ஒரு நாட்டின் தேசிய பாதுகாப்பு என்பது அந்த நாட்டில் வாழுகின்ற மக்களை வென்றெடுக்கக் கூடிய வகையிலேயே அமையப்பெற வேண்டும். இது குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தெளிவுப்படுத்தியுள்ளேன் என்று கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
இன்று அமெரிக்காவும் ஜெனீவாவும் கூட 13ஆவது திருத்தச் சட்டம் தான் சரியென ஏற்றுக்கொள்ளும் நிலை தோன்றியுள்ளது. இந்த நிலையில், எமது பிரச்சினைக்கு நாமே தீர்வு காணவேண்டுமென்பதே யதார்த்தமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அமைச்சரின் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (25) இடம்பெற்ற மன்னார் மாவட்ட மக்கள் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித் அவர், 'பொய்யானதும், நிறைவேற்ற முடியாததுமான வாக்குகளை மக்களிடம் வழங்கி தேர்தலில் வெற்றிபெற்றவர்கள், தேர்தல் காலங்களின் போது வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.
அதுமட்டுமல்லாது மக்களுக்கான சேவைகளையும் முன்னெடுக்க வேண்டும். ஆனால், தேர்தலில் வெற்றிபெற்றவர்களால் மக்களுக்கான சேவைகள் எவையும் நிறைவேற்றப்படாமலேயே உள்ளன.
இதனால், வாக்களித்த மக்கள் தாம் தற்போது ஏமாற்றப்பட்டு வருவதாக விசனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் எதிர்காலங்களில் மக்களுக்கான சேவைகளை முன்னெடுப்போரை எமது மக்கள் இனம்கண்டு அவர்களுக்கு தமது ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்க வேண்டும். அப்போதுதான் மக்களது வாழ்வாதாரம் மட்டுமல்லாது அவர்கள் சார்ந்து வாழுகின்ற சமூகங்களும் முன்னேற்றம் காணமுடியும்' என்று அவர் கூறினார்.
'அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை ஆரம்பமாகக்கொள்ள வேண்டுமென நாம் நீண்ட காலமாக வலியுறுத்தி வந்த போதிலும் அதனை எதிர்த்தவர்கள் இன்று ஆதரிக்கும் நிலையே காணப்படுகின்றது.
இன்று அமெரிக்காவும் ஜெனீவாவும் கூட 13ஆவது திருத்தச் சட்டம் தான் சரியென ஏற்றுக்கொள்ளும் நிலை தோன்றியுள்ளது. இந்த நிலையில், எமது பிரச்சினைக்கு நாமே தீர்வு காண வேண்டுமென்பதே யதார்த்தமாகும்' என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

0 comments :
Post a Comment