ஒலுவில் மகாபொல கடல்சார் தொழில் பயிற்சி நிலையத்தினை மூடும் நடவடிக்கைக்கு மக்கள் எதிர்ப்பு.


இலங்கை துறைமுக அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான ஓலுவில் துறைமுக மகாபொல கடல்சார் தொழில் பயிற்சி நிலையத்தினை மூடி விட்டு, அதற்குச் சொந்தமான காணி மற்றும் கட்டிடங்களை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்குக் கையளிக்கும் பொருட்டு, எடுக்கப்பட்டு வருவதாகக் கூறபப்டும் நடவடிக்கைகள் தொடர்பில் அப்பிரதேச மக்கள் தமது கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர்.

ஒலுவில் துறைமுகத்தோடு இணைந்த மகாபொல கடல்சார் தொழில் பயிற்சி நிலையத்தினை மூடி விட்டு, இந் நிலையத்துக்கான காணி மற்றும் கட்டிடங்களை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு வழங்குவதற்குரிய திட்டங்கள் மேற்கொள்ளப்படுவதாக தெரியவருகிறது.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட பொறியியல் பீடத்துக்கான இடம் மற்றும் கட்டிடத் தேவையினை பூர்த்தி செய்வதற்காகவே – ஒலுவில் பிரதேசத்தில் சுமார் 15 வருடங்களாக இயங்கி வரும் மேற்படி மகாபொல கடல்சார் தொழில் பயிற்சி நிலையம் மூடப்படவுள்ளதாகத் தெரியவருகிறது.

இதனையடுத்தே இப் பிரதேச மக்கள் ஒலுவில் கடல்சார் தொழில் பயிற்சி நிலையத்தினை மூடுவதற்கு தமது கடுமையான எதிர்பினைத் தெரிவித்துள்ளனர்.

ஒலுவில் துறைமுகத்துக்குத் தேவையான ஆளணிகளை உருவாக்குவதற்கும், அவர்களுக்கான பயிற்சிகளை வழங்குவதற்கும் - மேற்படி மகாபொல கடல்சார் தொழில் பயிற்சி நிலையம் உருவாக்கப்பட்டது. ஆனால், ஒலுவில் துறைமுக நிர்மாணப் பணிகள் நிறைவு பெற்று, துறைமுகம் செயற்படவுள்ள தற்போதைய காலகட்டத்தில், மேற்படி மகாபொல கடல்சார் தொழில் பயிற்சி நிலையத்தினை மூடுவதானது இப் பிரதேசத்துக்கு செய்யும் பாரிய துரோகமாகும் என இங்குள்ள மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

மேலும், இத் தொழில் பயிற்சி நிலையத்தில் சுயதொழில் பயிற்சிகளும், மிக அரிதான தொழில் பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. உதாரணமாக – வீடு மற்றும் தொழிற்சாலை மின்னிணைப்பு, படகு இயந்திரம் திருத்துநர், அலுமினியம் பொருத்துநர், பாரம் தூக்கு இயந்திர இயக்குநர் ஆகிய பயிற்சிகளோடு, உருக்கி ஒட்டுதல் மற்றும் பொறிச்சாலை பயிற்சி நெறிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

பாரம் தூக்கு இயந்திரம் (போர்க் லிஃப்ற்) இயக்கும் பயிற்சி நெறியினை வெற்றிகரமாக முடித்துக் கொண்ட 175 பேர், வள்ளங்களுக்கான மோட்டார் திருத்தும் பயிற்சியினை முடித்துக் கொண்ட 150 பேர், அலுமினியம் பொருத்துதல் பயிற்சியினை மேற்கொண்ட 150 பேர் மற்றும் உருக்கி ஒட்டும் தொழில் பயிற்சி பெற்றுக் கொண்டவர்கள் என ஏராளமானோர் இதுவரை மேற்படி தொழில் பயிற்சி நிலையத்தில் தமது பயிற்சிய முடித்துக் கொண்டு வெளியேறியுள்ளனர்.

இவ்வாறான தொழில் பயிற்சிகளை முடித்துக் கொண்டு வெளியேறிய பலர் - உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் நல்ல வருமானங்களைப் பெற்று தொழில் புரிந்து வருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இங்கு தொழில் பயிற்சிகளை மேற்கொள்ளும் மாணவர்களிடமிருந்து இலங்கை துறைமுக அதிகாரசபையானது பயிற்சிக் கட்டணங்களையும் அறவிட்டு வருகின்றது.

அந்தவகையில், ஒலுவில் துறைமுக நிர்மாண நடவடிக்கைக்காக தமது காணிகளை இழந்தவர்களின் பிள்ளைகளுக்கும், மேலும் 900 மாணவர்களுக்கும் இந்த தொழில் பயிற்சி நிலையத்தில் இதுவரை பயிற்சி வழங்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

இவை தவிர, மேற்படி மகாபொல தொழில் பயிற்சி நிலையத்தில் தற்போதும் 17 பேர் தொழில் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறானதொரு நிலையில், ஒலுவில் மகாபொல கடல்சார் தொழில் பயிற்சி நிலையத்தினை மூடுவிட்டு, அதன் கட்டிடங்களையும், அதனோடினைந்த காணிகளையும் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு வழங்குவதை எந்தவகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று இப் பிரதேச மக்கள் கூறுகின்றனர்.

மேற்படி மகாபொல தொழில் பயிற்சி நிலையம் மூடப்படுமாயின், ஒலுவில் துறைமுகத்துக்கு தேவையான பயிற்றப்பட்ட ஆளணியினரை இப்பிராந்தியத்திலிருந்து பெற்றுக்கொள்ள முடியாமல் போகும். எனவே, வெளியிடங்களில் உள்ளவர்களைக் கொண்டே – ஒலுவில் துறைமுகத்துக்கான ஆளணி வெற்றிடங்கள் நிரப்ப வேண்டிய நிலைவரமொன்று உருவாகும் என அஞ்சப்படுகிறது.

ஒலுவில் துறைமுகத்துக்காக நாங்கள் - எமது காணிகளையும், கடற்றொழிலினையும் இழந்துள்ளோம். இந்த நிலையில், ஒலுவில் துறைமுகம் செயற்படத் தொடங்கும் போது, அங்கு எமது பிள்ளைகளுக்கு தொழில் வாய்ப்புகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என்கிற ஒரு அற்ப நம்பிக்கை எமக்குள்ளது. துறைமுகத்தில் தொழில் வாய்ப்புக்களைப் பெறுவதற்கான பயிற்சி நெறிகளை இங்குள்ள கடல்சார் தொழில் பயிற்சி நிலையத்தில்தான் பெற்றுக் கொள்ள முடியும். ஆனால், அந்த தொழில் பயிற்சி நிலையத்தினையும் மூடினால் - எங்கள் பிள்ளைகள் எங்கு தொழில் பயிற்சிகளைப் பெறுவது, எப்படி துறைமுகத்தில் தொழில் வாய்ப்புக்களைப் பெறுவது என்று ஒலுவில் பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் கேள்வியெழுப்புகின்றனர்.

எனவே, இலங்கை துறைமுக அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான ஒலுவில் மகாபொல கடல்சார் தொழில் பயிற்சி நிலையத்தினை மூடும் திட்டத்துக்கு முற்றுப் புள்ளி வைத்து, அதை தொடர்ந்தும் செயற்படுத்தி வரவேண்டும் என்று இப் பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :