இஸ்லாத்தின் உஸூல்களுக்கு மாற்றமில்லாத வகையில் இஜ்திஹாத் அடிப்படையில் ஏற்பட்டுவரும் நவீன சிந்தனைகள் இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுவதாகக் குறிப்பிட்ட நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம், தாம் முஸ்லிம் கலாசார திணைக்களத்திற்கு பொறுப்பான அமைச்சராக இரு தடவைகள் பதவி வகித்த காலத்தில் மத்ரஸாக்களுக்கான ஒரு சீரான பாடத்திட்டத்தை வகுப்பதில் அதிக கவனம் செலுத்தியதாகவும் கூறினார்.
அமைச்சர் ஹக்கீம், கல்பிட்டி பிரதேசத்தில் முதலைப்பாலி கிராமத்தில் அமைந்துள்ள தாருல் உலூம் அரபுக் கல்லூரிக்கு செவ்வாய்க்கிழமை (28) மாலை வருகை தந்து அங்கு உரையாற்றிய போதே இதனைக் கூறினார்.
பிரஸ்தாப அரபுக் கல்லூரியில் நிருவாக சபை உறுப்பினரும், கல்பிட்டிப் பிரதேச சபை உறுப்பினருமான எ.எச்.பைரூஸின் அழைப்பின் பேரில் அமைச்சர் ஹக்கீம் இந்த மத்ரஸாவை நேரில் சென்று பார்வையிட்டார். வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முத்தலீப் பாவா பாருக்கும் அமைச்சருடன் அங்கு வந்திருந்தார்.
அங்கு மேலும் உரையாற்றும் போது அமைச்சர் ஹக்கீம், 'இந்த மத்ரஸாவுக்குள் பிரவேசித்த போது எனக்கு நல்ல அனுபவம் ஏற்பட்டது. இங்கு உரையாற்றிய இவ் அரபுக் கல்லூரியின் அதிபர் மௌலவி ஜெமீல் கான், இரு பிரிவுகளாக உள்ள மத்ரஸாவில் தனித்தனியாக மாணவர்களும் மாணவிகளும் கல்வி பயில்வதாகவும் இதன் செலவுகள் அனைத்தும் வெளியூர்களில் இருந்து அறவிடப்படாமல், உள்ளுர் வாசிகளாலேயே மேற்கொள்ளப்படுவதாகவும் கூறியது என்னை வியப்பில் ஆழ்த்தியது' என்றார்.
தாருல் உலூம் காசிபுல் ஹூதா மத்ரஸாவில் 120 மாணவர்களும், 100 மாணவிகளும் வேறு வேறாக அரபு மொழியில் சன்மார்க்க கல்வியை பயில்வதோடு, க.பொ.த. (சாதாரணதர) பரீட்சையிலும் திறமையாக சித்தி பெற்று வருகின்றனர். உயர்தர வகுப்பும் ஆரம்பிக்கப்படவுள்ளது. பல்கலைக்கழக கல்விக்கு தயார்படுத்துவதும் இக் கல்லூரியின் நோக்கங்களில் ஒன்றாகும்.
சென்றவாரம் அக்குறனை ரஹ்மானியா மத்ரஸாவில் நடைபெற்ற அனைத்து மத்ரஸா ஒன்றியத்தின் (இத்திஹாதுல் மதாரிஸ்) அரபு மொழி பரீட்சையில் 150 மத்ரஸாக்களில் முதலைப்பாலி காசிபுல் ஹூதா மத்ரஸா 20 ஆவது இடத்தில் உள்ளது.
அத்துடன் முஸ்லிம் கலாசார திணைக்கள அகில இலங்கை ரீதியில் காத்தான்குடியில் நடாத்திய கிராஅத் போட்டியில் வெற்றிபெற்ற 10 பேரில் நால்வரும், திருக்குர்ஆன் மனனப் போட்டியில் வெற்றிபெற்ற 10 பேரில் நால்வரும் இந்த மத்ரஸாவை சேர்ந்த மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது என மத்ரஸாவின் அதிபர் மௌலவி ஜெமீல் கான் ஆரம்பத்தில் தாம் நிகழ்த்திய வரவேற்புரையின் போது எல்லாம் வல்ல அல்லாஹ்வை புகழ்ந்தவராக பெருமிதத்துடன் தெரிவித்தார்.
டாக்டர் ஏ.ஆர்.ஏ. ஹபீஸ்
ஊடகச் செயலாளர்
டாக்டர் ஏ.ஆர்.ஏ. ஹபீஸ்
ஊடகச் செயலாளர்
0 comments :
Post a Comment