தமிழ் நாடு அப்துல்லாவின் ரமழான் நினைவுகள் வா கூன்பிறையே..

அப்துல்லாஹ் ரஹ்மத்துல்லாஹ்
முஹர்ரம் தொடங்கி மாதங்கள் ஒவ்வொன்றும் நம்மை நமது வாழ்நிலைக் காலங்களுடன் கலந்து சென்றாலும் ஷஅபானின் தேய்பிறை ரமலான் எனும் புண்ணியம் சூல் கொண்ட நிலவை பூமிக்கு கொண்டு வருகையில் நாம் புல்லரித்துப் போகிறோம். 

எனது அறியாக்காலம் தொட்டு இன்று வரை இந்த மாதத்தை நான் எதிர் கொள்வதில் நிறைய அனுபவங்களைக் கைகொண்டிருக்கிறேன்...

பிடிவாதத்துடன் நோன்பு பிடித்திருக்கும் மூன்றாம் வகுப்பு நான்காம் வகுப்பு படிக்கும் பிள்ளைகளின் மேல் எல்லா தகப்பனுக்கும் தாய்க்கும் பதற்றம் மிக்க கண்காணிப்பு நிறைத்த வாஞ்சை பொதிந்திருக்கும்.

 மாலை நேரம் நெருங்க நெருங்க அசருக்கு பின்னால் கொஞ்சம் வாடிக் கிடக்கும் அவர்களை தண்ணி குடிக்கிறியாப்பா என வினவுகையில், அந்த பிஞ்சு மழலை உம்மாவைப் பார்த்து சொல்லும் “நான் செத்தாலும் நோன்பை விட மாட்டேன்” அப்படின்னு... 

கன்னம் நனைக்கும் கண்ணீருடன் தன் அன்பு மழலைகளின் வாட்டத்தை பெற்றோர் கண்ணுருவதும், கல்பு உடைந்து அந்த கனி மழலைகளின் எதிர்காலம் நன்முறையில் அமைய கைப்படம் மலர்த்தி பிரார்த்திப்பதும் அதை எழுபது தாய்க்கும் மேலான கருணை மிக்க அந்த இறைவன் தன் அடியார்க்கு ஒன்றுக்கு எழுபது மடங்காய் வாரிக் கோரிக கொடுப்பதும் இந்த மாதத்தில் தான்.... 

கரும்பலகையில் கணக்கு ஒன்றை 

போட்டு கையில் சாக்பீசும் கம்புமாய் ருத்ர தாண்டவம் ஆடும் எட்டாம் வகுப்பு கணக்கு சார் ராமசாமி அல அசர்த்து மவன மிச்சத்த நீ எழுதுலே... ன்னு அந்த சாக்பீசைக் கையில் தந்தவுடன் அவரையும் ஓங்கித் தாழ இறங்கும் பிரம்பையும் ஒரு கணம் பார்த்துவிட்டு நடுங்கி நிற்கையில் அவர் கேப்பார்...
நோம்பலே? 

ஆமாம்ன்னு தலையசைச்சவுடனே பெழச்சுப் போடே!
அப்படின்னு வசவோட அன்னிக்கு நம்மள பிரம்புக் கிட்டருந்து காப்பாத்திய நோன்புகள்...

நோம்பு காலத்துல கத்து வச்சா பாவமின்னு தேடித் தேடித் போயி சேக்காளி விட்டு சலாம் சொல்லி வெட்கம் மறந்து கைகுடுத்து நோன்பால் நட்பு வளர்த்த அனுபவாங்களும்... 

பஜ்ஜி போண்டா வடைகள் இல்லாமல் கிழங்குகளும் கேசரிகளும் சர்பத் களுமாய் நண்பர்களே கடை விரித்து நமது காசுகளுக்கு குறிவைத்து வலை விரிக்க மகிழ்ச்சியாய் கடன் சொல்லி வாங்கி உண்டு மகிழ்ந்த ரமலான்களும்...
விரித்த மணற்பரப்பில் கொட்ராக்களில் ஊற்றப்பட்ட கஞ்சிக்கு காவல் காத்து கல்லோ மண்ணோ விழுந்துவிடாமல் கை பொத்திக் காத்துக் கிடந்ததும் இந்த நோன்பு காலங்களில் தான்...

நோம்பு வச்சுக்கிட்டு பொய் சொல்லக் கூடாதுன்னு தெரியாம சொன்ன பொய்களை ஒரு காகிதத்தில் குறித்து தொழுகையில் ஆண்டவனிடம் சொல்லி இன்னிக்கு இப்படி பொய் சொல்லிட்டேன்னு உதடுகளில் விரலால் அடித்து மன்னிப்பு கேட்டதும் இந்த ரமலான்களில் தான்...
சஹருக்கு எழும்பாமலே நிய்யத்துடன் வாழ்மானம் சுமந்து நோற்றுக்கழிந்த நோன்புகளும், 

உம்மா ஏதாவது சொல்லுமின்னு வாப்பா உம்மாக்கு தெரியாமல் ஏழைப்பட்ட சாச்சா மாருக்கு மதரசாக்கு வரச்சொல்லி கை நிறையக் கொடுத்து அவங்கள் கல்பு குளிரச்செய்வதும் இந்த நோன்பு காலங்களில் தான்.

மகிழ்ச்சியான நினைவலைகளை மனதோடு ஆயிரம் ஆயிரம் கொட்டிக் கவிழ்த்து நம்முடன் கை கோர்க்கும் ரமலான் மாதங்கள்...
இன்று 

கையில் இறை வேதம் சேர்த்து கல்பு நிறைய நடுக்கமும் குவித்து எனது பொழுதுகளில் இபாதத்துகளை சிம்மாசனமிட்டு அமர வைத்து நானும் உங்களைப்போல இந்த ரமலானை இறை பயத்துடன் எதிர்கொள்கிறேன்...
வா கூன்பிறையே....
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :