அனைவருமே எதிர்க்கும் அரசாங்க முறைமைக்கு எதிராக தனித்து போராடாது அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்படுமேயானால் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையினை மாற்றியமைக்க முடியும். ஆட்சி முறைமையில் மாற்றம் ஏற்படுமாயின் தமிழர் பிரச்சினைக்கான தீர்வும் இலகுவில் எட்டப்படும் என தெரிவிக்கும் மாதுலுவாவே சோபித தேரர் ஜனாதிபதியே இதை சொய்வாராயின் பொது வேட்பாளருக்கான தேவை இருக்காது எனவும் சுட்டிக் காட்டினார்.
மாதுலுவாவே சோபித தேரர் மற்றும் விவசாயிகள் சங்கத்தினர் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று நேற்று கோட்டை நாகவிகாரையில் இடம்பெற்றது. இதன் பின்னர் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையினை நீக்குவது பற்றி மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தொடர்பில் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்;
அனைத்து தரப்பினரும் இன்று நிறைவேற்று ஜனாதிபதி முறைமையினை நீக்குவது தொடர்பில் போராடிக் கொண்டிருக்கின்றனர். இம்முறைமையினால் வெறுமனே அரசியலில் மட்டும் தாக்கம் செலுத்தாது விவசாயிகள், தொழிலாளர்கள், பொதுமக்கள் என அனைவரையும் இது பாதிக்கின்றது. இவற்றினை பாதுகாக்க கட்சிகள் தனித்து போராடுவதில் எவ்வித பயனுமில்லை. அனைவரும் ஒரு கொள்கையின் கீழ் ஒன்றிணைய வேண்டும்.
தமிழர் பிரச்சினையொன்று உள்ளது. முஸ்லிம் மக்களுக்கு எதிரான முரண்பாடுகள் உருவாக்கப்படுகின்றது. இவை தொடர்பில் தனித்தனியே போராடுவது அர்த்தமற்றது. எனவே, அதிகாரப் பகிர்வு நோக்கி பொது நோக்கத்திற்காக போராடி அதில் மாற்றம் ஒன்றினை ஏற்படுத்துவோமாயின் தமிழர் பிரச்சினைகளுக்கு தானாகவே ஒரு தீர்வு எட்டப்பட்டு விடும்.
அதேபோல், தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண சர்வதேச அழுத்தமொன்றோ, தலையீடோ தேவையில்லை. இலங்கைக்குள்ளேயே தீர்வு நோக்கி பயணிக்க முடியும். இதை எமது அரசியல் தலைவர்களே செய்து முடிக்க வேண்டும். இனப்பிரச்சினைக்கான தீர்வு இலகுவில் எட்டக் கூடிய ஒன்றே. புரிந்துணர்வும் விட்டுக் கொடுப்பும் இருக்கும் வரையில் தீர்வு கிடைப்பது நிச்சயமே.
வாயை மூடி அமைதியாக இருந்து உரிமைகளை வென்றெடுக்க முடியாது. போராடினால்தான் உரிமையினை பெறலாம் என்ற நிலைக்கு காலம் வந்து விட்டது. தவறுகளை ஒரு சில அரசியல் தலைவர்கள் செய்கின்றனர். ஆனால் தண்டனை பொதுமக்களுக்கே கிடைக்கின்றது. இதை மாற்றியமைக்க வேண்டும்.
எனவே, நிறைவேற்று ஜனாதிபதி முறைமையினை அன்று எதிர்த்த அனைவரும் இன்று அரசாங்கத்திற்குள்ளேயே இருக்கின்றனர். அவர்கள் நினைக்க வேண்டும் மாற்றியமைப்பது தொடர்பில் அழுத்தம் கொடுக்க வேண்டும். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதை செய்தால் பொது வேட்பாளர் தொடர்பில் பேச வேண்டிய தேவை ஏற்படாது. இப்போதும் ஜனாதிபதி மீது எமக்கு நம்பிக்கை உள்ளது. எனவே, இதற்கான முடிவினை அவரே மேற்கொள்வது தான் நியாயமானது எனவும் அவர் தெரிவித்தார்.
வி

0 comments :
Post a Comment