20வது திருத்தத்துக்கு நீதிமன்ற தீர்ப்பினால் அதிர்ந்தது யார் ?

முகம்மத் இக்பால் ,சாய்ந்தமருது-


20வது திருத்தக்கு நீதிமன்ற தீர்ப்பினால் அதிர்ந்தது யார் ? தீர்ப்பு வேறுவிதமாக இருந்திருந்தால் முஸ்லிம் எம்பிக்களின் நிலைப்பாடு ?

இருபதாவது அரசியலமைப்பு திருத்தத்துக்கு சில சரத்துக்களை மேற்கொள்வதென்றால் சர்வர்ஜன வாக்கெடுப்புக்கு செல்ல வேண்டுமென்று வழங்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்பானது ஆட்சியாளர்களுக்கு அதிர்ச்சியினை ஏற்படுத்துயுள்ளது.

“ஆணை பெண்ணாகவோ, பெண்ணை ஆணாகவோ மாற்றுவதை தவிர, ஒரு ஜனாதிபதியால் ஏனைய அனைத்தையும் செய்ய முடியும்” என்பது ஜே.ஆர். ஜெயவர்தனா அவர்களினால் 1978 இல் கொண்டுவந்த இலங்கையின் இரண்டாவது குடியரசு அரசியலமைப்பு பற்றி கூறப்பட்டவையாகும்.

2015 இல் நல்லாட்சி அரசாங்கத்தின் மூலம் கொண்டுவரப்பட்ட 19 வது திருத்தத்தின் மூலம் ஜனாதிபதிக்கு இருந்ததில் ஒருசில அதிகாரங்கள் மட்டும் குறைக்கப்பட்டிருந்தது.

சுயாதீன ஆணைக்குழுக்களை அமைப்பது தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ள 19 வது திருத்தமானது சந்திரிக்காவின் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட 17 வது திருத்தத்தினை தழுவியதாகும்.

அரச படைகளுக்கு சமனாக இராணுவ பலம் கொண்டிருந்த விடுதலை புலிகள் அமைப்பு 2009 இல் ராஜபக்சவின் ஆட்சியில் தோற்கடிக்கப்பட்டதன் பின்பு, ஜே.ஆர். ஜெயவர்தனவினால் அறிமுகம் செய்யப்பட்ட ஜனாதிபதிக்குரிய அதிகாரத்தையும்விட அதியுயர் அதிகாரம் மகிந்த ராஜபக்சவுக்கு தேவைப்பட்டது.

அதற்காக 2010 இல் 18 வது திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இது ஒரு மன்னருக்கு உள்ள அதிகாரத்தை போன்றதாகும். மகிந்தவின் தோல்விக்கு பின்பு அது நல்லாட்சியினால் திருத்தம் செய்யப்பட்டிருந்தது.

2015 இல் ரணிலின் தயவில் மைத்திரிபால சிறிசேன ஜனாதிகாக தெரிவு செய்யப்பட்டதனால் ஜனாதிபதிக்குரிய அதிகாரங்களில் சிலதை பெற்றுக்கொள்வதற்காகவே ரணிலினால் 19 வது திருத்தம் மூலம் ஜனாதிபதியின் அதிகாரங்கள் சிறிதளவில் குறைக்கப்பட்டிருந்தது.

மகிந்த என்கின்ற பொது எதிரியை தோற்கடித்துவிட்டு நல்லாட்சி என்றபெயரில் இரு பெரும் கட்சிகள் ஒன்றிணைந்த ஆட்சி ஏற்படாதிருந்திருந்தால் ஜனாதிபதியின் அதிகாரங்களில் சில குறைக்கப்பட்டிருந்த அபூர்வமான நிகழ்வு ஒருபோதும் நடைபெற்றிருக்க வாய்ப்பில்லை.

மீண்டும் ஜே.ஆரின் ஆட்சியில் இருந்ததையும்விட கூடுதலான அதிகாரத்தினை பெற்றுக்கொள்வதற்காகவே இருபதாவது திருத்தம் முன்மொழியப்பட்டது. இந்த திருத்தத்துக்கு தனது கட்சிக்குள்ளிருந்தும், வெளியிலிருந்தும் இவ்வளவு எதிர்ப்புக்கள் வருமென்று ராஜபக்ச தரப்பினர் கனவிலும் நினைத்திருக்க வாய்ப்பில்லை.

அதுமட்டுமல்லாது பல பக்கத்திலிருந்தும் இந்த திருத்தமூலத்துக்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. ஆளும் கட்சிக்குள்ளிருந்து எதிர்ப்புக்கள் இருந்தாலும், முன்னாள் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச போன்ற ஒருசிலரை தவிர, வேறு எவரும் இதற்கு பகிரங்கமாக எதிர்ப்பு வெளியிடவில்லை.

ஆனாலும் இருபதாவது திருத்தத்தினை வெளிப்படையாக எதிர்க்கும் எதிர்தரப்பினர்களுக்கு ஆளும்தரப்புக்குள்ளிருந்து மறைமுகமாக ஆதரவு வழங்கிவருவதாக செய்திகள் கூறுகின்றன.

ஆளும்தரப்புக்குள் இருபதாவது திருத்தத்துக்கு எதிர்ப்புக்கள் வலுவடைந்துகொண்டு வந்த சூழ்நிலையில் அவர்களின் கருத்துக்களை புறம்தள்ளிவிட்டு என்ன விலை கொடுத்தாவது இந்த திருத்தத்தினை வெற்றிகொள்ள வேண்டுமென்று ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச தரப்பினர் திட்டமிட்டிருந்தனர்.

அதற்காக அவர்கள் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள்மீதும், ஏனைய எதிர்த்தரப்பு உறுப்பினர்கள்மீதும் வலைவிரித்தனர். இந்த சூழ்நிலையிலேயே நீதிமன்ற தீர்ப்பு சர்வஜன வாக்கெடுப்பினை வலியுறுத்தியுள்ளதானது ராஜபக்ச தரப்பினருக்கு ஓர் பலத்த அடியாகும்.

சில நேரங்களில் சர்வர்ஜன வாக்கெடுப்புக்கு செல்ல தேவையில்லை மூன்றில் இரண்டு பாராளுமன்ற பலம் இருந்தால் போதுமென்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தால், இருபதாவது திருத்தமானது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் அது பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கும். அதற்காக முஸ்லிம் உறுப்பினர்களுக்கு பல கோடிகள் வெகுமதி வழங்கப்பட்டிருக்கும்.

எமது உறுப்பினர்கள் பதினெட்டாவது திருத்தத்துக்கு ஆதரவு வழங்கிவிட்டு எவ்வாறு அதனை முஸ்லிம் மக்களிடம் நியாயப்படுத்தினார்களோ, அதுபோலவே இதற்கும் கையுயர்த்திவிட்டு நியாயப்படுத்துவார்கள். அதனை நாங்கள் கண்ணை மூடிக்கொண்டு நம்பியிருப்போம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :