த.நவோஜ்-
அரசாங்கத்தால் எங்களது பூர்வீக வாழிடங்கள், பூர்வீக அடையாளங்கள் எங்களது இந்து சமயத்தின் பூர்வீகத்தை நிருபிக்கக்கூடிய ஆதாரங்கள் அனைத்தும் தொல்பொருள் என்ற வகையிலே மறைக்கப்பட்டு எங்களது அடிப்படை மத உரிமை பறிக்கப்படுகின்றது என மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு பாலமீன்மடு, திராய்மடு இந்து சமய அபிவிருத்தி மன்றத்தின் 18வது ஆண்டு நிறைவு விழாவும், பரிசளிப்பு விழாவும் பாலமீன்மடு விக்னேஸ்வரா வித்தியாலய மண்டபத்தில் மன்றத் தலைவர் ந.ஜெகதீசன் தலைமையில் நடைபெற்ற போது பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நிகழ்வில் அதிதிகளாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான பிரசன்னா இந்திரகுமார், இரா.துரைரெட்ணம், மட்டக்களப்பு மாநரசபை ஆணையாளர் மா.உதயகுமார், மாவட்ட இந்து கலாசார அபிவிருத்தி உதவியாளர் திருமதி.எழில்வாணி பத்மகுமார், இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.சறோஜினி வாலசுந்தரம், பாலமீன்மடு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.சி.என்.தர்மசேன, மட்டக்களப்பு இந்து வர்த்தக சங்க உறுப்பினர்களான ச.சிவபாதசுந்தரம், த.கிரிதராஜா, பாலமீன்மடு, திராய்மடு கிராம அதிகாரிகள், ஆலய தலைவர்கள், பாடசாலை அதிபர்;கள், விளையாட்டு கழக தலைவர்கள், கிராம பொதுமக்கள், அறநெறிப் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இங்கு பாராளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவிக்கையில்!
இந்துக்களாகிய நாங்கள் உலகத்திலே நான்காவது இடத்தில் இருக்கின்றோம். எங்களுக்கு ஒரு நிலையாக தலைமைத்துவம் இல்லாத காரணத்தினால் பல இன்னல்களை எதிர்கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். விவேகானந்தர் கூறினார் எங்கோவாவது ஒரு இந்து துன்பப்படும் போது அவனது துன்பத்தை பார்த்து இந்துவாகிய எங்களுக்கு மின்னலை போன்று உணர்வுகள் வரவேண்டும்.
ஆனால் எமது இலங்கை மண்ணில் கடந்த காலங்களில் நடைபெற்ற கொடூர யுத்தத்தால் கொல்லப்பட்டவர்கள், கடத்தப்பட்டவர்கள், துன்பியலுக்கு உட்படுத்தப்பட்டவர்கள். பெரும்பாலானோர் இந்துக்கள். ஆனால் இவ்விடயத்திற்கு எதிராக உலகில் இயங்கும் எந்த இந்து அமைப்புக்களும் குரல் கொடுக்கவில்லை.
காணரம் நாம் இத்துன்பியலை தமிழர் என்ற விதத்திலேயே கொண்டு சென்றோம். இது தவறு என்றல்ல. ஏனெனில் இவ் யுத்தத்தில் இந்து, கிறிஸ்தவம் ஆகிய மதங்களை சேர்ந்த தமிழ் மக்களே உயிர் இழப்பை எதிர்கொண்டது.
ஆனால் இந்தியாவை பொறுத்தவரை இந்து மக்கள் என்பதே மேலானது உண்மையில் 82 வீதம் இந்துக்களை கொண்ட இந்திய நாடு எமது பிரச்சனையை என்றோ தீர்த்து வைத்திருக்க முடியும். இதற்கு முக்கிய காரணம் நாம் தமிழர் என்ற விதத்தில் இந்தியாவை அனுகியதாகும்.
யுத்தம் முடிவடைந்ததும் எமது நாட்டில் கொல்லப்பட்டவர்கள் பெரும்பாலானவர்கள் இந்துக்கள் என்ற வகையில் இந்தியாவின் எல்லா மாநிலங்களின் கவனத்துக்கும் கொண்டு வந்திருப்போமானால் எல்லா மாநிலங்களும் இவ்விடயத்தில் இந்தியாவின் மத்தியரசை வலியுறுத்தி இருக்கும். ஆனால் தமிழ் என்ற வகையில் இந்தியாவில் நுழைந்ததால் இன்று தமிழ் நாடு மாத்திரமே எமது மக்களின் துன்பங்களுக்கு நீதி வேண்டும் என போராடுகின்றது.
இந்தியா தவிர்ந்த ஏனைய நாடுகளில் தமிழர் என்ற ரீதியில் எமது துன்பியலை கொண்டு சென்றது மிகவும் முக்கியமானது. இதனாலேயே வெளிநாடுகள் எமக்காக குரல் கொடுக்கின்றது. இவற்றோடு ஒப்பிடும் போது அருகில் உள்ள இந்தியாவின் ஆதரவு குறைவாகவே உள்ளது.
தமிழர் என்றால் திராவிடர் என்பதே இந்தியாவில் ஏனைய மாநிலங்களில் வாழ்வொரின் கருதுகோளாகும். ஏனைய மாநிலங்கள் பெரும்பாலும் ஆரியர்களை கொண்டதாக உள்ளது. இவர்கள் கௌதம புத்தரையும் ஆரியராக கருதும் நிலை உள்ளது. இதனாலேயே இந்தியாவின் தமிழ்நாடு தவிர்ந்த ஏனைய மாநிலங்களின் உதவியை நாம் பெறமுடியும்.
இலங்கை ஒரு பூர்வீக இந்து நாடு. ஆனால் இம்மண்ணிலே நாம் எமது பாரம்பரிய வரலாறுகள், பூர்வீகங்கள் என்பவற்றை இழக்கின்ற சமூகமாக மாறியிருக்கின்றோம். இன்று இந்த மட்டக்களப்பு மாவட்டத்திலும் கூட இந்துக்களாகிய தமிழ் மக்களின் அடிப்படை வாழிடங்களை சுவீகரிக்கின்ற பல முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
வெருகல் கங்கை இரண்டு பகுதிகளாக பிரிந்து சென்று கடலோடு சேருகின்றது. அந்த தீவு பகுதியை இப்போது எங்களது இனம் சாராது அரசியல்வாதி ஒருவர் எங்கள் மக்களிடம் இருந்து கொள்வனவு செய்யப்பட்டிருக்கின்றது. எம்மக்களிடம் பணம் கொடுத்து வாங்கிய அந்த அரசியல்வாதி தற்போது அரசாங்கத்தினால் ஆயிரம் பாலம் அமைக்கின்ற திட்டம் கொண்டுவரப்படுவதால் இதில் ஒரு பாலத்தை தான் தமது கொள்வனவு செய்த அக்காணிக்கு இடுவதற்கு ஏற்பாடு செய்து வருகின்றார்.
இவ்வாறே கிரானிலும் பல இடங்களில் இவ் அரசியல்வாதி தாம் கொள்வனவு செய்த காணிப் பகுதிகளுக்கு அரசாங்கத்தால் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விநியோகிக்கப்படும் பாலங்களை போட நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் கிட்டியுள்ளது. இதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இதற்கு எதிராக எங்களது எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்பதை தெரிவிக்கின்றேன்.
எம் இந்து மக்களே! முன்பு ஒரு பக்கத்தால் அடி வாங்கினோம் உரல் போன்று. தற்போது இரண்டு பக்கத்தால் அடி வாங்குகின்றோம் தவில் போன்று. நாங்கள் இவ்வேளை சிந்திக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம். எமது காணிப் பூமிகளை நாங்கள் பாதுகாக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம்.
காணிப் பூமிகள் பாதுகாக்கப்பட்டால் தான் எங்களது மத அடையாளங்களை தக்க வைக்க முடியும். நீங்கள் நினைக்கக் கூடாது இந்து சமயம் என்றால் தமிழ் பற்றிக் கதைக்கக் கூடாது என்று இந்து சமயத்தின் ஒரு பிரிவான சைவசமயம் என்றால் தமிழ். தமிழ் என்றால் சைவ சமயம் இதைத்தான் எங்களது சுந்தரமூர்த்தி நாயனாரை இறைவன் தடுத்தாட் கொண்டபோது 'சொற்றமிழ் பாடுக' என கேட்டான். இங்கு எமது சமயம் தமிழூடன் இணைந்துள்ளதை தெளிவாக காட்டியுள்ளார்.
இன்று இந்துக்களை புறக்கணிக்கும் திட்டத்தில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது. குறிப்பாக இலங்கையிலே ஒரு லட்சத்து அறுபத்தையாயிரம் மாணவர்கள் அறக்கல்வி கற்கின்றார்கள். இலங்கையிலே ஐயாயிரத்திற்கு மேற்பட்ட ஆசிரியர்கள் கடந்த இருபது வருடங்களாக எதுவித ஊதியமும் இன்றி அறக்கல்வி போதிக்கின்றார்கள்.
இலங்கையிலே ஆயிரத்து ஐநூறுக்கு மேற்பட்ட அறநெறிப் பாடசாலைகள் இயங்குகின்றது. ஆனால் மட்டக்களப்பு மாவட்டத்தில் தான் இவை அதிகமாக இயங்குகின்றது. இவ் அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கு நியமனங்களை வழங்குங்கள் என்று மதவிவகார அமைச்சின் ஒன்றுகூடலின் போது பல தடவை கேட்டுக் கொண்டோம். ஆனால் இந்த விடயத்தில் அவர் கவனம் செலுத்துவது மிகக் குறைவாக இருக்கின்றது.
கல்வி அமைச்சிடம் கேட்டோம் அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களை உங்களது சமயக் கல்வி ஆசிரியர்களாக உள்வாங்கி அவர்களுக்கு தொழில்வாய்ப்பை ஏற்படுத்துங்கள் என்று கூறினோம். இதனை கல்வி அமைச்சின் ஆலோசனைக் கூட்டத்தில் நான் கூறினேன் அதற்கு கல்வி அமைச்சு சம்மதித்தது. மதவிவகார அமைச்சும் அதற்கு எற்பாடு செய்வதாக கூறியது. நானும் நான்கு வருடமாக கூறுகின்றேன் அது இன்னும் நடைபெறவில்லை. இதற்கு காரணம் அறநெறிப் ஆசிரியர்கள் தமிழர்கள் என்பதாகும்.
தற்போது உதவி ஆசிரியர் நியமனம் வழங்கல் என்ற வகையிலே ஒரு படிவம் வெளியாகியுள்ளது. அந்தப் படிவத்தில் மதம் சார்ந்த குருமார்களுக்கு உதவி ஆசிரியர் நியமனம் வழங்குதல். இதில் இந்து மதகுரு, கிறிஸ்தவமத அருட்சகோதரிகள், இஸ்லாமிய மத மௌலவிமார்கள், பௌத்தமத பிக்குகள் போன்றோர் கோரப்பட்டிருக்கின்றது.
ஆனால் எங்களது மதகுருமார்கள் பெரும்;பாலானவர்கள் பூரண கல்வித் தகைமை கொண்டவர்கள் அல்ல. அவர்கள் ஆன்மீகத்தை மாத்திரம் பெரும்பாலும் கற்றுள்ளனர். ஆகவே அவர்களுக்கு ஆசிரியர் நியமனம் கோருவதில் பிரச்சனை உண்டு. எனவே அதை அறநெறி ஆசிரியர்களுக்கு வழங்கினால் தான் அது பூரணமாக அமையும். இதுசார்பாக அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டு வருவதற்கு நான் நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கின்றேன்.
இவ்வேளை இந்து சமயத்துக்கு உதவி கேட்டுப் போனால் உங்கள் ஆலயத்துக்கு பணம் ஒதுக்;குகின்றோம் என்று மதவிவகார அமைச்சு கூறுகின்றது. ஒரு வருடத்திலே 80 இலட்சம் அல்லது 60 லட்சம் ரூபாய் என மாவட்டத்திற்கு ஒதுக்கி விட்டு ஒரு ஆலயத்துக்கு ஒரு லட்சம் ரூபாய் வீதம் ஒதுக்குகின்றார்கள். அது போதுமா? சிந்தித்துப் பாருங்கள்.
மட்டக்களப்பு மாவட்டத்திலே பதிவு செய்யப்பட்ட ஆலயங்கள் 900 மேல் உள்ளது. இதேபோன்று வேறு மாவட்டங்களிலும் இருக்கின்றது. இவர்கள் கொடுக்கின்ற ஒரு இலட்சம் ரூபாய் பிரதேச செயலகத்திற்கும், கிராம அபிவிருத்திச் சங்கத்திற்கும் கழித்து மீதியாக 85 ஆயிரம் ரூபாய் அளவில் பெரும்பாலும் வழங்கப்படுகின்றது. இப்போதைய பொருளாதார நிலையில் சிறு வேலையை மாத்திரமே இதைக் கொண்டு செய்யக் கூடியதாக இருக்கின்றது.
கடந்த காலத்திலே இந்த நாட்டில் நடாத்தப்பட்ட இன முரண்பாடு இன்று மறைக்கப்பட்டு மதரீதியாக அந்தச் செயற்றிட்டம் கொண்டுவரப்படுவதை நீங்கள் அறிவீர்கள். தற்போது இந்துக் கோயில்கள் உடைக்கப்படுகின்றது. இந்துக் கோயில்கள் இருக்கும் இடத்தில் பௌத்த விகாரைகள் கட்டப்படுகின்றது. இந்து ஆலயங்கள் கொள்ளையிடப்படுகின்றன. இந்து விக்கிரகங்கள் உடைக்கப்படுகின்றன. இவ்விடயமாக அரசாங்கம் இன்று மௌனம் சாதிக்கின்றது.
எங்களது பூர்வீக வாழிடங்கள், பூர்வீக அடையாளங்கள் எங்களது இந்து சமயத்தின் பூர்வீகத்தை நிருபிக்கக்கூடிய ஆதாரங்கள் அனைத்தும் தொல்பொருள் என்ற வகையிலே அரசாங்கத்தால் மறைக்கப்பட்டு எங்களது அடிப்படை மத உரிமை பறிக்கப்படுகின்றது. இந்த வகையிலே நாங்கள் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றோம். இவ்விடயத்தில் நாம் சிந்திக்க வேண்டியவர்களாக உள்ளோம்.
இந்துக்களாகிய நாம் அனைவரும் ஒன்றுபட்டால் தான் நமது இந்து சமயத்தை காப்பாற்ற முடியும். எங்களது இந்து சமயம் காப்பாற்றபட வேண்டுமாயின் நாங்கள் இன உணர்வோடும், மத உணர்வோடும் செயற்பட வேண்டும். இந்த உணர்வோடு இருந்து எங்கள் மதத்திற்காக நாங்கள் குரல் கொடுக்க வேண்டும். எங்களது மத பாரம்பரியத்தை அழிக்க முற்படுபவர்களுக்கு எதிராக நாங்கள் சாத்வீக ரீதியில் போராட வேண்டும். அல்லாவிடின் நாங்கள் ஏமாற்றப்பட்ட சமூகமாக இருப்போம்.
சுவாமி விவேகானந்தர் சார்பான கதை ஒன்றில் ஒரு காடு வழியாக ஒருவர் வரும் போது ஒரு மலையின் மரத்தில் இருந்த குரங்குகள் அவரை துரத்திச் செல்ல அவர் ஓடுகின்றார். குரங்குகள் தொடர்ந்து அவரை துரத்திக் கொண்டு செல்கின்றது. எதிரே ஒரு குரல் கேட்டது தம்பி ஓடாதே என்று. உடனே அவரும் நின்று விட்டார். அங்கு குரல் கொடுத்த அப்பெரியவர் கூறினார் நீ அந்த குரங்குகளை எதிர்த்து ஓடு அப்போது அந்த குரங்கு என்ன செய்கின்றது என்று பார் என்று. உடனே அவர் அந்த குரங்குகளை எதிர்த்து ஓடினார் அந்த குரங்குகள் வந்த வழியே ஓடி தான் இருந்த மரத்திலேயே ஏறி விட்டது. ஆகவே நாங்கள் சிலரின் வெருட்டல்களுக்கு பயந்து மத உரிமையை கோரும் விடயத்தில் இருந்து ஓடினோமா இருந்தால் எங்களை விரட்டி வருவார்கள். எதிர்த்து எங்களது மத உரிமைக்காக நாங்கள் போராட வேண்டும்.
இந்தியாவிலே உள்ள ஆர்.எஸ்.எஸ். அமைப்பு, விஷ்வ ஹிந்து பரிசத் போன்ற இந்து அமைப்புக்கள் இருக்கின்றன. இந்தியாவிலே யாரைப் போய் கேட்டாலும் சரி, ஏன் படித்து பெரிய பதவியில் உள்ளவர்களை கூட விசாரித்தால் அனைவரும் தாங்கள் இந்த ஆர்.எஸ்.எஸ். உட்பட்ட இந்து அமைப்பிலே அங்கத்தவராக இருக்கின்றோம் அல்லது இருந்தோம் அதனால் தான் நாங்கள் சமூகத்திற்கு சேவை செய்து கொண்டிருக்கின்றோம் என்கின்றார்கள்.
எனவே எமது இந்து இளைஞர்கள், பெரியவர்கள் அனைவரும் ஆன்மீகத்திலே தங்களை அர்ப்பணிக்க வேண்டும். ஆன்மீகத்திலே இருந்து கொண்டு எமது சமூகத்துக்கு சேவையாற்ற வேண்டும். ஆனால் தற்போது ஆலய தர்மஹர்த்தாக்கள் ஆலயத்தை இடித்து புனர்நிர்மானம் செய்து கும்பாபிஷேகம் செய்வதிலே கூடிய கவனம் செலுத்துகின்றனர்.
இது மாத்திரம் ஆலயத்தின் கடமையல்ல. பூசை செய்வித்தல், கும்பாபிடேகம் செய்தல் என்பவற்றுடன் ஆலயம் மூலம் எம் வறிய மக்களுக்கு சேவை செய்வதுமே ஆலயத்தின் கடமையாகும். அதை ஆலயங்கள் மேற்கொள்ள வேண்டும். அத்தோடு இந்து அமைப்புக்களும் பொதுச் சேவைகளில் முன்நிற்க வேண்டும்.
அந்தவகையில் பாலமீன்மடு, திராய்மடு இந்து சமய அபிவிருத்தி மன்றம் சமய, சமூக ஆன்மீகப் பணிகளை முன்னெடுத்து ஆன்மீகத்தை அபிவிருத்தி செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றார்கள். அவர்களை இந்த இடத்தில் பாராட்டக் கடமைப்பட்டுள்ளேன்.
எனவே இந்து சமயத்தை பாதுகாக்க அனைவரும் ஒன்றுபடுவோம். அரசியல் வேறுபாடுகளை எல்லாம் அந்த அந்த இடத்தில் வைத்துக் கொண்டு இந்து என்ற வகையில் அனைவரும் ஒன்றுபட்டு இந்து சமயத்தையும், இந்து சமூகத்தையும் காப்பாற்றுவோம் அதற்கு அனைவருடனும் நானும் சேர்ந்து கடமையாற்ற தயாராக உள்ளேன் என்றார்.

0 comments :
Post a Comment