நீதியமைச்சர் ஹக்கீம் விடுத்துள்ள ஈதுல் பித்ர் வாழ்த்துச் செய்தி

முஸ்லிம் நாடுகளிலும், இலங்கையிலும் முஸ்லிம்கள் சோதனைகளுக்கும், வேதனைகளுக்கும் உள்ளாகி வரும் இக்கட்டான இக் காலகட்டத்தில் அவற்றிலிருந்து விடுபடுவதற்கு புனித ரமழான் நோன்பை நோற்ற பின்னர் கொண்டாடும் இந்த 'ஈதுல் பித்ர்' ஈகைத் திருநாளின் போது எல்லாம் வல்ல அல்லாஹ்வை பிரார்த்திப்போமாக. 

இவ்வாறு நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள பெருநாள் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். அவர் தமது 'ஈதுல் பித்ர்' வாழ்த்துச் செய்தியில் 

மேலும் தெரிவித்திருப்பதாவது, 

புனித ரமழான் நோன்பை நோற்ற பின்னர் இன்னொரு நோன்புப் பெருநாளை வழமை போன்று சந்திக்கின்றோம். சர்வதேச ரீதியாக முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அட்டூழியங்களுக்கும், அநியாயங்களுக்கும் இலங்கை முஸ்லிம்கள் மட்டும் விதிவிலக்கல்லர். 

இஸ்லாமிய வரலாறு நெடுகிலும் பல்வேறு காலகட்டங்களில் முஸ்லிம்கள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளதையும், அவற்றை தமது ஈமானிய பலத்தினாலும், அல்லாஹ்வின் அருளாலும் முஸ்லிம்கள் முறியடித்து வந்துள்ளதையும் காண்கிறோம். 

இலங்கையைப் பொறுத்தவரை இஸ்லாத்தின் மீதுள்ள பீதியின் விளைவாக தீவிரவாத சக்திகள் முஸ்லிம்கள் மீது அபாண்டங்களைச் சுமத்தி, அங்குமிங்குமாக தாக்குதல்களை தொடுத்து வருகின்றன. அவற்றின் சூத்திரதாரிகள் சுதந்திரமாகவும், பகிரங்கமாகவும் முஸ்லிம்களுக்கு எதிரான தமது செயற்பாடுகளை முன்னெடுத்து வருவது மிகவும் கவலைக்கும், கண்டனத்திற்கும் உரியது. நிராயுதபாணிகளான முஸ்லிம்கள் மீது அநியாயமாக தீவிரவாத முத்திரை குத்தப்படுவதும் விசனத்திற்குரியது. 

சில அரபு நாடுகளைப் பொறுத்தவரையில் ஏகாதிபத்தியவாதிகளின் சூழ்ச்சிகளின் விளைவாக கிளர்ச்சிகள் தூண்டிவிடப்பட்டு, பாரிய உயிர், உடைமை அழிவுகள் ஏற்பட்டு வருகின்றன. 

அங்கும் வேதனைகளுக்கும், சோதனைகளுக்கும் மத்தியில் அச்சத்துடன் முஸ்லிம்கள் வாழும் நிலை ஏற்பட்டிருக்கிறது. எல்லாவற்றையும் விட பலஸ்தீனத்தில் குறிப்பாக காஸாவில் இஸ்ரேலில் காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல்கள் காரணமாக குழந்தைகளும், சிறுவர்களும், பெண்களும், முதியவர்களுமாக அப்பாவி  முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டும், பாடுகாயங்களுக்குள்ளாகியும் மிகவும் துக்ககரமான நிலையில் இந்தப் புனித ரமழான் மாதத்தில் அல்லலுறுவதை காணும் போது இவ்வாறான சம்பவங்கள் இந்த நவீன உலகில் சர்வ சாதாரணமாக நடைபெறுவதை நீதி நியாயத்தை மதிக்கும் எவராலும் அறவே ஏற்றுக்கொள்ள முடியாது.

புனித 'ஈதுல் பித்ர்' பெருநாளை கொண்டாடி மகிழும் இவ்வேளையில் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் இவ்வாறு சொல்லொணாத் துயரங்களுக்கு உள்ளாகியுள்ள முஸ்லிம்களின் வாழ்வில் விடிவும், விமோசனமும் ஏற்பட வேண்டுமென எல்லாம் வல்ல அல்லாஹ்வை பிரார்த்திப்போமாக! ஈத் முபாரக்! 

இவ்வாறு அமைச்சர் ஹக்கீம் விடுத்துள்ள பெருநாள் செய்தியில் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -