ஐ.நா. விசாரணை ஆணைக்குழுவில் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் சாட்சியமளிப்பது தேசத்துரோக செயலாகும் என விசனம் தெரிவிக்கும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொது செயலாளர் டாக்டர் வசந்த பண்டார, பரணகம ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்க சொல்ஹெய்ம் முயற்சிப்பது அவ்வாணைக்குழுவிற்கு சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுக்கொடுக்கும் சதித்திட்டமாகும் என்றும் குற்றம் சாட்டினார்.
இது தொடர்பாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொது செயலாளர் டாக்டர் வசந்த பண்டார மேலும் தெரிவிக்கையில்,
இலங்கைக்கு எதிராக விசாரணைகளை நடத்துவதற்காக ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நாயகம் நவநீதம் பிள்ளை நியமித்த சர்வதேச விசாரணைக் குழுவை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை. அத்தோடு அக்குழுவை நிராகரித்ததோடு இலங்கை பாராளுமன்றத்திலும் அதற்கெதிராக ஏகமனதாக பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.
இவ்வாறானதொரு சூழ்நிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து வடமாகாண சபையின் முதலமைச்சராக பதவியேற்றுள்ள விக்கினேஸ்ரன் எவ்வாறு சர்வதேச விசாரணை குழுவின் முன்னிலையில் சாட்சியமளிக்க முடியும். அவ்வாறு சாட்சியமளிப்பது என்பது தேசத்துரோக செயலாகும்.
இதற்கெதிராக எவ்வாறான சட்ட நடவடிக்கைகளை எடுக்க முடியும் என்பது தொடர்பில் தெளிவில்லை. ஆனால் சர்வதேச விசாரணை குழுவில் முதலமைச்சர் சாட்சியமளிப்பதற்கு எதிராக அரசாங்கம் கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
யுத்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரிப்பதற்கு ஜனாதிபதி மெக்ஸ்வல் பரணகம ஆணைக்குழுவை உள்ளூரில் நியமித்தார். இக்குழுவிற்கு ஆலோசனை வழங்குவதற்காக அண்மையில் ஜனாதிபதி மூவர் அடங்கிய வெள்நாட்டு நிபுணர்களை நியமித்தார். இதன் பின்னர் இந்த ஆணைக்குழுவிற்கு சாட்சியங்களை வழங்க தயான் ஜயதிலக்க, விக்டர் ஐவன், விக்கினேஸ்வரன் மட்டுமல்ல இலங்கையை பிரிக்கும் நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்த எரிக்சொல்ஹெய்மும் முண்டியடிக்கின்றனர்.
பரணகம ஆணைக்குழு உள்ளூர் விசாரணைக்குழுவில் இயங்கும் போது ஆர்வம் காட்டாதவர்கள் இன்று வெளிநாட்டு நிபுணர்களை நியமித்ததும் ஆர்வம் காட்டுகிறார்கள். ஏன் விசேடமாக சொல்ஹெய்ம் சாட்சி வழங்குவதன் மூலம் பரணகம ஆணைக் குழுவிற்கு சர்வதேச அங்கீகாரம் கிடைக்கும். அதற்கே இந்த முயற்சிகள் இடம் பெறுகின்றன. எனவே இக்குழுவிற்கு வெளிநாட்டு நிபுணர்களை நியமித்தமை அரசாங்கம் செய்த மாபெரும் பிழையாகும் என்றார்.
0 comments :
Post a Comment