ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சந்தர்ப்பவாத அரசியலை செய்து வருவதுடன், ஜனநாயக ரீதியாக மக்கள் தனக்கு வழங்கிய சகல அதிகாரங்களை மிக தந்திரோபாயமாக பறித்தெடுத்துவிட்டு இன்று என்னை வெறும் பாலைவனத்தில் பரிதவிக்க விட்டுச்சென்றுள்ளது என கல்முனை மாநகரசபையின் முன்னாள் மேயர் சிராஸ் மீராசாஹிப் தெரிவித்தார்.
உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லாவின் தேசிய காங்கிரஸில் உத்தியோகபூர்வமாக இணைந்து கொள்ளும் நிகழ்வின்போது சிராஸ் மீரா சாஹிப் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
நான் அந்த பாலைவனத்தில் பரிதவித்துக் கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் பாலைவன வழியாக வந்த குதிரைமேல் ஏறி தப்பித்துக்கொண்ட எனக்கு மீண்டும் தனது அரசியல் பயணத்தை தொடர இன்று தேசிய காங்கிரஸிம் அதன் தலைமையும் வழிவகுத்துத் தந்துள்ளதாகவும் கூறினார்.
ஒருவர் தான் பிறந்த பிரதேசத்தின் உரிமைக்காக குரல் கொடுப்பதும் தனது பிரதேசத்தைப் பற்றி சிந்திப்பதும் பிரதேசவாதமாக கருதமுடியாது. சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி சபையொன்று வேண்டுமென்ற கோரிக்கை இன்று, நேற்று உருவான விடயமல்ல. அது பல வருடங்களுக்கு முன்னராகவே வலுப்பெற்று வருகின்றது.
சாய்ந்தமருது மக்களின் மிக நீண்டகால கனவாகவும், ஒரு தாகமாகவும் இருந்து வந்தவைதான் சாந்தமருதுக்கென ஒரு தனியான பிரதேச சபை தேவை என்பதாகும். அதற்கான உள்ளுராட்சிமன்றக் கோரிக்கை கனவை நிறைவேற்றுவதற்காகவே இறைவன் என்னை இவ்வாறு செய்துள்ளதாக நான் திடமாக நம்புகிறேன். இப்பிரதேச மக்களின் அக்கனவை மிக விரைவில் நிறைவேற்றுவதற்கு தேசிய காங்கிரஸின் தலைமை அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா எமக்கு பக்கபலமாக இருப்பாரொன்றும் நம்புகிறேன்.
மு.கா. கட்சிக்குள் வந்து எனது அபார முயற்சியின் காரணமாக அதிகளவான சேவைகளை வழங்கக் கூடியதாக இருந்தது. இவ்வாறான செயற்பாடுகள் அக்கட்சியின் தலைமைக்கும் கட்சியிலுள்ள சிலருக்கும் எனது தீவிரமான அரசியல் பிரவேசம் ஒவ்வாமையாகவே இருந்து வந்தது. அதனாலேயே கட்சிக்கு நான் ஒரு புற்றுநோயென்று என்னைப் பிடிக்காத சிலர் என்னைப் பற்றி விமர்சனம் செய்தார்கள்.
மக்கள் எனக்கு 04 வருடங்களுக்கான ஆணையை வழங்கி இருந்தனர். எனது மேயர் பதவி இராஜினாமாவுக்கு முன்னர் நானும் எனது பிரதேச ஆதரவாளர்களும் பள்ளிவாசல்களின் தலைவர்களும் கால அவகாசம் கேட்டிருந்தோம். அதற்கு மு.காவின் தலைவர் ஒரு நாள் கூட வழங்கமுடியாதென்று தெரிவித்த அமைச்சர் ரவூப் ஹக்கீம், பின்னர் ஏற்பட்ட சந்திப்பொன்றில் என்னை கட்டி அணைத்து தயவுசெய்து நீங்கள் உடன் இராஜினாமாச் செய்யுங்கள். இது எனது மானப் பிரச்சினையாகவுள்ளது. உங்களுக்கு கட்சியில் அதிகாரங்களுடன் கூடிய பதவிகளை வழங்கவுள்ளேன். என்றார். அவை அனைத்தும் பெய்யான நாடகம் என்று எனக்கு விளங்கவில்லை.
கல்முனை மாநகர சபைக்கு நான் முதல்வராக தெரிவுசெய்யப்பட்டதிலிருந்து பிரதேசவாதங்களையும் அரசியல் பிரிவினைகளையும் சிலர் விதைக்கத் தொடங்கினர். இவ்வாறான நிலையில் நான் மேயராக இருந்த காலப்பகுதியில் பட்ட கஷ்டங்களுக்கும் அவமானங்களுக்கும் அளவே கிடையாது. இவ்வாறான பிரிவினைகளுக்கும் கருத்துக்களுக்கும் மு.கா. தலைமைத்துவமும் பக்கபலமாக செயற்பட்டு எனக்கும் எனது அதிதீவிர அபிவிருத்தி திட்டங்களுக்கும் குழி பறிக்கும் நடவடிக்கையை எடுத்து செயற்பட்டது இந்த விடயம் பற்றி நான் அறிந்து கொண்டும் மு.காவில் இருந்து எவ்வாறு தொடர்ந்தும் செயற்பபடுவது என்று உணர்ந்த நான் எனது அரசியல் பயணத்தை தேசிய காங்கிரஸின் பக்கம் திசை திருப்பி செயற்பட இன்றிலிருந்து ஆரம்பிக்கவுள்ளேன் என்றார்.
.jpg)
0 comments :
Post a Comment