கவிஞர் பாலமுனை பாறூக் அவர்களின் எஞ்சியிருந்த பிரார்த்தனையோடு.


விஞர் பாலமுனை பாறூக் அவர்களின் எஞ்சியிருந்த பிரார்த்தனையோடு நவீன குறுங்காவியம் மீதான ஒருபார்வை

குடிமக்கள் காப்பியம் என்று சிலப்பதிகாரத்தைக் கொண்டாடுவோரும் உண்டு;அது முடி மன்னர்களை ஒத்த,”கோடியும் தேடி,கொடிமரமும் நாட்டி” வாழ்ந்த செல்வச் சீமான்களின் வீட்டுக் கதை என்று செப்புவாரும் உண்டு.

நாம் சொல்ல வருவது என்னவெனில் ஒவ்வொரு மனிதனும் இறைவனால் படைக்கப்பட்டவன்;அதனால் ஒவ்வொரு மனிதனும் ஏதேனும் ஒரு வகையிலேனும் முக்கியமானவனே.அவன் “பொதுமகன்”(பொது ஜனம்)என்று புகலப்படும் சாதாரணமானவனாக இருப்பினும் அவனுடைய வலியும் நலியும் கவனிக்கப்பட வேண்டியவையே என்ற- எவராலும் புறம் தள்ளிவிட முடியாத-கண்ணோட்டம் வேண்டும்;அதுவும் “பாடுபொருள்” ஆவதற்குரிய தகுதியைப் பெற முடியும் என்பதுதான்.

அந்தக் கண்ணோட்டத்தை இயல்பிலே பெற்றவர் பாவலர் பாலமுனை ஃபாரூக் அவர்கள் என்பதை அவருடைய பாவியங்கள் பேசும்.இலக்கிய உலகில் ஓர் ”இடதுசாரி” என்று கருதப்படும் அவருக்கு,மரபு முறையிலான பாவியம் என்றால்,அது வாழ்த்து,வருபொருளுரைத்தல்...முதலியவற்றில் தொடங்கிஅறம்,பொருள்,இன்பம்,வீடு என நாற்பொருள் பயத்தல் வரை பாடப்பட வேண்டும் என்பது நன்கு தெரியும் என்றாலும் அவர் அவற்றைக் கடைப்பிடித்துத் தம் பாவியங்களை எழுதுவதில்லை. எடுத்த எடுப்பில் அவரைப் பாதித்த,சொல்ல விரும்பிய செய்திக்கு வந்துவிடுவார்.அந்த வெளிப்பாட்டை “எஞ்சி இருந்த பிரார்த்தனையோடு” என்ற அவருடைய புதிய பாவியத்திலும்பார்க்க முடிகிறது.

எதை இழந்திருந்தாலும் இறைநம்பிக்கையில் ஊறி உள்ள ஒருவன் தன் இறை நம்பிக்கையை இழப்பதில்லை;இழக்கக்கூடாது.அந்த நிலையிலும் அவன் இறைவனோடு தொடர்புகொண்டவனாகவே இருப்பான்;அவன் தன் இறைவனிடம் பிரார்த்தனை செய்வான் என்பதைச் சொல்லாமல் சொல்லும் தலைப்புதான் “எஞ்சி இருந்த பிரார்த்தனையோடு”.இந்த்த் தலைப்பு வெறுமனே வெறுமையை உணர்த்துவது அல்ல;வேறு பல வற்றையும் உணர்த்துவது.

பெயர்கூடக் குறிப்பிடப்படாத,அது தேவைப் படாத ஒரு காப்பியத் தலைவன் இதில் வருகிறான். அவன் அவனைப் போலும் பாதிக்கப்பட்ட அனைவருக்குமான குறியீடு என்கிற போது பெயர் சொல்லப்படாததே சரி என்று புலப்படுகிறது.அவன் வாழ்வில் சற்றும் எதிர்பாராத,முற்றும் தர்க்க நியாயத்திற்கு உட்படாத,அடுத்த நாட்டுப் படையினராலே துன்பங்களைச் சந்திக்கும் அவலம்தான் பாவியத்தின் திறப்பு அத்தியாயம்!அங்கேயே நாம் சோகப்பட்டுப் போய்விடுகிறோம்.

“பாம்பு-தலையை ஆட்டி விஷத்தைக் கக்குமா? விரலை ஆட்டி விடுதலை தருமா?” என்ற பேரச்சம் மிக்க சூழலிலே,அவன் சூராக்களை எல்லாம் ஓதி முடித்து,அஸ்மாஉல் ஹுஸ்னாவையும் மனசு உள்ளூர மொழிந்தது என்பது அவனுடைய துன்பமும் நம்பிக்கையும் அவனுள் மாறி மாறித் தோன்றுவதை மட்டுமல்ல,ஆயிரம் ஆயிரம் அதிர்வுகளை வாசகனுள் ஏற்படுத்தப் போதுமானவை.அந்த விவரிக்க முடியாத வேதனையில் அவன் விடுதலை ஆவதை,”நரக வாயில் படீரெனத் திறந்து அவர்களை சுருட்டிக் கசக்கி வெளியில் எறிந்தது”என்று பாடுகிறார்.இந்த உவமை,சொல்ல வந்த செய்தியை-சூழ்நிலையை நம் நெஞ்சில் முள்ளால் எழுதுவது புரியும்.

இந்தியத் திரு நாட்டில் இழிவுபடுத்தப்பட்ட ஓர் இனத்தில் பிறந்தவன் தன் வாழ்வில் சந்திக்கும் அநியாயங்களுக்கு அவன் செத்த பிறகும் முடிவிருக்காது.அது போல ஸ்ரீலங்காவில் “கிழக்கில்” பிறந்தவன் படும்பாடு பற்றிப் பாடும்போது,”கிழக்கில் பிறந்தான் இது பிழையாகுமா?” என்று கேட்கிறார்.உரிய விடையைக் காலம்தான் சொல்லவேண்டும்.

“அமுக்கம் தொண்டையை அடைத்துக் கொண்டதாய்க் கடலும் அடிக்கடிக் கனைத்துக் கொள்வதேன்?”-என்பது நல்ல தற்குறிப்பேற்ற அணி.

கதை மாந்தர்கள்,கோழி,குஞ்சு,நத்தை ஆகியவற்றுடன் ஒப்பிடப்படும்போது,அவர்கள் எத்தகைய மிருகத்தனமான ஒடுக்குமுறைக்குள் உள்ளாகி படு பலவீனர்களாய் இருக்கின்றனர் என்பதைப் பாவலர் கழிவிரக்கம் வரும் வகையில் நமக்கு உணர்த்திவிடுகிறார்.

அநீதியான முறையில் ஆயுதக்குழுக்களினாலும் “பயிரை மேய வந்த வேலிகளாலும்” தமிழர் முஸ்லிம்களுக்கு வரும் இன்னல்களைத் துடைக்க வரும் பார்வதி அக்கா,பரிசாரி அண்ணன் முதலியோரைப் பார்க்கும்போது அவர்கள் நமக்கும் சகோதரர்கள் ஆகிவிடுகின்றனர்.இத்தகைய பாத்திரப் படைப்புகள் மூலம் பொது மக்களில் ”என்றும் ஒரு நடையினர் ஆகும் சான்றோர்”இருப்பதைப் படம்பிடித்துவிடுகிறார்!

“உறைந்து போய் இருந்தது ஊர்” என்பதன் மூலம்,ஆயுதக் குழுக்களினால் ஓர் ஊர் எத்தகைய அச்சத்தால் சூழப்படும் என்பதைப் புரிய வைக்கிறார்.”கோழிக் காக்கா குஞ்சு முகம்மது” ,”புல்லும் சாகா நடத்தைக்காரர்” என்று சொல்லும்போது நம் கண்களுக்கு ஒரு மென்மையான-மேன்மையான மனிதர் தெரிகிறார்.அவரும் கூட ஆயுதக் குழுவினரால் கட்த்தப்படுகிறார் என்னும்போது, நாம் சொல்லிழந்து நிற்கிறோம்.

உள் அரசியலாலும்,வெளி அரசியலாலும் இனவாதிகளின் வெறியாட்டத்தாலும் அவர்களிடம் அநியாயமாய் மாட்டிக்கொண்ட-அழிவின் விளிம்பைக் கண்ட- ஸ்ரீலங்காவின் தமிழ்-முஸ்லிம் மக்களின் வாழ்க்கை நிகழ்வுகளைக் காப்பியக் காட்சிகளாகக் காட்டும் இந்தக் காப்பியத்தைப் படித்து முடித்த பின்னர் நாமும் ”எஞ்சி இருந்த பிரார்த்தனையோடு” வசம் இழந்து வாடுகிறோம்.

வாசகனையும் பிரார்த்தனை செய்ய வைத்ததன் மூலம்இந்தப் பாவிய ஆசிரியர் பாலமுனை ஃபாரூக் தம் நன்னோக்கத்தில் வெற்றி பெற்றுவிடுகிறார் என்றால் அது மிகை அல்ல.

பன்னூல் ஆசிரியர் கவிஞர் ஏம்பல் தஜம்முல் முகம்மது எம்.ஏ,சென்னை-68.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :