கொழும்பு மாநகரின் முதற் பெண்மணி பெரோஸா முஸம்மில் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டும் என அக்கட்சியின் தவிசாளர் கபீர் ஹாசீம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த கோரிக்கை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்ரமசிங்கவிடம் விடுக்கப்பட்டுள்ளது. பெரோஸா முஸம்மிலை மேல் மாகாண சபை தேர்தலில் கொழும்பு மாவட்ட வேட்பாளராக நிறுத்துமாறு அவரின் கணவரான கொழும்பு மேயர் ஏ.ஜே.எம்.முஸம்மில் ஐக்கிய தேசிய கட்சியிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
எனினும் பலத்த எதிர்ப்பு காரணமாக இந்த கோரிக்கை ஐக்கிய தேசிய கட்சியினால் நிராகரிக்கப்பட்டது. இதனால் அதிருப்தியடைந்த கொழும்பு மேயர், ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவாக மாகாண சபை தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபடவில்லை.
இந்த நிலையில் மேயர் தம்பதியினருக்கும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையிலான சந்திப்பொன்று கொள்ளுப்பிட்டியில் அண்மையில் இடம்பெற்றது. இந்த சந்திப்பில் ஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்தர்களான ஹபீர் ஹாசீம் மற்றும் மலிக் சமரவிக்ரம ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இதன்போது பெரோஸா முஸம்மிலை ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற வேட்பாளராக கொழும்பு மாவட்டத்தில் நிறுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசீம் தெரிவித்தார்.
எனினும் ரணில் விக்ரமசிங்கவினால் இந்த கோரிக்கைக்கு பதில் வழங்கப்பட்வில்லை. எனினும் பெரோஸா தொடர்பாக தன்னிடம் ஒரு திட்டமுள்ளது என அவர் தெரிவித்ததாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன. பெரோஸா முஸம்மில் காந்தசவிய பெண்கள் அமைப்பின் தலைவி என்பதும் குறிப்பிடத்தக்கது.

0 comments :
Post a Comment