மாந்திரீகம், பில்லி, சூனியம் மூலம் மோசடி செய்த மந்திரவாதிக்கு 7 ஆண்டு சிறை.


மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் அவசர சட்டம் ஒன்றின் மூலம், மாந்திரீகம், பில்லி, சூன்யங்களில் ஈடுபடும் மோசடி மந்திரவாதிகளுக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது.

'இது இருபத்தியோராம் நூற்றாண்டு... நாங்கள் சந்திரனுக்கே ராக்கெட் விட்டவர்கள்... அடுத்ததாக செவ்வாய் கிரகத்தையும் எட்டிப் பார்க்கப் போகிறோம்... இன்டர்நெட் பயன்பாட்டில் மூன்றாம் இடத்தில் இருக்கிறோம்...' என்று ஒருபக்கம் பெருமை பேசிக் கொண்டிருந்தாலும்... இன்னமும்கூட 'மாந்திரீகம், பில்லி, சூன்யம் உள்ளிட்ட பல்வேறு மூட பழக்க வழக்கங்கள் காரணமாக... எண்ணற்ற மக்கள் இங்கே பரிதாப நிலையில்தான் வாழ்ந்து கொண்டுள்ளனர்.

இத்தகைய மோசடி பேர்வழிகளை நம்பி, பணம், பொருள்... ஏன் வாழ்க்கையையே இழப்பவர்கள் அநேகம். பாலியல் ரீதியில் பலியாகும் பெண்களும் ஏராளம்!

அறியவியலின் பெருமை பேசும் அரசுகள், இதுவரையிலும் இத்தகைய தகிடுதத்தங்களைத் தடுக்க எந்தவொரு துரும்பையும் அசைக்காமல்தான் இருக்கின்றன. இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தில் தற்போது அவசர சட்டம் ஒன்றின் மூலமாக இத்தகைய மந்திர, தந்திர வேலைகள் மற்றும் பில்லி, சூன்யங்களில் ஈடுபடுவோருக்கு, ஏழு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது.

இப்படியொரு சட்டம் அமல்படுத்தப்படுவதற்கு... ஓர் உயிர் பலி கொடுக்கப்பட்டிருப்பதுதான் சோகம். புனே நகரைச் சேர்ந்த சமூக ஆர்வலர், நரேந்திர தபோல்கர் 'மகாராஷ்டிரா அந்தஷ்ட்டிர நிர்மூலன் சமிதி’ என்கிற அமைப்பின் மூலமாக நீண்டகாலமாகவே மூட பழக்க, வழக்கங்களை எதிர்த்து பிரசாரம் செய்து வந்தார். மோசடி பேர்வழிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரசுக்கு நெருக்கடி கொடுத்து வந்தார்.

68 வயது தபோல்கரின் பிரசாரங்கள் பலரையும் கிலியடைய வைக்கவே, அவர்களில் யாரோ சிலர், ஆகஸ்ட் 20 அன்று அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டனர்.

தபோல்கர் கொலைக்கு எதிராக, பல்வேறு தரப்பினரும் போராட்டங்களில் குதித்ததோடு... 'மாந்திரீகம் மற்றும் பில்லி, சூன்யத்துக்கு எதிராக சட்டம் இயற்ற வேண்டும்' என்றும், கோரிக்கை வைத்தனர். கொலைக் குற்றவாளிகளை இன்னமும் கைது செய்யாத அரசு... இந்த அவசரச் சட்டத்தின் மூலமாக அந்த மக்களின் ஆவேசத்துக்கு தடை போடும் வேலையைச் செய்திருக்கிறது!

ஒரு உயிர் பலிக்குப் பிறகாவது... 'மந்திர, தந்திர, பில்லி, சூன்ய வேலைகள் எல்லாம், மோசடி வேலைகள் என்பதை ஒப்புக் கொண்டிருக்கிறதே இந்த அரசு' என்று ஆறுதல் அடைய வேண்டியதுதான்!

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :