(எஸ்.எம்.அறூஸ்)அட்டாளைச்சேனை சந்தைக் கட்டிடம் அமைக்கப்படுவதன் மூலம் இப்பிரதேசம் பொருளாதார ரீதியாக பாரிய முன்னேற்றத்தை அடைந்து கொள்ளும் என்று கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உச்சபீட உறுப்பினருமான ஏ.எல்.எம்.நஸீர் தெரிவித்தார்.
புறநெகும திட்டத்தின் கீழ் அட்டாளைச்சேனை பிரதேச சபையினால் மேற்கொள்ளப்படும் சந்தைக் கட்டிடத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு பிரதேச சபைத் தவிசாளர் எம்.ஏ.அன்ஸில் தலைமையில் சந்தை சதுக்கத்தில் நடைபெற்றபோது, இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே கிழக்குமாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், அட்டாளைச்சேனை பிரதேசத்திற்கு ஒரு பொதுச் சந்தைக் கட்டிடம் அமைக்கப்பட வேண்டும் என்ற கனவு இன்று நனவாகியிருக்கின்றது. 1996ம் ஆண்டு முன்னாள் அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் மர்ஹூம் நூஹூலெப்பை சந்தைக் கட்டிடம் அமைப்பதற்காக ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தபோது, அன்று உதவித் தவிசாளராக இருந்த மாகாண அமைச்சர் உதுமாலெப்பை அதனை தோற்கடித்தார்.
கட்டிடங்கள் கட்டப்படுவதனால் கொந்தராத்துக்கள் செய்ய முடியாது. மாறாக பாதைகளுக்கு கிறவல் போடுவதனால் கூடுதலாக பணம் உழைக்கலாம் என்பதற்காகவே சந்தைக் கட்டிடம் அமைக்கப்படுவதை உதுமாலெப்பை எதிர்த்தார். அன்று சந்தைக் கட்டிடம் வருவதை எதிர்த்த உதுமாலெப்பை இன்று கூட தனது எதிர்ப்பை காட்டி வருகின்றார்.
எல்லாவற்றுக்கும் இறைவன் போதுமானவன். உதுமாலெப்பையின் எதிர்ப்புக்கள் புஸ்வானமாகிவிட்டது. உண்மை வென்றுவிட்டது. உண்மைக்கு ஒரு போதும் அழிவில்லை. எமது பிரதேசம் சகல துறைகளிலும் அபிவிருத்தி காணவேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும். தங்களது சுயநல அரசியலுக்காக அபிவிருத்தி திட்டங்களை தடுப்பதற்கு எவரும் முன்வரக் கூடாது.
கடந்த வருடம் இந்தக் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் மாகாண அமைச்சர் முட்டுக்கட்டை போட்டதனால் தடைப்பட்டது. பலமுறை கிழக்கு மாகாண முதலமைச்சரை சந்தித்து வேண்டுகோள் விடுத்திருக்கி;ன்றேன். அன்றைய முதலமைச்சர் எமது நியாயங்களை புரிந்து கொண்டார்.
இன்று சந்தைக் கட்டிடத்தை எதிர்க்கின்ற உதுமாலெப்பை அமைச்சராக வலம் வருவதற்கு எமது கட்சி எடுத்த முடிவுதான் காரணமாகும். இவ்வாறான ஒரு நிலையில் எதற்கெடுத்தாலும் எதிர்ப்பைக் காட்டுகின்றார்கள். இவர்களின் எந்த எதிர்ப்பும் இனிமேல் பலிக்காது. கிழக்கு மாகாண சபையில் முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானிக்கின்ற பெரும் சக்தியாகும்.
தமிழர் ஒருவருக்குக் கிடைக்க வேண்டிய அமைச்சுப் பதவியை கெஞ்சிப் பெற்ற இவர்கள் இன்னும் இரண்டொரு மாதங்களில் அமைச்சுப் பதவியிலிருந்து இடைநிறுத்தப்படப் போகின்றார். மத்திய அரசாங்கத்தில் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்த சிவனேசத்துரை சந்திரகாந்தன் அப்பதவி கிடைக்காது என்பதை நன்கு உணர்ந்ததால் மாகாண அமைச்சுப் பதவியை பாரமெடுக்கப் போகின்றார்.
அட்டாளைச்சேனை மக்களின் ஏகோபித்த பெரும்பான்மை வாக்குகளினால் தெரிவு செய்யப்பட்டவன் என்ற வகையில் இப்பிரதேசத்தின் அபிவிருத்திக்கு என்னால் முடிந்த பங்களிப்பினை வழங்குவேன். அரசியலுக்காக அங்கொன்றும் இங்கொன்றும் பொய் சொல்பவன் நான் அல்ல. எமது பிரதேசத்திற்கும் அமைச்சுப் பதவி கிடைக்கும். அதற்கான விடயங்கள் நடந்திருக்கின்றது.
மாற்றுக் கட்சியாக இருந்தாலும் மக்களின் நலன் கருதி அவர்களின் வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கியிருக்கின்றோம். இன்று நாங்கள் செய்கின்ற அபிவிருத்தி வேலைகளை ஜீரணிக்க முடியாமல் குழப்ப முற்படுகின்றனர்.
முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ஒரு பிரதேசத்தின் தலைவர் அல்ல அவர் முஸ்லிம் சமூகத்தின் தலைவராவார். ஆளுமையுள்ள ஒரு தலைவரின் கீழ்தான் நாம் பணியாற்றுகின்றோம். சிறந்த ஒரு தவிசாளர் நமக்குக் கிடைத்துள்ளார். சந்தை அமைப்பதில் அவரின் பங்களிப்பு அளப்பரியதாகும் என்றார்.
இந்நிகழ்வில், அம்பாரை மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் ஏ.ஜே.எம்.இர்சாத், பிரதித் தவிசாளர் ஏ.எம்.அமானுல்லா, முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழுத் தலைவர் யூ.எம்.வாஹிட், பிரதேச சபை உறுப்பினர்களான ஐ.எல்.அப்துல் முனாப், எஸ்.எல்.முனாஸ், மர்ஹூம் மசூர் சின்னலெப்பையின் புதல்வர் றியா மசூர் உட்பட பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
0 comments :
Post a Comment