சுமந்திரன் மீது தேவையற்ற விமர்சனங்களை முன்வைப்பது பொருத்தமற்றது.!


எப்.முபாரக் -
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்களின் செவ்வியை முழுமையாக பார்வையிடாமலும் தெளிவான மொழிபெயர்ப்பை பெறாமலும் சுமந்திரன் அவர்கள் மீது தேவையற்ற விமர்சனங்களை முன்வைப்பது பொருத்தமற்றது என மூதூர் பிரதேச சபையின் உப தவிசாளர் சி.துரைநாயகம் (20) தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் சமூக வலைத்தள ஊடகம் ஒன்றிற்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அவர்களினால் வழங்கப்பட்ட செவ்வி தொடர்பில் பல்வேறுபட்ட விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. 

இந்த நிலைப்பாடு குறிப்பிட்ட செவ்வியை முழுமையாக பார்வையிடாமையினாலும், தவறான மொழிபெயர்ப்புடன் கூடிய குறிப்பிட்ட சில கேள்விகளுக்கான பதில்களில் உள்ள தெளிவற்ற புரிதலின் காரணமாக ஏற்பட்டுள்ளன. 

சமூக வலைத்தளங்களில் உலாவிய பொருத்தமற்ற முறையில் மொழிபெயர்க்கப்பட்ட குறிப்பிட்ட கானொளியே பலர் தங்கள் உணர்வினை வெளிப்படுத்துவதற்கு காரணமாக அமைந்தது. 

இந்த நேர்காணலை ஆரம்பத்தில் இருந்து பார்க்கும்போது நேர்கண்டவர் சிங்கள மக்களிடம் எதனை கொண்டு சேர்க்க முயல்கின்றார் என்பதை புரிந்து கொள்ள முடியும்.

 எனினும் மிகத் தெளிவாகவும், திடமாகவும் யதார்த்த அரசியல்வாதியாக சுமந்திரன் அவர்கள் பதிலளித்திருந்தார். தமிழ் மக்களுக்கான நிரந்தர தீர்வை பெற்றுக்கொள்ள அகிம்சை வழியில் நம்பிக்கை கொண்டு பயணிக்கும் நபராக, அவர் ஆயுதப் போராட்டத்தினுடைய பொறிமுறையினை தான் ஏற்றுக் கொள்ளவில்லை என யதார்த்தமாகவும், வெளிப்படையாகவும் பதிலளித்திருந்தார். 

ஒர் உரிமைசார் ஆயுதப் போராட்டமானது தீர்வுக்காக அரசியல் மயப்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தையும், மூன்று தசாப்த காலங்களுக்கு மேல் நீடிக்காததையும் உலக வரலாற்றில் இருந்து கற்றுக் கொண்டதனால் இதனை அடியொற்றியதான பதிலாக அதனை நாம் பார்க்க முடியும். 

சிறந்த சட்டத்தரணியான சுமந்திரன் அவர்கள் உணர்ச்சி அரசியலைத்தாண்டி நடைமுறைச் சாத்தியமான அரசியலை மேற்கொண்டு வரும் சிறந்த அரசியல்வாதி எனவும்,

தமிழ் மக்களுக்கான நிரந்தர தீர்வினை அரசின் அனுசரனையுடனேயே நாம் பெற்றுக் கொள்ள முடியும் அதற்கான அணுகுமுறையினை தமிழ் மக்களை பிரதிநிதுத்துவப்படுத்துகின்ற கட்சியின் பிரதிநிதிகள் பின்பற்ற வேண்டியது அவசியமாகும்.

 இலங்கையில் காலாகாலமாக மூவின மக்களும் இனம், மதம், மொழிகளுக்கு அப்பால் ஒற்றுமையாக, பரஸ்பர புரிந்துணர்வுடனேயே வாழ்ந்து வருகின்றார்கள். 

இந்நிலையில் தமிழ் மக்களும் எந்த அரசியல் கட்சிக்கும் எதிரானவர்கள் அல்ல மாறாக மறுக்கப்பட்ட, மறுக்கப்படுகின்ற அவர்களுக்கான உரிமைகளைக் கோரியே அரசுடன் போராடி வருகின்றார்கள் என்பதை அரசு புரிந்துகொள்ள வேண்டும். காலாகாலமாக தீர்வு என்ற விடையத்தில் தமிழ் மக்கள் அரசினால் ஏமாற்றப்பட்டுக் கொண்டு வருகின்றார்கள். 

ஒருசில கடும்போக்குவாதிகளினால் சிங்கள மக்கள் குழப்பமடையச் செய்யப்பட்டு வருகின்றமையினால் இந்நிலை தொடர்ந்து வருகின்றது. 

கடந்த காலங்களில் தமிழ் மக்கள் எதிர்நோக்கிய சொல்ல முடியாத இழப்புக்களையும், துயரங்களையும் மனிதாபிமானமுள்ள ஒவ்வொரு சிங்கள மக்களும் உணர்ந்து கொள்வார்கள். 

இதனால் தமிழ் மக்கள் தங்களை மீட்டெடுப்பதற்கு அவர்களுக்கான அதிகாரங்களுடன்கூடிய தீர்வு அவசியம் என்பதையும் அவர்கள் நன்கு அறிவார்கள் எனவே தமிழ் மக்களுக்கான தீர்வை பெற்றுக் கொடுக்க சிங்கள மக்கள் அரசுக்கு ஆணையிட வேண்டும். எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -