
13 ஆவது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் கிழக்கு மாகாண சபையில் பிரேரணை முன்வைக்கப்படும் போது அதனை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எதிர்க்கும். அத்துடன் வாக்கெடுப்பின் போது எமது கட்சியின் உறுப்பினர்கள் பிரேரணைக்கு எதிராகவே வாக்களிப்பார்கள் என்று அக்கட்சியின் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ரீ.ஹசன் அலி தெரிவித் தார்.
இதேபோல் மேல் மாகாணசபையில் இந்தப் பிரேரணை கொண்டுவரப்படும்போதும் எமது உறுப்பினர்கள் அதற்கு எதிராகவே வாக்களிப்பார்கள். 13 ஆவது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு அனுமதிக்க முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
13 ஆவது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளும் வகையில் மாகாணசபைகளின் அங்கீகாரத்தை பெறும் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. இதுவரை வடமேல் மாகாணசபை, தென்மாகாணசபை, வடமத்திய மாகாணசபை , சப்பிரகமுவ மாகாணசபை, மத்திய மாகாணசபை மற்றும் ஊவா மாகாண சபைகளில் இந்தப் பிரேரணைக்கு ஆதரவாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
மேல்மாகாணசபை மற்றும் கிழக்கு மாகாணசபை என்பவற்றில் அடுத்தவாரம் அளவில் இந்தப் பிரேரணை முன்வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த நிலையிலேயே முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் ஹசன் அலி மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார்.
இது குறித்து அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்:-
குறித்த பிரேரணை கிழக்கு மற்றும் மேல் மாகாணங்களில் வாக்கெடுப்புக்கு விடப்படும் போது, முஸ்லிம் காங்கிரஸ் அந்த வாக்கெடுப்பை புறக்கணிக்கும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. அதில் எவ்வித உண்மையும் இல்லை. நாம் இப் பிரேரணையை முற்றாக எதிர்த்துவரும் நிலையில் கடந்த புதன்கிழமை வடமேல் மாகாண சபையில் கட்சியின் நிலைப்பாட்டுக்கு புறம்பாக இரண்டு உறுப்பினர்கள் ஆதரித்து வாக்களித்துள்ளனர். இதன்காரணமாக அவர்களை நாம் தற்காலிகமாக கட்சியிலிருந்து இடைநிறுத்தியுள்ளோம். கிழக்கு மற்றும் மேல் மாகாணங்களில் வாக்கெடுப்பை புறக்கணித்துவிட முடியாது. எல்லா சந்தர்ப்பங்களிலும் ஒரே நிலைப்பாட்டையே கடைபிடிக்க வேண்டியுள்ளது.
குறித்த பிரேரணை அடுத்தவாரமளவில் மேல் மாகாண சபையில் வாக்கெடுப்பு விடப்படலாம் என எதிர்பார்க்கடுகின்றது. மேல் மாகாணத்தில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் முன்று மக்கள் பிரதிநிதிகள் உள்ளனர். அவர்கள் குறித்த பிரேரணையை எதிர்த்து வாக்களிப்பர்.
அத்தோடு கிழக்கு மாகாண சபையின் கடந்த சில அமர்வுகள் சீராக இடம்பெறவில்லை. 13 ஆவது திருத்தம் தொடர்பிலான குறித்த திருத்த பிரேரணை கிழக்கு மாகாண சபையின் அங்கீகாரத்தைப்பெற வேண்டியுள்ளது. அவ்வாறு பிரேரணை கொண்டு வரப்பட்டு வாக்களிப்புக்கு விடப்பட்டால் மு.கா கட்டாயம் எதிர்த்தே வாக்களிக்கும் என்றார்.
0 comments :
Post a Comment