எம்பிலிபிட்டியவில் இன்று நடந்த ஆர்ப்பாட்டத்தை தமது கட்சி ஏற்பாடு செய்யவில்லை என்றபோதிலும் அதில் தமது கட்சியின் உறுப்பினர்கள் வெவ்வேறு அமைப்புகளை பிரதிநிதித்துவப் படுத்தி கலந்துகொண்டிருக்கலாம் என்று ஜாதிக ஹெல உறுமய கட்சியின் மேல்மாகாண சபை அமைச்சர் உதய கம்மன்பில பிபிசி தமிழோசையிடம் கூறினார்.
ஹலால் சான்றிதழ் பெற வேண்டுமென்று வர்த்தக நிறுவனங்களை முஸ்லிம்கள் தரப்பிலிருந்து பலவந்தப்படுத்துகின்ற போக்குக்கு தமது கட்சி எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
முஸ்லிம்களுக்கு ஹலால் உணவு உண்பதற்கு உரிமை இருப்பது போல ஹலால் இல்லாத உணவை உண்பதற்கான உரிமை மற்ற மதத்தவர்களுக்கு உண்டு என்றும் அமைச்சர் உதய கம்மன்பில வாதிட்டார்.
அதேவேளை, நாட்டில் பௌத்த விகாரைகளுக்கு அருகில் 'உரிய அனுமதியின்றி நிர்மானிக்கப்பட்டுள்ள முஸ்லிம் பள்ளிவாசல்கள் சட்டவிரோதமானவை' என்றும் அவற்றை அகற்ற வேண்டுமென்றே தாம் போராட்டம் நடத்துவதாகவும் அவர் தமிழோசையிடம் தெரிவித்தார்.
பாதுகாப்புச் செயலர்- முஸ்லிம்கள் சந்திப்பு
இதேவேளை, இலங்கையில் அண்மைக் காலங்களாக முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சாரங்களும் போராட்டங்களும் நடந்துவருகின்றமை தொடர்பில் பாதுகாப்பு அமைச்சர் கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து முஸ்லிம் சிவில் சமூக பிரதிநிதிகள் சில தினங்களுக்கு முன்னர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
முஸ்லிம் மக்களின் சனத்தொகை, பள்ளிவாசல்கள் மற்றும் ஹலால் முத்திரைகளுக்கு எதிராக அண்மைக் காலங்களாக பல்வேறு பிரச்சாரங்களும் போராட்டங்களும் நடந்துவருகின்றமை தொடர்பில் தாங்கள் பாதுகாப்புச் செயலாளரின் கவனத்துக்கு கொண்டுவந்ததாக ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சிலின் தலைவர் என்.எம்.அமீன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
இதேவேளை, இந்தப் பிரச்சனை தொடர்பில் ஏனைய அரசியல் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாகவும் அவர் கூறினார்.
எம்பிலிபிட்டிய பொதுச்சந்தையில் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம் வர்த்தகர்கள் இருவர் முச்சக்கர வண்டியில் வந்த நபர்களால் நேற்று ஞாயிற்றுக்கிழமை தாக்கப்பட்டிருப்பதாகவும் அமீன் தெரிவித்தார்.

0 comments :
Post a Comment