மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடா கல்வி வலயத்தினால் முன்னெடுக்கப்படும் சட்டத்தின் ஆட்சிக்கு முரணாக செயற்பாடுகளுக்கு கிழக்கு மாகாண கல்விச் செயலாளர் வகை செல்லல் வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது
கல்குடா கல்வி வலயத்தில் வினைத்திறனற்ற செயற்பாடுகளை கண்டித்து இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு கிளை செயலாளர் பொ.உதயரூபன் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது!
'கல்குடா கல்வி வலயத்தால் மேற்கொள்ளப்படும் வெளிப்படைத்தன்மையற்றதும், நம்பகத்தன்மையற்றதுமான அதிபர் நியமனங்கள், ஆசிரியர்களின் இடமாற்றங்கள் முறையற்ற விசாரணைகள், அரசியல் தலையீடு காரணமாக சட்டத்தின் ஆட்சிக்கு முரணாக இடம்பெறுவதாகவும் இவ்விடயம் தொடர்பாக மாகாண கல்வி செயலாளர் நியாயமான காரணங்களை முன்வைத்து வகை சொல்லல் வேண்டும்.
இலங்கை சனநாயக சோசலிஷக் குடியரசின் அரசியலமைப்பு, மற்றும் சுற்று நிருபங்கள் வலயக் கல்விப் பணிப்பாளர், பதில் பிரதிக் கல்விப் பணிப்பாளர் (நிருவாகம்) ஆகியோரால் உதாசினப்படுத்தப்படுவதோடு இது தொடர்பாக 2013.11.06 மாகாண ஆளுநரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டு 2013.11.13 அன்று கிழக்கு மாகாண கல்விச் செயலாளருக்கு பணிப்புரை வழங்கப்பட்டிருந்தும் இவற்றைக் கருத்திற்கொள்ளாது கல்குடா கல்வி வலயம் செயற்படுகிறது.
கல்குடா கல்வி வலயத்தில் சேவைப்பிரமாணக் குறிப்புகளுக்கும், ஆட்சேர்ப்புத் திட்டத்திற்கும் முரணாக நியமிப்பு செய்யப்பட்டுள்ள பதில் பிரதிக் கல்விப் பணிப்பாளர் (நிருவாகம்) அவர்களின் வினைத்திறனற்ற செயற்பாடுகளினால் வலயத்தில் அதிபர்கள் ஆசிரியர்கள் கடும் உளச்சலுக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதோடு, அவரை பின்வழியால் கதிரையில் அமர்த்திய தூரநோக்கற்ற அரசியல்வாதிகளின் பழிவாங்கல் நிகழ்ச்சி நிரல்கள் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன.
வலயத்தின் வினைத்திறனற்ற செயற்பாடுகள் காரணமாக கல்வி நிருவாக சேவையைச் சேர்ந்த அதிகாரியொருவர் ஓய்வு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். பொது ஆளணி சேர்ப்புக்குள் உள்வாங்கப்பட்டிருந்த அதிகாரியொருவர் இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளதோடு மற்றுமொரு அதிகாரி தடுக்கப்பட்டுள்ளார். இதனால் அவ் அதிகாரி மத்திய கல்வி வலயத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.
மாகாணத்தில் கணித மட்டம் பெரும் வீழ்சியடைந்துள்ள நிலையிலும் வலயத்தில் கணித மட்டம் கடும் கீழ் மட்டத்திலுள்ள நிலையிலும் கணித பாடத்துக்குரிய உதவிக் கல்விப் பணிப்பாளர் பதில் பிரதிக் கல்விப் பணிப்பாளர் (நிருவாகம்) பதவிக்கு நியமிக்கப்பட்டு அரசியல் நிரல்களை முன்னெடுத்துச் செல்வது சனநாயக அரசு ஒன்றின் நல்வரசாட்சி என்பது திறமையானதும் பயன் தருவதுமான நிருவாக அமைப்பு ஒன்றின் விளைவு என்பதைக் கேள்விக்குறியாக்கியிருப்பதாகவே இலங்கை ஆசிரியர் சங்கம் கருதுகிறது.
கல்குடா கல்வி வலயத்தின் பாராபட்சங்கள் சட்டவிதிகளில் முறிவுகள் ஏற்படுவதற்கு தூண்டுவதுடன் மனித உரிமை மீறல்களுக்கும் வழிவகுத்து நிற்பதினால் கிழக்கு மாகாண கல்விச் செயலாளரை நேரடியாக விவாதம் ஒன்றை நடாத்துவதற்கு நேரம் ஒதுக்கித் தருமாறும் நியாயமான காரணங்களை முன்வைத்து வகை சொல்லுமாறும் சங்கம் வலியுறுத்துகிறது' என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 comments :
Post a Comment