இரு பெருநாட்களும் அதன் ஒழுங்குவிதிகளும்


முனாப் நுபார்தீன்-

குறிப்பிட்ட நாட்கள் (நோன்பில் விடுபட்டுப் போனதைப்) பூர்த்தி செய்ய, உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வை நீங்கள் பெருமை படுத்தி தக்பீர் செய்து அவனுக்கு நன்றி செலுத்துவதையுமே (அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்) (அல்குர்ஆன், 2:185)

நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு அவற்றை உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறோம் எனினும் குர்பானியின் மாமிசங்களோ, அவற்றின் உதிரங்களோ அல்லாஹ்வை ஒரு போதும் அடைவதில்லை ஆனால் உங்க ளுடைய தக்வா (பயபக்தி) தான் அவனை அடையும்; அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காண்பித்ததற்காக அவனை நீங்கள் பெருமைப் படுத்தி தக்பீர் செய்யும் பொருட்டு இவ்வாறாக அவற்றை உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறான்; எனவே நல்லோர்களுக்கு நன்மாராயம் கூறுவீராக (அல்குர்ஆன், 22:36-37)

இஸ்லாத்தின் மிக முக்கிய சிறப்பம்சங்களுள் ஒன்றுதான் இரு பெருநாள் தினங்களுமாகும் இது இஸ்லாத்தின் வெளிப்படையான அடையாளச் சின்னங்களில் முக்கிய ஒன்றாகும் இதை நாம் மதித்து கண்ணியப்படுத்துதல் தக்வா எனும் பயபக்தியைச் சார்ந்ததாகும். ஏனெனில் வல்ல அல்லாஹ் கூறுகிறான்: 

'அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களை யார் கண்ணியப்படுத்துகின்றாரோ நிச்சயமாக அது உள்ளங்களில் உள்ள இறையச்சத்தின் வெளிப்பாடேயாகும்'. (22:32) 

இப்புனித நாளைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் சிறப்பித்துள்ளார்கள்.''நபி (ஸல்) அவர்கள் மதீனா நகருக்கு வருகை தந்த போது மதீனாவாழ் மக்களுக்கு இரண்டு திருநாள்கள் இருந்தன. அவ்விரு நாட்களிலும் அவர்கள் விளையாட்டு நிகழ்ச்சிகளில் ஈடுபடுவார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் ''இவ்விரு நாட்களை விடச்சிறந்த இரு நாட்களை அல்லாஹ் உங்களுக்கு ஏற்படுத்தியுள்ளான். அவை குர்பானி தியாகத் திருநாள், மற்றும் ஃபிதர் ஈகைத் திருநாள் ஆகிய இரண்டுமாகும்'' எனறார்கள். (அறிவிப்பவர்: அனஸ் (ரழி) அவர்கள் நூல்: அபூதாவூத், நஸயீ)

எனவே இப்புனித நாளை நாம் நபி (ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழியில் நின்று அனுஷ்டிப்பது அவசியமாகும். இதுவே ஏனைய சமூகத்தினர்களதும் நமதும் பெருநாளைக்குள்ள வேறுபாடாகும்.

முதலாவது தக்பீர் சொல்லுதல்

முதலில் மகிழ்ச்சிகரமான இவ்விருநாட்களை நாம் தக்பீர் முழக்கத்துடன் வரவேற்க வேண்டும். 

நோன்புப் பெருநாள் தக்பீர் பற்றி அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது:
குறிப்பிட்ட நாட்கள் (நோன்பில் விடுபட்டுப் போனதைப்) பூர்த்தி செய்ய, உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வை நீங்கள் பெருமை படுத்தி தக்பீர் செய்து அவனுக்கு நன்றி செலுத்துவதையுமே (அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்) (அல்குர்ஆன், 2:185)

ஹஜ்ஜுப் பெருநாள் தக்பீர் பற்றி அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது:

நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு அவற்றை உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறோம். எனினும் குர்பானியின் மாமிசங்களோ, அவற்றின் உதிரங்களோ அல்லாஹ்வை ஒரு போதும் சென்றடைவதில்லை. ஆனால் உங்களுடைய தக்வா (பயபக்தி) தான் அவனைச் சென்றடையும். அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காண்பித்ததற்காக அவனை நீங்கள் பெருமைப் படுத்தி தக்பீர் செய்யும் பொருட்டு இவ்வாறாக அவற்றை உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறான். (அல்குர்ஆன், 22:36-37)

அல்லாஹ் எமக்கு செய்திருக்கும் அருட்களுக்கும் இன்னும் இவ்வாறான புனிதத் தினங்களை வழங்கியதற்கும் நாம் நன்றி செலுத்தும் வகையில் அல்லாஹ்வை பெருமைப்படுத்தும் விதமாக, அன்றைய தினங்களில் தக்பீர் சொல்லுதல் சுன்னத்தாக ஆக்கப்பட்டுள்ளது. எனவே அன்றைய தினம் அதிகமதிகம் தக்பீர்,தஸ்பீஹ் போன்றவைகளை சொல்வதில் கழிக்கப்படல் வேண்டும்.

குளித்லும் தொழுதலும்

அடுத்ததாக நாம் இந்நாளை ஆனந்தத்துடன் கொண்டாடுவதற்கு முன் தொழுகையைக் கொண்டு ஆரம்பிக்க வேண்டும்.

''நாம் முதலில் தொழுகையை ஆரம்பிப்போம். அதன் பின் (இல்லம்) திரும்பி அறுத்து பலியிடுவோம் யார் இவ்வாறு செய்கிறாரோ அவர் நமது வழி முறையைப் பேணியவராவார்'' என்று நபி (ஸல்) அவர்கள் சொற்பொழிவில் குறிப்பிட்டார்கள். அறிவிப்பவர்: பர்ரா (ரழி) அவர்கள் நூல்: புகாரி

நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் (பள்ளியில் தொழாமல்) திடலுக்கு (மைதானத்திற்கு) செல்பவர்களாக இருந்தார்கள். அவர்கள் முதன் முதலில் தொழுகையையே துவக்குவார்கள். தொழுது முடித்த பின்னர் மக்களை முன்னோக்குவார்கள். மக்களெல்லாம் தங்கள் வரிசைகளில் அப்படியே அமர்ந்திருப்பார்கள். அவர்களுக்கு போதனை செய்வார்கள், (வலியுறுத்த வேண்டியதை) வலியுறுத்துவார்கள். (கட்டளையிட வேண்டியதை) கட்டளையிடுவார்கள், ஏதேனும் ஒரு பகுதிக்கு படைகளை அனுப்ப நாடியிருந்தால் அனுப்புவார்கள். ஏதேனும் (கட்டளையிட வேண்டியிருந்தால் கட்டளையிடுவார்கள் பின்னர் (இல்லம்) திரும்புவார்கள். அறிவிப்பவர்: அபூ ஸயீத் அல் குத்ரி (ரழி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், நஸயீ

பெருநாள் தொழுகைக்குச் செல்வதற்கு முன்னதாகக் குளித்து சுத்தம் செய்து கொள்வது சுன்னத்தாகும் அத்துடன் தன்னிடம் இருக்கக்கூடிய ஆடைகளில் சிறந்ததை அணிவதுடன் தம்மிடம் இருக்கக்கூடிய வாசனைத் திரவியங்களிலும் பூசிக்கொள்ளுதல், நபி வழியாகும். ஆனால் பெண்கள் தங்களின் அலங்காரங்களை வெளிக்காட்டாத வகையில் ஆடையணிவதுடன் வாசனை எதுவும் பூசிக்கொள்ளாமல் தொழுகைக்குச் செல்ல வேண்டும். அவர்கள் தங்கள் வீடுகளில் அந்நிய ஆண்கள் இல்லாத போது தங்களை அலங்கரித்து வாசனைகளை பூசிக்கொள்வதில் தவறேதும் கிடையாது. பெருநாள் தொழுகை நடை பெறுவது பள்ளிவாயிலாக இருந்தால் மாதவிடாய், மற்றும் பிரசவத் தீட்டையுடைய பெண்கள் செல்லக்கூடாது ஆனால் தொழுகை பள்ளி வாயிலுக்கு வெளியே மைதானத்தில் நடைபெறுமாகவிருந்தால் அவர்கள் தொழுகையில் கலந்து கொள்ளாது பயான் மற்றும் தக்பீர் சொல்லுதல் போன்ற ஏனைய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளச் செல்லலாம். பெருநாள் தொழுகையை திறந்த ஒரு மைதானத்தில் நிறைவேற்றுவதுதான் நபிவழியாகும் எனினும் மழை மற்றும் கடினமான வெய்யில், போன்ற காரணங்கள் இருந்தால் பள்ளிவாசலில் தொழலாம். 

பெருநாள் தொழுகையைக் கழாச் செய்தலும் அதற்குரிய நேரமும்.

ஒரு வாகனக் கூட்டத்தினர் நபி (ஸல்) அவர்களிடம் வருகை தந்து தாங்கள் நேற்று பிறையைப் பார்த்தாக சாட்சி அளித்தனர். நபி (ஸல்) அவர்கள் நோன்பை விடுமாறும், காலை விடிந்ததும் தொழும் திடலுக்கு செல்லுமாறு அவர்களுக்கு உத்தரவிட்டார்கள். அறிவிப்பவர்: அபூ உமைர் (ரழி) நூல்கள்: அபூதாவூத், நஸயீ

மேற்படி அறிவிப்பு பெருநாள் தொழுகை ழுஹருடைய நேரத்திற்கு முன் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதற்கும், அவ்வாறு அதற்கு உரிய நேரத்தில் அதனை நிறைவேற்ற முடியாது போனால் மறுநாள் அதன் நேரத்தில்தான் அது நிறைவேற்றப்பட வேண்டும் என்பதற்கும் சான்றாகும்.

இரு பெருநாளைக்கும் இடையிலான வேறுபாடுகள்.

Y நோன்புப் பெருநாளைக்குரிய தக்பீர் சவ்வால் பிறை தெரிபட்டால் அன்று மஃரிபிலிருந்து மறு நாள் பெருநாள் தொழுகை வரை சொல்லப்படும்
Y ஹஜ் பெருநாளைக்குரிய தக்பீர் இரு விதமாக சொல்லப்படும். 

1. துல்ஹஜ் பிறை 01 ஆம் நாள் மஃரிபிலிருந்து அய்யாமுத் தஷ்ரீக் அதாவது துல்ஹஜ் 13 ம் தினத்தின் அஸர் வரை பள்ளி வாயில்கள், கடைத்தெருக்கள், வீடுகள் போன்ற அனைத்து இடங்களிலும் தக்பீர் சொல்லுதல் ஆண்கள் சப்தமாக கூறுவது விரும்பத்தக்கது பெண்கள் சத்தமாகச் சொல்லக் கூடாது. 

2. இரண்டாம் வகை அரபாவுடைய தினம் அதாவது துல்ஹஜ் 9ம் நாள் சுபஹிலிருந்து அய்யாமுத் தஷ்ரீக் அதாவது துல்ஹஜ் 13 ம் தினத்தின் அஸர் வரை ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னாலும் தக்பீர் சொல்லுதலாகும்.

Y நோன்புப் பெருநாளைக்குத் தொழச் செல்லுமுன் ஒற்றைப்பட ஈத்தம்பழங்களை சாப்பிட்டு விட்டுச் செல்லுதல் சுன்னத்தாகும். ஈத்தம் பழம் கிடைக்கவில்லையாயின் ஏதாவது தன்னிடம் இருக்கக்கூடிய உணவை சாப்பிட்டு விட்டுச் செல்லுதல் சிறந்ததாகும்.

Y ஹஜ்ஜுப் பெருநாளைக்குத் தொழச் செல்லுமுன் எதுவும் சாப்பிடாமல் செல்வது சுன்னத்தாகும். அவ்வாறே தான் குர்பான் கொடுப்பவராக இருந்தால் அவர் குர்பான் இறைச்சியையே அன்றைய தினம் தொழுதுவிட்டு வந்து சாப்பிட வேண்டும். இதுவே அவருக்கு சுன்னத்தாகும். அவர் குர்பான் கொடுக்கவில்லையாயின் தன்னிடம் இருக்கக்கூடிய உணவைச் சாப்பிடலாம்.

Y நோன்புப் பெருநாளைக்குத் தொழுவதற்கு முன் ஜக்காத்துல் பித்ர் கொடுப்பது கடமையாகும். தொழுகை முடியும் வரை பிற்ப்படுத்துதல் கூடாது.

Y ஹஜ்ஜுப் பெருநாளைக்கு தொழுகை முடிந்த பிறகு உழ்ஹிய்யா கொடுப்பது சுன்னத்தாகும். தொழுகைக்கு முன் கொடுக்கக் கூடாது.

Y ஜக்காத்துல் பித்ர் கொடுப்பது ரமழானின் இறுதி நாளிலிருந்து பெருநாள் தொழுகைக்குச் செல்லும் வரையிலாகும். ஓரிரு தினங்கள் முன்னதாகக் கொடுத்து விடுவதில் தவறில்லை.

Y உழ்ஹிய்யா கொடுப்பது பெருநாள் தினத்திலிருந்து அய்யாமுத் தஷ்ரீக் என்னும் மூன்று தினங்களுடன் துல்ஹஜ் 10, 11, 12, 13 ஆகிய நான்கு நாட்க்களுமாகும். பெருநாளன்று கொடுப்பது மிகவும் ஏற்றமுடையதே.

குர்பானியை நிறைவேற்றுபவர் தனது உழ்ஹிய்யாவின் இறைச்சியை உண்பது நபிவழியாக இருப்பதுடன் அல்லாஹ்வின் கட்டளையாகவும் உள்ளது.

'அவற்றிலிருந்து நீங்கள் உண்ணுங்கள்! தேவையுள்ளோருக்கும் உண்ணக் கொடுங்கள்'( அல்குர்ஆன், 22:28) 

Y தொழுகைக்குச் செல்லும் போது ஒரு வழியாலும் திரும்பி வரும் போது வேறு வழியாலும் செல்லுதல் நபிவழியாகும்.

தவிர்த்துக் கொள்ள வேண்டியவைகள்.

இசையுடன் கூடிய பாடல்களை கேட்டல், திரைப்படங்கள் பார்த்தல், ஆண்கள் பெண்கள் கலந்து கலியாட்டங்களில் ஈடுபடுதல், பட்டாசு கொழுத்துதல், மற்றும் ஏனைய அணைத்துவிதமான வெறுக்கத்தக்க காரியங்களிலும் ஈடுபடுதல், போன்றவைகளை அந்தப் புனித நாட்களில் தவிர்த்துக் கொள்ளுதல் அவசியமாகும்.

பெருநாள் வெள்ளிக்கிழமையில் வந்தால்.

பெருநாள் வெள்ளிக்கிழமையில் ஏற்படுமேயானால் இரண்டு தொழுகையையும் வெவ்வேறாக தொழுதாக வேண்டுமா அல்லது இரண்டில் ஒன்றை மட்டும் தொழுதால் போதுமா? என்ற கேள்வி எழலாம். 

இது பற்றி நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு தெளிவுப்படுத்தியுள்ளார்கள்.

''இன்றைய தினம் இரு பெருநாள்கள் வந்துவிட்டன. யார் விரும்புகிறாரோ அவருக்கு பெருநாள் தொழுகை ஜும்ஆவுக்கும் போதுமானதாகும். ஆனால் நாம் ஜும்ஆ நடத்துவோம் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா நூல்கள்: அபூதாவூத், இப்னுமாஜா

மேற்படி அறிவிப்பின் மூலம் பெருநாள் தொழுகை தொழுதால் ஜும்ஆ தொழுகை விரும்பினால் தொழலாம் இல்லையெனில் விட்டுவிடலாம் என்று நபி (ஸல்) அவர்கள் அங்கீகரித்துள்ளார்கள்.

பெருநாள் தொழுகைக்கு முன்பும் பின்பும் தொழுலாமா?

பெருநாள் தொழுகைக்கு முன்பாக லுஹர் தொழுகை உட்பட எத்தொழுகையும் தொழக்கூடாது.

நபி (ஸல்) அவர்கள் நோன்பு பெருநாள் தினத்தில் புறப்பட்டு இரண்டு ரக்அத்கள் தொழுதனர். அதற்கு முன்பும் பின்பும் எதையும் அவர்கள் தொழவில்லை. அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் நூல்கள்: புகாரி, முஸ்லிம், திர்மிதி

நபி (ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகைக்கு முன்பு எத்தொழுகையும் தொழமாட்டார்கள், வீட்டிற்கு நபி (ஸல்) அவர்கள் திரும்பினார்கள். இரண்டு ரக்அத் தொழுதார்கள். அறிவிப்பவர்: அபூஸயீத( ரழி) நூல்: இப்னுமாஜா

பெருநாள் தொழுகை பள்ளிவாயலுக்கு வெளியில் மைதானத்தில் நிறைவேற்றப்படுமானால் அத்தொழுகைக்கு முன்பும் பின்பும் எந்தவொரு தொழுகையும் தொழக்கூடாது. வீட்டில் தொழுவதில் ஆட்சேபனை இல்லை என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும். அவ்வாறே பெருநாள் தொழுகை பள்ளிவாயலில் நடாத்தப்பட்டால் பள்ளிவாயலுக்குச் செல்பவர் பள்ளிக் கானிக்கை இரண்டு ரகஅத்து தொழுவது அவசியமாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :