபோதும் முஸ்லிம்களுக்கு இந்தளவு அநீதி இழைக்கப்படவில்லை. இந்த ஈச்சம்பழங்கள் நோன்பாளிகளுக்கு வழங்கப்;படும் என நினைக்கின்றீர்களா? நிச்சயமாக இவை மீண்டும் சந்தைக்கு விற்பனைக்குதான் வரும். இதற்காகத்தான் அமைச்சர் பஸில் 89 மில்லியன் ரூபா செலவழித்து இவற்றை கொண்டு வந்துள்ளார். எதை எங்கு எப்படி யாருக்காக செய்ய வேண்டும் என எதுவுமே தெரியாமல் எல்லா விடயங்களையும் கேலிக் கூத்தாக மாற்றி வரும் ஒரு அரசாங்கமாக இது மாறிவிட்டது.
வட பிராந்தியத்தில் ஒன்பது மற்றும் 11 வயதான இரண்டு சிறுமிகள் அவர்கள் பாடசாலை செல்லும் வழியில் கடத்திச் செல்லப்பட்டு கடற்படை முகாமில் வைத்து மாறி மாறி பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளனர். பல தினங்களாக இது நீடித்துள்ளது. பாடசாலை செல்லும் வழியில் முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டு பாடசாலை முடிவடையும் நேரத்தில் வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். தொடர்ந்து பாடசாலைக்கு வராததால் இந்தப் பிள்ளைகளின் வீட்டுக்கு வந்து பாடசாலை நிர்வாகம் விசாரித்தபோது தான் எல்லாமே வெளிவந்துள்ளது. கடற்படை முகாமில் உள்ள வீரர்களால் தான் இந்த அநியாயம் புரியப்பட்டுள்ளது. ஆனால் ஜனாதிபதியின் மைத்துனர் வீட்டில் திருடிய நபரை 24 மணிநேரத்துள் கைது செய்த திறமை மிக்க பொலிஸாரால் இந்த சிறுமிகள் விடயத்தில் சம்பந்தப்பட்ட கடற்படை வீரர்களை இன்னும் கைது செய்ய முடியவில்லை.
அது மட்டுமன்றி பிழையான பலரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்து பாதிக்கப்பட்ட சிறுமியால் யாரையும் அடையாளம் காட்ட முடியாமல் அவரைக் குழப்பி ஒட்டு மொத்தமாக இந்த சம்பவத்தை மூடி மறைக்க பொலிஸார் முயன்றுள்ளனர். (இந்த சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி முன்னர் அல்ஜஸீரா தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின் ஒரு பகுதியை கையடக்க தொலைபேசி மூலம் ஊடகவியலாளர்களுக்கு போட்டுக் காண்பிக்கப்பட்டது) அதில் ஜனாதிபதியிடம் இலங்கையில் பள்ளிவாசல்கள் உடைக்கப்படுகின்றமை பற்றி கேட்கப்பட்டபோது இவை எல்லாம் ஆங்காங்கே இடம்பெற்ற சிறுசிறு சம்பவங்கள். ஏழு வயது சிங்கள சிறுமி ஒருவர் முஸ்லிம் ஒருவரால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டமை தான் இதற்கு மூல காரணம். ஓவ்வொரு பள்ளிவாசல் தாக்குதலின் பின்னணியிலும் இவ்வாறான சம்பவங்கள் உள்ளன என்று ஜனாதிபதி பதில் அளிக்கின்றார்.இந்த பேட்டி வெளியானவுடனேயே நாம் ஜனாதிபதிக்கு அறிவித்தோம். இந்த சம்பவம் எங்கு நடந்தது? யார் இதற்கு காரணம்? எந்த பொலிஸ் நிலையத்தில் இது சம்பந்தமாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது? பாதிக்கப்பட்ட சிறுமி எங்கே? அவர் யார்? என்ற கேள்விகளை எழுப்பியிருந்தோம்.
ஆனால் அவற்றுக்கு இதுவரை எந்தவொரு பதிலும் இல்லை. இது சர்வதேச ஊடகத்துக்கு ஜனாதிபதி மிகவும் பொறுப்பற்ற முறையில் உரைத்துள்ள அப்பட்டமான பொய். ஆனால் இன்று யாழ்ப்பாணத்தில் நடந்திருப்பது முற்றிலும் உண்மை. ஜனாதிபதி கூறியது உண்மையானால் அவரின் வாதப்படி இன்று யாழ்ப்பாண மக்கள் எந்தளவு கொதித்து எழ வேண்டும்? என சற்று சிந்தித்துப் பாருங்கள். ஜனாதிபதி அந்தப் பேட்டியில் பொய் மட்டும் உரைக்கவில்லை. பொறுப்பில்லாமல் பொய் கூறப் போய் இந்த நாட்டில் பள்ளிவாசல்கள் உடைக்கப்படுகின்றன என்பதை அவரே ஒப்புக் கொண்டுள்ளார். அது மட்டுமல்ல அவற்றை நியாயப்படுத்தவும் அவர் முயன்றுள்ளார்.சிறுபான்மையின மக்களின் காணிகளை சூறையாடுவதிலும் இந்த அரசு மிகவும் முனைப்போடு செயற்படுகின்றது. மிகவும் விநோதமான ஒரு தீராத காணிப்பசி ஆளும் குடும்பத்துக்கு எற்பட்டுள்ளது. மற்றவர்களின் காணிகளைக் கண்டால் போதும் அதை கையகப்படுத்திவிட்டு தான் அடுத்த வேலை.
இதற்காகவே அரச இயந்திரம் முழமையாகப் பயன்படுத்தப்படுகின்றது. யாழ்ப்பாணத்தில் காணிகள் பலவற்றை கபளீகரம் செய்ய இராணுவ பலம் பாவிக்கப்படுகின்றது. மக்கள் தொடர்ந்து பல தினங்களாக அதை எதிர்த்துப் போராடி வருகின்றனர். இராணுவம் தனது முயற்சிக்கு விநோதமான விளக்கம் அளிக்கின்றது. அந்தக் காணிகள் முன்னர் புலிகளின் முகாம் இருந்த இடம் என்கிறார்கள். இருந்திருக்கலாம். புலிகள் மக்களிடம் இருந்து பறித்து முகாம் அமைத்தார்கள் என்பதற்காக அந்தக் காணிகள் தற்போது படையினரால் மீட்கப்பட்டுள்ள நிலையில் அது அவர்களுக்கு சொந்தமாகிவிட முடியுமா? ஏற்கனவே அநியாயம் புரிந்தவர்கள் மக்களிடம் இருந்து காணிகளைப் பறித்திருந்தால் அதை மீட்டு மீண்டும் அந்த மக்களிடம் ஒப்படைக்க வேண்டியது படையினரின் கடமை அல்லவா? அவ்வாறு காணிகளை மீட்டுக் கொடுத்து மக்களின் அன்பையும் நன்மதிப்பையும் பெறுவதற்கு பதிலாக அதை மீண்டும் கபளீகரம் செய்ய முயன்றால் இராணுவத்துக்கும் பயங்கரவாதிகளுக்கும் என்ன வித்தியாசம் இருக்க முடியும்? சகல மக்களும் சமாதானத்துடனும்ää இணக்கப்பாட்டுடனும் வாழும் சூழல் உருவாக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் அமைச்சர்கள் வாய் கிழிய கத்துகின்றனர். ஆனால் இந்த சமாதானமும் இணக்கப்பாடும் எங்கே உள்ளது என்று கேற்க விரும்புகின்றேன். இணக்கப்பாட்டுக்கோ சமாதானத்துக்கோ இந்த அரசாங்கம் இருக்கின்ற வரைக்கும் இடம் இல்லை. அடுத்த தேர்தல்களில் சிறுபான்மை மக்களின் வாக்குகள் தமக்கு கிடைக்காது என்பதை அரசு நன்கு அறியும்.
அதனால் சிங்கள அடிப்படைவாத போக்குடைய சக்திகளுக்கு உக்கமளித்து சிங்கள மக்களை தூண்டி அவர்களின் வாக்குகளை ஒட்டுமொத்தமாக வேட்டையாடும் நிலைக்கு அரசு வந்து விட்டது. ஆனால் இது எங்கு எப்படி சாத்தியமாகும் என்பது எவருக்கும் தெரியாது. ஆனாலும் அரசு தற்போது தனக்குள்ள ஒரே உபாயமாக இதை தான் நம்பியுள்ளது. சிங்கள மக்களை இவ்வாறு ஏமாற்ற முடியும் என்று அரசு நினைத்தால் அது முற்றிலும் தவறானது. இந்த அரசாங்கத்தின் திருகுதாளங்கள் அனைத்தையும் சிங்கள மக்களும் இன்று நன்கு உணர்ந்துள்ளனர். இது கூச்சலிடும் கூட்டத்துக்கு பாட்டுப்பாடும் அரசு. புpரச்சினைகளுக்குத் தீர்வு காணும் அரசல்ல.தற்போது கொள்ளையடித்தவற்றை வெளிநாடுகளுக்கு சுருட்டும் முயற்சிகளும் இடம்பெறுகின்றன.
ஷீஷெல்ஸில் இலங்கை வங்கியின் கிளை திறக்கப்பட்டிருப்பது இதற்காகத் தான் என்று கூறப்படுகின்றது. இல்லையேல் மொத்தமாக 90 ஆயிரம் பேரை மட்டுமே சனத் தொகையாகக் கொண்ட ஒரு நாட்டில் எதற்காக அவசரமாக இலங்கை வங்கியின் கிளையைத் திறக்க வேண்டும்? ஷீஷெல்ஸில் இலங்கை வங்கியின் கிளை திறக்கப்பட்டிருப்பதும் ஸ்ரீலங்கள் விமான சேவை தொடங்கப்பட்டிருப்பதும் இங்குள்ளவற்றை அங்கு கொண்டு போய் சேர்ப்பதற்காகத் தான்.
இதை நாட்டு மக்கள் நன்கு அறிவர். அரசாங்கத்துக்குள் இருப்பவர்களுக்கும் இது நன்றாகத் தெரியும். இந்த நாட்டை லிபியாவாகவோ அல்லது ஈராக்காகவோ மாற்ற இந்த நாட்டு மக்கள் ஒருபோதும் இடமளிக்க் கூடாது. இந்த நாட்டில் சமாதானத்தைப் பேண வேண்டியது மக்களின் பொறுப்பாக உள்ளது.இந்த அரசின் ஆயுள் காலம் முடிவடையும் நிலைக்கு வந்து விட்டது. நவம்பரில் தேர்தல் நடந்தால் ஒருவேளை அதுவே கடைசியாக இருக்கலாம். மக்கள் அரசுக்கு விடை கொடுக்கத் தயாராக வேண்டும். எதிர்க்கட்சிகளும் இந்த விடயத்தில் ஒன்றிணைய வேண்டும் பொது வேட்பாளர் பற்றி இப்போது பேச வேண்டாம். அதை நேரம் வரும்போது பார்த்துக் கொள்ளலாம். மோசடிகளும் ஊழலும் மிக்க அரசை துரத்துவதற்கான பொது வேலைத் திட்டமும் அதற்கான உடன்பாடுமே இன்றைய சூழலில் முக்கியமானதாகும். இது பற்றி சரத் பொன்சேகா தரப்பினருடனும்ää ஜே.வி.பி யினருடனும் விரிவான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள நாம் தயாராக உள்ளோம்.
0 comments :
Post a Comment