திருப்பதி: தெலங்கானா மாநிலத்தில் ஆளில்லாத லெவல் கிராசிங்கை கடக்க முயன்ற பள்ளி பஸ் மீது ரயில் மோதிய கோர விபத்தில் 19 குழந்தைகள் உட்பட 21 பேர் உடல் சிதறி பரிதாபமாக இறந்தனர். ஐதராபாத் அருகே பட்டப்பகலில் இந்த கொடூரம் நடந்தது. தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தில் இருந்து 30 கிமீ தூரத்தில் உள்ள மேதக் மாவட்டத்தில் தூப்ரான் என்ற இடத்தில் ‘ககத்தியா’ என்ற தனியார் பள்ளி உள்ளது. இங்கு எல்கேஜி முதல் 10ம் வகுப்பு வரை உள்ளது. இங்கு சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் படிக்கின்றனர். அவர்களை அழைத்து வருவதற்காக பள்ளி சார்பில் பஸ்கள் இயக்கப்படுகின்றன.
நேற்று காலை 8 மணியளவில் இஸ்லாப்பூர், வெங்கடாயபல்லி, கிஸ்தாபூர், குண்டேடிபல்லி கிராமங்களில் இருந்து 36 மாணவர்களை ஏற்றிக்கொண்டு பள்ளி பஸ் புறப்பட்டது. பஸ்சை டிரைவர் பிக்சாபதி கவுடு ஓட்டினார். கிளீனராக தனுஷ் கவுடு இருந்தார். மாசாயிபேட்டா கிரா மம் அருகே உள்ள ஆளில்லா ரயில்வே கிராசிங்கை பஸ் கடக்க முயன் றது. அப்போது, நாம்பேடில் இருந்து செகந்திராபாத் இடையே செல்லும் ரயில் மிக அருகே வந்து கொண்டிருந்தது. இதை கவனிக்காமல் பஸ்சை டிரைவர் ஓட்டினார். தண்டவாளத்தின் மீது பஸ் சென்ற போது, மின்னல் வேகத்தில் வந்த ரயில் பயங்கரமாக மோதி, ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு இழுத்துச் சென்றது. பஸ்சில் இருந்த குழந்தைகள் மரண ஓலமிட்டனர்.
ரயில் மோதிய வேகத் தில் பஸ் சின்னாபின்னமானது. 11 குழந்தைகளும், டிரைவர், கிளீனரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தனர். மேலும், பஸ்சில் இருந்த 25 குழந்தைகள் படுகாயத்துடன் துடித்தனர். பஸ் மீது ரயில் மோதியதை பார்த்த கிராம மக்கள், சில வினாடிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். பின்னர் சுதாரித்துக் கொண்டு ஓடி சென்று, உயிருக்கு போராடி கொண்டிருந்த குழந்தை களை மீட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பினர். முதல் உதவி சிகிச்சைக்கு பிறகு அனைவரும் ஐதராபாத் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால், சிகிச்சை பலன் அளிக்காமல் மேலும் 8 குழந்தைகள் இறந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 21 ஆக உயர்ந்தது. மேலும், பல குழந்தைகள் கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும் தென்மத்திய ரயில்வே துறை அதிகாரிகள், போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும் மாணவர்களின் பெற்றோர், உறவினர்கள் கண்ணீருடன் விரைந்து வந்தனர். இறந்து கிடந்த தங்கள் குழந்தைகளின் சடலங்களை பார்த்து அவர்கள் கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது. விபத்து பற்றி கேள்விப்பட்டதும் கடும் அதிர்ச்சி அடைந்த தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், மீட்பு பணிகளை துரிதப்படுத்தும்படி அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த கோர விபத்து தெலங்கானா மாநிலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
விபத்து நடந்தது எப்படி?
மாற்று டிரைவரின் விபரீத புத்தி : 19 பச்சிளம் தளிர்களை சிதைத்த குறுக்கு வழி
வழக்கமாக பள்ளி பஸ்சை ஓட்டி செல்லும் டிரைவர் நேற்று வேலைக்கு வரவில்லை. இதனால் அதே பகுதியில் வசிக்கும் டிராக்டர் டிரைவரான பிச்சாபதி கவுடு மாற்று டிரைவராக பஸ்சை ஓட்டினார். விபத்து நடந்த கிராமத்தில் ஆட்கள் உள்ள 2 லெவல் கிராசிங்குகள் உள்ளன. வழக்கமான டிரைவர், இவற்றின் வழியாகதான் எப்போதும் செல்வார். இது சற்று தூரம் என்பதால், ஆளில்லா லெவல் கிராசிங்கில் சென்றால் சீக்கிரமாக சென்று விடலாம் என்று பிச்சாபதி கருதினார். இதுதான் விதி என்பதுபோல், அந்த லெவல் கிராசிங்கில் பஸ் மீது ரயில் மோதி 21 உயிர்கள் பலியாகி விட்டன. இந்த வழியை பிச்சாபதி தவிர்த்து இருந்தால், 19 பச்சிளம் தளிர்கள் சிதைந்து இருக்காது என்று போலீசார் தெரிவித்தனர்.
சாலை மறியல், கல்வீச்சு: விபத்து நடந்த லெவல் கிராசிங்கில் இதேபோல் பலமுறை விபத்து நடந்துள்ளது. இங்கு கேட் அமைக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும், ரயில்வே நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை என்று புகார் தெரிவித்த மாணவர் அமைப்பு மற்றும் கிராம மக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே அதிகாரிகளை மாணவ அமைப்பினர் தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த ரயில்வே போலீசாரை, பொதுமக்கள் தடுத்தனர். ‘விபத்துக்கு காரணம் நீங்கள்தான், உடனடியாக திரும்பி செல்லுங்கள்’’ என கோஷம் போட்டனர். மேலும், ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், மாணவர் அமைப்பினர் ரயில்வே போலீசார் மீது கற்களை வீசினர். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் பொதுமக்கள் மீது தடியடி நடத்தினர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.
விரைந்து வந்த அதிகாரிகள் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், போலீசார் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். அவ்வழியாக வந்த வாகனங்கள் 5 கிமீ தூரம் நீண்ட வரிசையில் நின்றன. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

0 comments :
Post a Comment