த.நவோஜ்-மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அரசியல்வாதிகளும் அவர்களது கட்சி சார்ந்த பிரதிநிகளும் அடிக்கடி பாடசாலைகளுக்கு விஜயம் செய்து ஆசிரியர்களுக்கு கூட்டங்களை நடாத்துவது தொடர்பாக கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளருக்கு அவசர கடிதமொன்றை தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் அனுப்பியுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது!
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பாடசாலைகளில் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய மாகாண சபை உறுப்பினருமான சி.சந்திரகாந்தன் மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி செயலாளர், பொருளாளர், உபதலைவர் போன்றோர் அடிக்கடி சென்று பாடசாலை நேரங்களில் அனைத்து ஆசிரியர்களையும் அழைத்து கூட்டம் நடாத்தும் செயற்பாடு பல காலமாக நடைபெறுகின்றது.
இந்நடவடிக்கையால் பாடசாலை கல்வியூட்டல் செயற்பாடு பாதிக்கப்படுவதுடன், அரசியல் நடவடிக்கைக்கு தொடர்ந்து பாடசாலையை பயன்படுத்துவதாக உள்ளது. உதாரணமாக செங்கலடி மத்திய கல்லூரியில் அடிக்கடி இவ் ஒன்றுகூடல் நடைபெறுகின்றது.
எனவே இச்செயற்பாட்டை தயவு செய்து தடுத்து நிறுத்தி உதவுமாறு அன்பாக வேண்டுகின்றேன். பாடசாலைகள் அரசியல் பாகுபாடு இன்றி நடாத்தப்பட வேண்டும் என்பதே எங்களது வேண்டுகோளாகும்.
அவ்வாறு ஆசிரியர்களுக்கான கூட்டங்களை மக்கள் பிரதிநிதிகள் நடாத்துவதாக இருந்தால் பாடசாலை நேரவேளை தவிர்ந்த காலங்களில் வலயக் கல்விப் பணிப்பாளரின் தலைமையில் நடத்தலாம். இதற்கு மக்கள் பிரதிநிதி அல்லாத குறித்த கட்சி உறுப்பினர்கள் கலந்து கொள்வது தடைசெய்யப்பட வேண்டும். ஆகவே இவ்விடயமாக தங்களது பதிலை அன்பாக எதிர்பார்க்கின்றேன்' என மேலும் குறிப்பிடப்பட்டுள்ளார்.
அந்த கடிதத்தின் பிரதி கல்குடா கல்வி வலய வலயக் கல்விப் பணிப்பாளர் செ.ஸ்ரீஸ்கந்தராஜாவுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

0 comments :
Post a Comment