பெலவத்தையிலுள்ள ஜே.வி.பி.யின் தலைமையகத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போது ஊடகவியலாளர் ஒருவர் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணையும் காலம் கனிந்து விட்டது என பொது நிகழ்வொன்றில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்த கருத்து தொடர்பில் கேட்ட போதே ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா இதனைத் தெரிவித்தார்.
இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
அமைச்சர் ஹக்கீம் கொள்கையில்லாதவர். தனது சிறப்புரிமைகளுக்காக அடிக்கடி தன்னை மாற்றிக்கொள்பவர். இப்போது அரசுக்குள் அவருக்கெதிராக சில நெருக்கடிகள் தலைதூக்கியுள்ளன. இதன் காரணமாகவே அரசின் நடவடிக்கைகளை பொது மேடைகளில் விமர்ச்சிக்கின்றார்.
அவர் உண்மையிலேயே விமர்சிப்பதென்றால் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சரென்ற ரீதியில் ஜனாதிபதியிடம் தனது விமர்சனங்களை முன்வைக்கலாமே. அதனை விடுத்து ஏன் பொது மேடைகளில் பேச வேண்டும்.
அவரால் தான் சார்ந்த முஸ்லிம் சமூகத்தினரின் உரிமைகளைக் கூட பெற்றுக் கொடுக்க முடியவில்லை. அது மட்டுமல்லாது இன்று அரசின் நடவடிக்கைகளை விமர்சிக்கும் ஹக்கீம் இந்த அரசாங்கத்திற்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மையை பெற்றுக் கொடுக்க துணை போனார்.
அது மட்டுமல்லாது சுயாதீன ஆணைக்குழுக்கள் அனைத்தும் இல்லாதொழிக்கப்படுவதற்கும் இந்த சுயாதீன குழுக்களை நியமிக்கும் அதிகாரம் தனிநபரொருவரின் அதிகாரத்திற்கு கீழ் கொண்டு வருவதற்கும் ஜனாதிபதி பதவிக்காலம் இரண்டு தடவைகளுக்கு அதிகரித்துக் கொள்ள முடியும் என்ற சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றிக் கொள்வதற்கும் துணை போனவர் ஹக்கீம் அவர் விதைத்த வினையை இன்று அவரே அனுபவிக்க வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது.
எனவே இவர் ஒரு சந்தர்ப்பவாதி அவரது பேச்சுக்களை நம்ப முடியாது. அத்தோடு அவருக்கு கொள்கையில்லை.
மதநல்லிணக்கம்
உண்மையிலேயே இன்று நாட்டுக்குள் மத நல்லிணக்கம் இல்லை. அதனை சீர்குலைப்பது அரசாங்கத்தின் உதவியுடன் இயங்கும் அமைப்புகளாகும். ஜே.வி.பி. என்றும் இனங்களிடையேயும் மதங்களிடையேயும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முன்னின்று செயற்படும் கட்சியாகும்.
ஆனால் தற்போது நாட்டுக்குள் பொருளாதார சமூக மாற்றங்கள் தலைதூக்கி வருகின்றன. இவ்வாறானதொரு சூழ்நிலையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தேசிய மத நல்லிணக்கம் தொடர்பாக அறிக்கை வெளியிடுகின்றார்.
இதன் பின்னணி என்னவென்பது தொடர்பில் உண்மைத் தன்மை எமக்கு தெரியாது. அத்தோடு எம்மை சந்திக்க வேண்டுமென்ற வேண்டுகோள் எதையும் இதுவரையில் முன்னாள் ஜனாதிபதியினால் விடுக்கப்பட வில்லையென்றும் ரில்வின் சில்வா தெரிவித்தார்.
இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் எம்பி.க்களான விஜித ஹேரத் சுனில் ஹந்துன்னெத்தி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

0 comments :
Post a Comment