இந்த நாட்டை பாதுகாக்க ஜெனிவாவில் ஒருமாத காலம் தங்கியிருந்து பாடுபட்டவன் நான் -அமைச்சர் ஹக்கீம்





பொதுபலசேனா, இராவணா பலய, சிஹல ராவய ஆகிய இனவாத அமைப்புக்கள் நாட்டில் நல்லிணக்கத்திற்கும், ஐக்கியத்திற்கும் ஊறு விளைவித்து வருகின்றன. இந்த நாட்டில் திடீரென தோன்றிய பொதுபலசேனா, 2012 ஆம் ஆண்டிற்கு பிறகு இன ரீதியான வன்முறைகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதை நாம் ஜனாதிபதிக்கும், அரசாங்கத்துக்கும் அவ்வப்போது சுட்டிக்காட்டியதோடு, அதனால் நாட்டுக்கு ஏற்படப் போகும் பாரதூரமான விளைவுகள் பற்றியும் கூறியிருந்தோம்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் இவ்வாறு கூறினார். 

மேல் மாகாண சபைத் தேர்தலில், மாத்தறை மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மரச் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, திக்வெல்லை, வெலிகமை பிரதேசங்களில் திங்கள் கிழமை(17) மாலை நடைபெற்ற பிரசார கூட்டங்களில் உரையாற்றும் பொழுதே அமைச்சர் ஹக்கீம் இதனைக் கூறினார். 

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல். தவம், அமைச்சரின் மக்கள் தொடர்பு அதிகாரி மஹிலால் த சில்வா, எம்.வை.எம். ஹில்மி ஆகியோரும் உரையாற்றினர்.

அமைச்சர் ஹக்கீம் உரையாற்றும் பொழுது மேலும் தெரிவித்ததாவது,
நான் அங்கொன்றும் இங்கொன்றுமாக நாக்கைப் புரட்டிப் புரட்டி பேசுபவன் அல்லன். எனக்கு வாய்ப்பூட்டு போட யாராலும் முடியாது. அதற்கு சிலர் முயற்சிக்கலாம். இன்று கூட பொதுபலசேனா கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி அதன் பொதுச் செயலாளர் கலபொடஅத்தே ஞானசார தேரர் என்னைப் பற்றி மிகவும் காரசாரமாக பேசியிருக்கிறார். தேசத்துரோகி என்று என்னைத் தூற்றியிருக்கிறார். என்னைக் கட்டிப் போட வேண்டுமென்றும் கூறியிருக்கிறார். 

'தேசாபிமானம் என்பது கயவர்களின் கடைசி அடைக்கலம்' என்று ஓர் ஆங்கிலப் பழமொழி இருக்கிறது. கயவர்கள் ஏதாவது உள்நோக்கத்துடன் தேசாபிமானிகளாக தங்களை வெளிக்காட்டிக்கொள்வார்கள். அவர்களது முறைகேடுகளை மறைப்பதற்கு 'தேசாபிமானிகள்' என்ற பதாதையை தூக்கிப்பிடிப்பவர்கள் தான் இந்தக் கயவர்கள். 

அந்தக் கும்பல் கூறுகிறது என்பதற்காக நான் மன்னிப்பு கோரவேண்டிய எந்த அவசியமும் கிடையாது. என் கட்சியின் மீதும் நான் சார்ந்துள்ள சமூகத்தின் மீதும் எனக்குரிய கடமையையே நான் நிறைவேற்றியுள்ளேன். எனது தாய் நாட்டுக்கு நான் எந்தத் துரோகத்தையும் செய்யவில்லை. 

2012 ஆம் ஆண்டு ஜெனீவா மனித உரிமை மாநாட்டின் போது இந்த நாட்டை பாதுகாப்பதற்காக, அரசாங்கத்துக்கு ஆதரவாக அங்கு ஒரு மாத காலம் தங்கியிருந்து நான் பாடுபட்டேன். 

அரபு நாடுகளின் தூதுவர்களை அதற்காகச் சந்தித்தேன். அரபு நாடுகளுக்குச் சென்று அரச தலைவர்களைச் சந்தித்தேன். இந்த நாட்டில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக முன்னெடுக்கப்படும் முயற்சிகளை எடுத்துக் கூறினேன். 

யுத்தத்துக்கு பிந்திய சூழ்நிலையில் நாட்டில் சமாதானத்தை நிலைநாட்டுவதற்கு நாங்கள் எவ்வாறான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறோம் என்பதை எடுத்துக் கூறியதன் பயனாகவே அரபு நாடுகளின் ஆதரவு கிடைத்தது. 

தற்பொழுது அந்த நாடுகள் தீர்மானம் எடுக்க முடியாத நிலையில் வேலியின் மீது நிற்கின்றன. பொதுபலசேனா போன்றவற்றின் இன விரோத, சமய விரோத செயல்பாடுகள் காரணமாகவே இப்பொழுது அவ்வாறான நிலைமை தோன்றியிருக்கிறது. தாங்கள் தாம் நாட்டை காப்பாற்ற முன்வந்துள்ள தேசப் பற்றாளர்கள் என்று அவர்கள் பீற்றிக்கொண்டும், பறைசாற்றிக்கொண்டும் இருக்கிறார்கள். 

ஐக்கிய நாடுகள் சபை முன்னால் சென்று சாகும் வரை உண்ணாவிரதம் என கூறிக்கொண்டு, ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனை வீட்டிற்கு அனுப்புவதற்காக அமைச்சர் ஒருவர் மேற்கொண்ட முயற்சி அறவே இராஜதந்திரமற்ற செயலாகும். அவர் உண்ணா நோன்பிருக்கிறார் என்பதற்காக பாங் கீ மூன் போய்விடுவாரா? அமைச்சருக்கு ஆட்சித் தலைவர் பால் பருக்கியதன் பின்னர் அவரது உபவாசம் கைவிடப்பட்டது. அவ்வாறே மனித உரிமை ஆணையாளரை மணமுடிக்க விரும்பிய அமைச்சரின் செயலும் அறவே இராஜதந்திரமற்றது.

பொதுபலசேனா, இராவணா பலய, சிஹல ராவய ஆகிய இனவாத அமைப்புக்கள் நாட்டில் நல்லிணக்கத்திற்கும், ஐக்கியத்திற்கும் ஊறு விளைவித்து வருகின்றன. இந்த நாட்டில் திடீரென தோன்றிய பொதுபலசேனா 2012 ஆம் ஆண்டிற்கு பிறகு இன ரீதியான வன்முறைகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறது. இதைப் பற்றி நாம் ஜனாதிபதிக்கும், அரசாங்கத்துக்கும் அவ்வப்போது சுட்டிக்காட்டியதோடு, அதனால் நாட்டுக்கு ஏற்படப் போகும் பாரதூரமான விளைவுகள் பற்றியும் கூறியிருந்தோம். 

மஹியங்கனையில் பள்ளிவாசலுக்குள் பன்றி இறைச்சியை வீசி பின்னர் அதனை மூட வைத்து விட்டார்கள். இராஜகிரியவில் ஒபயசேகரபுரவிலும், கிராண்ட்பாஸிலும் பள்ளி வாசல்களை மூட வைத்துவிட்டார்கள். அரச தரப்பிலுள்ள முஸ்லிம் அரசியல்வாதிகள் சிலர் சென்று சமரச முயற்சிகளில் ஈடுபடுவது போன்று நடந்துகொண்டு, பள்ளிவாசல்களை மூடச் செய்கிறார்கள். பின்னர் திறக்கப்படும் என்று கூறினாலும், மூடினால் மூடியது தான். அவ்வாறு ஒரு போதும் நடக்காது. எவராவது வற்புறுத்துகிறார்கள் என்பதற்காக, விட்டுக்கொடுத்து பள்ளிவாசல்களை மூடிவிடுவதற்கு இடமளிக்காதீர்கள்.

பின்னர் தெஹிவளை பள்ளிவாசல் சம்பவங்களின் போது சமூகம் கண் விழித்துக்கொண்டது. பொலிஸாரோ, அதிகாரிகளோ வந்து மூடிவிடச் சொல்கிறார்கள் என்பதற்காக அதற்கு இணங்க வேண்டாமென பள்ளிவாசல் நிர்வாகிகளிடம் முஸ்லிம் அமைச்சர்களாகிய நாமும், முஸ்லிம் அமைப்பினரும் வேண்டுகோள் விடுத்தோம். 

நீதிமன்றத்திற்கு சென்று மூடப்பட்ட பள்ளிவாசல் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. பௌத்தசாசன சமய விவகார அமைச்சின் செயலாளரின் சுற்று நிருபத்தை காட்டி, வக்பு சபையினால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிவாசலை மூடிவிடுவதற்கு சட்டத்தில் இடமில்லை என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

நானும் முஸ்லிம் சமய விவகார அமைச்சராக மூன்று முறை இருந்திருக்கிறேன். அப்போதெல்லாம் இவ்வாறான செயல்கள் நடைபெறவில்லை என கூறியிருக்கிறேன். இப்பொழுது அந்த அமைச்சு பறிபோய் விட்டது. பௌத்த சாசன சமய விவகார அமைச்சின் கீழ் வெறும் முஸ்லிம் சமய கலாசார திணைக்களம் தான் எஞ்சியிருக்கிறது. ஒவ்வொரு சமூகத்துக்கும் அதற்கு இயல்பாகவே உள்ள சமய பண்பாட்டு ரீதியான தேவைகளை நிறைவேற்ற வேண்டிய தேவை இருந்து கொண்டிருக்கிறது. 

இப்பொழுது மூடிய வீட்டுக்குள்ளும் தொழுகையை நடத்த முடியாது என்று பலசேனாவினர் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர். அவ்வாறு நடக்குமானால்இ ஆயுதம் ஏந்திக்கொண்டு வந்து தாக்குவோம் என்று பயமுறுத்துகிறார்கள்.
ஜனாதிபதிக்கும் எனக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தை ஜே.வி.பி. தலைவர் அனுர குமார திஸாநாயக்க ஒரு நாடகம் என்கிறார். நாடகம் நடிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.

முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளை பற்றி அரசாங்கத்தில் பேசக் கூடிய துணிச்சல் எங்களிடம் இருப்பதற்கான பிரதான காரணங்களில் ஒன்றுதான் கிழக்கிலும் வடக்கிலும், நாட்டின் ஏனைய பகுதிகளிலும் எங்களது கட்சிக்குள்ள பாரிய மக்கள் ஆதரவாகும். 

அரசாங்கத்தில் உள்ள காழ்ப்புணர்ச்சி கொண்ட பிரதியமைச்சர் ஒருவர் கூறுகிறார் என்பதற்காகஇ எங்களது கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களை பறித்தெடுத்து விட முடியாது. தலைமைத்துவத்திற்கு அப்பால், எமது மக்களும் அவர்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார்கள். இன்றுள்ள சூழ்நிலையில் மக்கள் மிகவும் கொதிப்புடன் இருக்கிறார்கள்.

எங்களது வாக்கு வங்கியை மேலும் தக்க வைத்துக்கொள்வதற்காக இந்த மாகாண சபைத் தேர்தலில் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்டங்களுடன், தென் மாகாணத்தில் மாத்தறை மாவட்டத்திலும் முஸ்லிம் காங்கிரஸூக்கு மக்கள் வாக்களித்து கட்சியை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :